தொடர் தேடல்... ஒளி கொடுக்கும்!: மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 69

"நாம் தேடாத ஒன்று எதிர்பாராதசில சமயங்களில் கண்டுபிடிக்கப்படும்'
தொடர் தேடல்... ஒளி கொடுக்கும்!: மிச்சமெல்லாம்  உச்சம் தொடு - 69

"நாம் தேடாத ஒன்று எதிர்பாராத
சில சமயங்களில் கண்டுபிடிக்கப்படும்'

- அலெக்சாண்டர் ஃப்ளெமிங்.

""செப்டம்பர் 28, 1928 அன்று விடியற்காலையில் நான் எழுந்தபோது, உலகின் முதல் ஆன்டிபயாடிக் அல்லது பாக்டீரியா கிருமியைக் கொல்லும் மருந்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் நவீன மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று நான் நிச்சயமாகத் திட்டமிடவில்லை. ஆனால் அதைத்தான் நான் எதிர்பாராமல் செய்தேன்'' என்றார்

ஃபிளெமிங். 1923 - ஆம் ஆண்டில் லைசோசைம் என்ற நொதி கண்டுபிடிப்பு, 1928 - ஆம் ஆண்டில் பென்சிலியம் நோட்டாட்டம் என்ற பூஞ்சைகாளான் மூலம் உலகின் முதல் பரந்த அளவில் பயனுள்ள ஆண்டிபயாடிக் பென்சைல் பெனிசிலின் (பென்சிலின் ஜி) கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றவர் சர் அலெக்சாண்டர் ஃப்ளெமிங் (Sir Alexander Fleming). இவர் ஒரு ஸ்காட்டிஷ் உயிரியலாளர், மருத்துவர், நுண்ணுயிரியலாளர் மற்றும் மருந்தியல் நிபுணர் ஆவார். இதற்காக அவர் 1945 - ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை ஹோவர்ட் ஃப்ளோரி மற்றும் எர்ன்ஸ்டுடன் பகிர்ந்து கொண்டார்.

உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியின் ஆய்வகம் பெரும்பாலும் சுத்தமாக இருந்ததில்லை. 1927 வாக்கில், ஃப்ளெமிங் பாக்டீரியா ஸ்டேஃபிளோகோகியின் (Staphylococcaceae) பண்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆகஸ்ட் மாத விடுமுறையை தனது குடும்பத்துடன் கழித்துவிட்டு செப்டம்பர் 3, 1928 - இல், ஃப்ளெமிங் தனது ஆய்வகத்திற்கு வந்தார். விடுமுறைக்குச் செல்வதற்கு முன்பு, அவர் தனது அனைத்து ஸ்டேஃபிலோகோகியின் ஆய்வக பெட்ரி டிஸ் வளர்ப்பு தட்டுகளையும் தனது ஆய்வகத்தின் ஒரு மூலையில் ஒரு பெஞ்சில் அடுக்கி வைத்திருந்தார். திரும்பியதும், ஒரு பெட்ரிடிஸ்ஸில் மட்டும் ஒரு பூஞ்சை வளர்ந்து மாசுபட்டுள்ளதையும், பூஞ்சையைச் சுற்றியுள்ள ஸ்டேஃபிளோகோகி பாக்டீரியா காலனிகள் அழிக்கப்பட்டுவிட்டதையும் ஃப்ளெமிங் கவனித்தார். அதேசமயம் தொலைவில் உள்ள மற்ற ஸ்டேஃபிளோகோகி பாக்டீரியா காலனிகள் பாதிக்கப்படாமல் இருந்தது. அவர் அந்த பூஞ்சைக் காளான் பென்சிலியம் இனத்தைச் சேர்ந்தது என்று கண்டறிந்தார்.

