நம்பிக்கையே வாழ்க்கை!

பிரச்னை இல்லாத மனிதன், பிரச்னை இல்லாத சமூகம், பிரச்னை இல்லாத நாடு, பிரச்னை இல்லாத கண்டம், பிரச்னை இல்லாத உலகம் என்று எதுவுமே இல்லை என்பதை இந்த கரோனா நோய்த் தொற்று படம் போட்டு வெளிச்சம்
நம்பிக்கையே வாழ்க்கை!

பிரச்னை இல்லாத மனிதன், பிரச்னை இல்லாத சமூகம், பிரச்னை இல்லாத நாடு, பிரச்னை இல்லாத கண்டம், பிரச்னை இல்லாத உலகம் என்று எதுவுமே இல்லை என்பதை இந்த கரோனா நோய்த் தொற்று படம் போட்டு வெளிச்சம் காட்டியுள்ளது.

அவரவர்களின் தகுதிக்கேற்ப அனைவருக்குமே பிரச்னை. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் முதல் பொருளாதாரத்தில் கொடிகட்டி பறக்கும் நாடுகள் என எல்லா நாடுகளிலுமே பிரச்னை.

உணவுக்கே சிரமப்பட்டவர்கள், வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டவர்கள், ஊதியம் கிடைக்காதவர்கள், பணமிருந்தும், வாகன வசதி இருந்தும் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியாதவர்கள், காசிருந்தும், விரும்பிய உணவைச் சாப்பிட முடியாதவர்கள், வெளியூரில் சிக்கி வீடு திரும்ப முடியாதவர்கள், மருத்துவ வசதி கிடைக்கப் பெறாதவர்கள் என எத்தனை, எத்தனையோ பிரச்னைகள் உலகம் முழுவதுமே உலா வரும் நேரம் இது. எந்த ஒரு பிரச்னையும் இல்லாத மனிதனே இல்லை எனலாம்.

காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் என எதைப் பார்த்தாலும், கரோனா பாதிப்புகள் குறித்த தகவல்கள். இப்படி கரோனா என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத செய்தியாக உருவெடுத்து விட்டது.

இப்படி பிரச்னை குறித்து சிந்தித்து, சிந்தித்து பலரும் மன அழுத்தம் என்ற நிலைக்குள் நுழைய முற்படும் தருணம் இது. இது போதாதென்று சமூக ஊடகங்கள் வழியாக நாள்தோறும் கரோனா குறித்து பரப்பப்பட்ட வதந்திகளும் பெரும்பாலான மக்களின் மனதைப் பாதித்ததுடன், அவர்களுக்கு எதிர்மறையான சிந்தனையையும் உருவாக்கி விட்டது எனலாம்.

நேர்மறை சிந்தனை மிக பெரிய சக்தி வாய்ந்தது. நேர்மறை எண்ணத்துடன் கடினமாக உழைத்தால் வெற்றி பெற்று விட முடியும் என்பதை பெரும் தொழிலதிபர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அப்படி நேர்மறை சிந்தனைகள் இன்றி வெறும் எதிர்மறை சிந்தனை மட்டுமே இருந்தால், எதிர்காலத் திட்டமிடல் இல்லாமல் போய்விடும் அல்லவா?

"அவர் மன தைரியமான ஆளுப்பா' என்ற வார்த்தையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். அத்தகைய மன தைரியம் இருப்பவர்கள் எல்லாவித பிரச்னைகளையும் எளிதாகக் கையாண்டு மீண்டு வந்துவிடுவார்கள். ஆனால், என்ன அதற்கு பயிற்சியும் வேண்டும். முயற்சியும் வேண்டும். அவ்வளவே.

இது எல்லாருக்கும் பொதுவான ஒன்றுதான். பொது முடக்கத்தால், வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் சமூக ஊடகங்கள் பரப்பிய தவறான தகவல்களால் மன தைரியத்தை தொலைத்திருந்தவர்கள், இந்த கரோனாவை நாம் வீழ்த்தி விட முடியும் என்ற மனதைரியத்துடன், தன்னம்பிக்கையுடன், எழ வேண்டும். அப்பொழுது மனம் உற்சாகம் அடையும். மனம் உற்சாகமடைந்து விட்டால், புதிய , புதிய நேர்மறை சிந்தனைகள் மனதில் நிரம்பி வழியும். அந்த நேரத்தில், மூளையும் நமக்கு கைகொடுக்கும்.

மனமும், மூளையும் சேர்ந்து விட்டால், சோர்ந்து போக வேண்டிய நிலையே உருவாகாது. அந்த உற்சாக நிலையில், நமது இலக்கு என்ன என்பதை எளிதாக யோசிக்க முடியும். இலக்கை துல்லியமாகத் தெரிந்து கொண்டால், அடுத்து அந்த இலக்கை அடைய செய்ய வேண்டிய வழிமுறைகளை மனமும், மூளையும் சேர்ந்தே கண்டறியத் தொடங்கும்.

பாசிட்டிவ் எண்ணங்கள் நமக்கு தூண்டுகோலாக மட்டுமே அமையும், அதைத் தாண்டி நமது பயிற்சியுடன் கூடிய முயற்சிதான் செம்மைப்படுத்தி நம்மை உயர்த்தும்.

பொது முடக்க காலத்தில், பெரும்பாலானோர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கு காரணம் நோய் குறித்த தேவையற்ற பயமும், நம்மால் வேலைக்கு போக முடியவில்லையே என்ற வருத்தமும்தான்.

பயமும், வருத்தமும் நமது நல்ல முடிவுகளைக் கூட மாற்றியமைத்து விடும். உணர்ச்சிகரமாக எடுக்கும் எந்த முடிவும் நல்ல இலக்கை எட்ட உதவாது.

இது போன்ற நிகழ்வுகள் எவ்வளவோ இதற்கு முன் நடந்திருக்கின்றன. அந்தந்த கால கட்டத்தில் வசித்த மனிதன் அவற்றை எல்லாம் தாண்டி மகத்தான வெற்றியை அடைந்துள்ளான் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை. கரோனாவை வெல்வோம் என்ற மனதைரியத்துடன், நம்பிக்கையுடன் இதையும் நாம் கடந்து செல்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com