பல உயிரினங்களில் பென்சிலினின் நேர்மறையான பாக்டீரியா எதிர்ப்பு விளைவை அவர் ஆராய்ந்தார், மேலும் பென்சிலின் ஸ்டேஃபிளோகோகி போன்ற பாக்டீரியாக்களையும், ஸ்கார்லட் காய்ச்சல், நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் டிப்தீரியாவை ஏற்படுத்தும் பல கிராம்}பாசிட்டிவ் நோய்க்கிருமிகளையும் பாதித்தது என்பதைக் கவனித்தார். ஆனால் கிராம்}எதிர்மறை பாக்டீரியாவால் உருவாகும் டைபாய்டு காய்ச்சல் அல்லது பாரா டைபாய்டு காய்ச்சலை பாதிக்கவில்லை என்பதை கண்டறிந்தார். இந்த பாக்டீரியம் கிராம்}எதிர்மறையானது என்றாலும், இது கோனோரியாவை ஏற்படுத்தும் நைசீரியா கோனோரோயாவையும் பாதித்தது.

ஃப்ளெமிங் தனது கண்டுபிடிப்பை 1929} ஆம் ஆண்டில், "பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் பேத்தாலஜி' - இல் வெளியிட்டார். ஆனால் அவரது கட்டுரைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது பாக்டீரியாவை திறம்பட கொல்ல மனித உடலில் (விவோவில்) பென்சிலின் நீண்ட காலம் நீடிக்காது என்பதையும், மேற்பரப்பு ஆன்டிசெப்டிக் மருந்தாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை உணர்ந்து அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் மருந்தாக பென்சிலின் உற்பத்தியைத் தொடங்கினார். 1944 } இல் டி}டே மூலம், நேச நாட்டுப் படைகளில் காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சையளிக்க போதுமான பென்சிலின் தயாரிக்கப்பட்டது.

பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பென்சிலின் மருந்தும் மற்றும் பிற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (Antibiotics) பரவலான பயன்பாடு இன்று மிகவும் பொதுவானது. நோயைத் தீர்க்கும் வல்லமையுடைய அருமருந்தாக பென்சிலின் இன்றும் இருக்கிறது. அதன் அறிமுகத்திலிருந்து, இன்று வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது. பென்சிலின் கண்டுபிடிப்பு, உலகளாவிய ஆன்டிபயாடிக் மற்றும் இயற்கை தாவரங்களின் மூலம் மருந்து கண்டுபிடிப்பு துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது, நவீன மருந்து கண்டுபிடிப்பின் செயல்முறையை முழுமையாக மாற்றியது; நவீன மருந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சியை மாற்றியது, மேலும் அதன் மருத்துவப் பயன்பாடு கிருமி தொற்று நோய்களுக்கான சிகிச்சையை முழுமையாக மாற்றியது.

கி.மு 1500 }க்கு முன்பே நோய்களுக்கான சிகிச்சையில் நம் முன்னோர்கள் பூஞ்சைக் காளானையும் மற்றும் நொதித்த பொருட்களையும் பயன்படுத்துவதை விவரிக்கும் பதிவுகள் வரலாற்றில் இருக்கின்றன. 3,000 ஆண்டுகளுக்கு முன்னர், சீனர்கள் நொதிக்கும் சோயாபீன் தயிரை தீக்காய கொதிப்பு மற்றும் பிற தோல் நோய்த் தொற்றுகளுக்குப் பயன்படுத்தினர்கள் என்கிறது வரலாறு. மண்பானையில் தோன்றிய பூஞ்சை காளான்கள் காயங்களுக்கு முதலுதவியாகப் பயன்படுத்தப்பட்டன. இவை இரண்டுமே சந்தேகத்திற்கு இடமின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொண்டிருந்திருக்கும் போல் தெரிகிறது. பாக்டீரியாவைக் கொல்வதற்கு பூஞ்சைக் காளானில் ஏதோ ஒரு பொருள் இருந்ததைக் கண்டுபிடித்து அதை உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் நோய் தீர்க்கும் நவீன மருந்தாக மாற்றி காண்பித்தது நவீன மருத்துவம் தான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதன்முறையாக, பாஸ்டர் நோய்க்கான கிருமிக் கோட்பாட்டை (Germ Theory of Disease) அறிமுகப்படுத்தினார். ஏனென்றால் நுண்ணுயிரிகளால் தான் நோய்கள் அதிகமாக ஏற்பட்டன. இந்த கிருமிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பின்னர் தான், மருந்தை உட்கொள்ளும் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காமல் நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகளை கொல்லக்கூடிய நவீன மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சியை தேடத் தொடங்கியது மருத்துவ உலகம்.

முதல் உலகப் போரின்போது, பெருமளவிலான மரணங்கள் போரினால் ஏற்பட்ட காயங்களால் நிகழவில்லை. ஆனால் காயமடைந்தவர்களின் மரணத்திற்கு காரணமான செப்டிசீமியா (இரத்த விஷம்) நோய்த் தொற்று தான் காரணமாக இருந்தது என்று வீரர்களின் பெருமளவிலான மரணங்களை ஃப்ளெமிங் கண்டார். காயங்களிலிருந்து நேரடியாக அல்ல, ஆனால் காயங்களில் நோய் தொற்று காரணமாக இறந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு சிகிச்சையளிக்க வியக்கத்தக்க வகையில் பென்சிலின் ஐரோப்பிய போர்க்களங்களில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. பென்சிலின் சிகிச்சை, பல வீரர்களை மரணத்திலிருந்து காப்பாற்றியது. பென்சிலின் கண்டுபிடிப்பதற்கு முன்பாக நடந்த முதலாம் உலகப் போரில் இறந்த ஆயிரக்கணக்கான வீரர்களில், பலர் தொற்றுநோயால் ஏற்பட்ட நிமோனியாவால் இறந்தனர். முதலாம் உலகப் போரின்போது, அமெரிக்க இராணுவத்தில் நிமோனியாவால் இறப்பு விகிதம் மொத்தம் 18% ஆகும். பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்டபின்பு இரண்டாம் உலகப் போரில், நோய் தொற்று நிமோனியா மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 1% க்கும் குறைந்தது.

பென்சிலின் கண்டுபிடிப்பிற்கு முன்னர், மிகவும் சிறிய காயங்கள், சிறிய காயங்கள் மற்றும் தொண்டை வலி மற்றும் வெனரல் நோய்கள் போன்ற நோய்களிலிருந்தும் கூட மரணம் ஏற்பட்டது. பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிமோனியா மற்றும் நோய் தொற்றால் ஏற்படும் இரத்த விஷம் தவிர, போரின் போது மருத்துவமனைகளில், ஸ்ட்ரெப் தொண்டை, ஸ்கார்லட் காய்ச்சல், டிப்தீரியா, சிபிலிஸ், கோனோரியா, மூளைக்காய்ச்சல், டான்சில்லிடிஸ், வாத காய்ச்சல் மற்றும் பல நோய்கள் நவீன பென்சிலின் மருந்து மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டு நோய் தீர்க்கப்பட்டு குணப்படுத்தப்பட்டார்கள்.

பென்சிலின் மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய தேடலைக் கொண்டு வந்ததுடன், மருந்து கண்டுபிடிப்பில் நவீன மருத்துவ ஆராய்ச்சி முறையை மையமாகக் கொண்டுவந்தது. இயற்கை மரங்கள், தாவரங்களில், மூலிகைகளில் இப்படி ஓர் ஆண்டிபயாடிக் சக்தி இருந்தால், இன்னும் இதுபோல பலவற்றைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது திண்ணம். பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) பாக்டீரியாவிலிருந்து பெறப்பட்டவை தான், குறிப்பாக ஆக்டினோமைசீட்கள். ஆயினும் கூட, பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான், இந்த மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அனைத்தும் கண்டுபிடிக்கும் வாய்ப்புக்கு அது வழி வகுத்துக் கொடுத்தது.

பென்சிலினின் மருந்தின் விளைவுகளை எதிர்த்து உயிர் வாழ பாக்டீரியா இறுதியில் மரபணு ரீதியாக மீண்டும் மீள்உருவாக்கம் செய்து இணைகிறது. 1952 } ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அனைத்து ஸ்டாப் நோய்த்தொற்றுகளில் மூன்றில் ஐந்தில் ஒரு பகுதியும் பென்சிலின் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக மாறியது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கட்டமைப்பை மாற்றுவதன் மூலமும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கலவையினாலும் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் வெற்றிகரமாக இருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பாக்டீரியா இன்னும் மரபணு ரீதியாக மீண்டும் தண்ணை தகவமைத்துக் கொண்டு மீண்டும் இணைந்து பல்கிப் பெருகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) தான் நவீன மருத்துவத்திற்கு வலிமையான அடையாளத்தை உருவாக்கின. தடுப்பூசிகள் } பெரியம்மை மற்றும் போலியோ போன்ற பல்வேறு கிருமிகளால் விளையும் நோய்களைத் தடுக்கும் முறை, நோய்களுக்கான சிகிச்சையல்ல. தடுப்பூசிகள் உண்மையில் மருந்துகள் அல்ல என்றாலும், அவை ஒரு வகையான தடுப்பு மருத்துவ சிகிச்சையாகும். ஹிப்போகிரட்டீஸின் காலத்திலிருந்தே, மருத்துவத்தின் நோக்கம் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதாகும்.

டாக்டர் எட்வர்ட் ஜென்னர் மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்க மருந்து பயன்படுத்த முடியுமா என்று நினைத்தார். மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுக்கு மாட்டம்மை (cowpox) வந்ததையும், ஆனால் அவர்களுக்கு பெரியம்மை (Smallpox) நோய் ஏன் வருவதில்லை என்பதை ஆராய்ந்தார் டாக்டர் எட்வர்ட் ஜென்னர். மாட்டம்மை வந்தவர்களுக்கு வந்த காய்ச்சல், பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர்களோடு நின்று போனது. ஆனால் பெரியம்மை தொற்றுநோயாக மாறியது, கடுமையானது. மேலும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களைக் கொன்றது பெரியம்மை. சில நேரங்களில், அது பல பண்டைய நாகரிகங்களை மொத்தமாக அழித்தொழித்திருக்கிறது. அவரது நோய்தடுப்பு மருந்து (Vaccine) கண்டுபிடிப்பு சோதனை உலகத்தின் வரலாறுகளை மாற்றியது. அவர் ஒரு மாட்டம்மை வந்த பால்கொடுக்கும் மாட்டின் பால்மடியில் வந்திருக்கும் கொப்புளங்களிலிருந்து சீழை எடுத்து வடிகட்டினார். அந்த வலு குறைக்கப்பட்ட சீழை, நல்ல ஆரோக்கியமாக இருக்கும் ஒரு விவசாயியின் மகனுக்கு சீழ் ஊசி போடச் செய்தார். அது இன்றைய நவீன மருத்துவத்தில் அனுமதிக்கப்பட்ட முறையல்ல என்றாலும், அன்று முதன் முதலாக இந்த முறையில் நேரடியாக சிறுவனுக்கு போடப்பட்டபின், அந்த சிறுவனுக்கு பெரியம்மை உருவாகவில்லை. இவ்வாறுதான் தடுப்பூசி (Vaccine) பிறந்தது.

உலகில் மிகவும் பயங்கரமான சர்வதேச தொற்றுநோயாகப் பெரியம்மை இருந்தது. 1980 } க்குள் தடுப்பூசி மூலம் அழிக்கப்பட்ட முதல் நோய் பெரியம்மை ஆகும் (இந்த பெரியம்மை நோய்க்கான கிருமிகளின் காலனி இன்னும் சில ஆய்வகங்களில் பராமரிக்கப்படுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்).

இந்த மனித குலத்தில் இருந்து அழிக்கப்பட இருக்கும் இரண்டாவது சர்வதேச தொற்றுநோய் போலியோவாகும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர், நீச்சல்குளத்திற்கு செல்ல முடியவில்லை. ஏனெனில் நீச்சல் குளத்தின் மூலம் போலியோ தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் அன்று இருந்தன. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதகுலத்தின் மீது நோயெதிர்ப்பு அறிவியலின் (immunology) தாக்கம் கணக்கிட முடியாதது. தடுப்பூசியின் முதல் கண்டுபிடிப்பு முதல், பல நோய்களைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. தட்டம்மை, ரூபெல்லா, டிப்தீரியா, மம்ப்ஸ், போலியோ, மூளைக்காய்ச்சல், ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி, இன்ஃப்ளூயன்ஸô, ரேபிஸ், மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெட்டனஸ் போன்ற பல நோய்களைத் தடுப்பதற்காக தடுப்பூசிகளை நவீன மருத்துவம்தான் உருவாக்கியது. நோய்க் கிருமியும், 2 உலகப் போர்களும் தான் நவீன மருத்துவத்தை உலக அளவில் பிரபலப்படுத்தியது. நோயைக் குணமாக்கும் நவீன மருந்துவத்தில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் ஒரு செல் உயிரியான பாக்டீரியா மூலம் ஏற்படும் கிருமி தொற்றையும், ஆன்டி வைரல் மருந்துகள் உயிரற்ற DNA & RNA வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படுவோரையும் குணப்படுத்துகிறது. வைரஸ்களுக்கு வேக்சின் (Vaccine) கண்டுபிடிப்பு நோயை தடுப்பில் நவீன மருத்துவத்தின் சாதனையாக இருக்கிறது. தொடர் தேடல் தான் வியாதி என்ற இருளை நீக்கி அரோக்கியம் என்ற ஒளியை கொடுக்கிறது.

எல்லோருடைய தலைவலியும் வேறு. தலைவலி தலையின் பின்புறத்தில், மேற்புறத்தில், மூக்கின் அடிப்பகுதியில், தலையின் இடது மேல், வலது மேல் போன்றவற்றில் தொடங்கலாம். வலியின் வகை மற்றும் அளவில் ஒவ்வொரு தலைவலியும் வித்தியாசமாக இருக்கலாம். அது ஒரு கட்டத்தில் கூர்மையாக இருக்கலாம், ஏதோ ஒரு பகுதி முழுவதும் பரவுகிறது, ஒரு பகுதி/திசையில் கதிர்வீச்சு, தொடர்ச்சியான நாடித்துடிப்பு வகைகளுடன் இடைவிடாமல் இருக்கலாம்.

ஐந்து நபர்களின் தலைவலி, ஐந்து வித்தியாசமான குணாதிசயங்களாக இருக்கலாம். அவர்களில் யாரும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. இது வெவ்வேறு காரணங்களுக்காக உருவாகியிருக்கலாம். எடுத்துக்காட்டாக, உயர் இரத்த அழுத்தம், வயிற்று கோளாறு, மலச்சிக்கல், மன அழுத்தம், தொற்று, நீரிழப்பு, காற்று/ ஒலி மாசுபாடு, லேப்டாப் கணினி போன்ற குறுகிய தூரமாக பிரகாசமான ஒளியை வெளிப்படுத்துதல், சூடான வெயிலின் தாக்கம், நீட்டிக்கப்பட்ட வேலை, இரவு நேர தூக்கம், சில பாதுகாக்கப்பட்ட உணவு, தூக்கக் கோளாறு மற்றும் பல. எனவே, ஒவ்வொரு தலைவலிக்கும், அதன் வகை மற்றும் அதன் மூலத்தைப் பொறுத்து தனித்தனி தீர்வு தேவை. நோய்க்கான முழுமையான தீர்வு மற்றும் நோய் நிலையின் மூலத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, நோயின் அறிகுறிகளை அடக்குவது மட்டுமல்ல. நோய் குணமாக வேண்டுமா, நோயின் அறிகுறி குணமாக வேண்டுமா? நமது ஆரோக்கியத்திற்கு எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும். தொடர்ந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, இலட்சியங்களை பகிர்ந்து கொள்ள தொடர்பு vponraj@live.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com