ரூபாய் நோட்டு...  தூய்மையாக்கும் கருவிகள்!

கரோனா வைரஸ் உலகைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து நமது அன்றாட வாழ்க்கையே மாறிவிட்டது.
ரூபாய் நோட்டு...  தூய்மையாக்கும் கருவிகள்!


கரோனா வைரஸ் உலகைத் தாக்கத் தொடங்கியதிலிருந்து நமது அன்றாட வாழ்க்கையே மாறிவிட்டது. வைரஸ் நம்மைப் பற்றிக் கொள்ளாமல் இருக்க கைகளை அடிக்கடி கழுவிக் கொள்கிறோம். காய்களை, பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்துக் கழுவுவது முதல் அவரவருக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் தூய்மைப்படுத்துகிறோம். மளிகைக் கடையில் இருந்து வாங்கி வந்த பொருள்கள், பால் பாக்கெட்டுகள் எல்லாவற்றையும் கழுவி கரோனா வைரûஸ விரட்டப் பார்க்கிறோம்.

ஆனால் பலரின் கைகளில் மாறி மாறி வந்திருக்கும் ரூபாய் நோட்டுகளை, ஒருவித உறுத்தலுடன் தொடுகிறோம். சட்டைப் பைகளில் வைக்கிறோம். ரூபாய் நோட்டுகளைக் கழுவவோ, சானிட்டைஸரில் முக்கி எடுக்கவோ முடியாது என்பதால், அப்படியே அவற்றைப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் நாம் அடிக்கடி பயன்படுத்துகிற செல்பேசி, ஐ பேட், லேப் டாப், கணினி, வங்கி செக் புக்குகள், காசோலைகள், பாஸ்புக் போன்றவற்றை எல்லாம் நாம் தூய்மைப்படுத்த நினைத்தாலும் தூய்மைப்படுத்த முடிவதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் "இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின்' (DRDO) ஹைதராபாத் ஆராய்ச்சிக்கூடமான ஆர்சிஐ ஒரு தானியங்கி புற ஊதாக் கதிர் (UVC) கலனை உருவாக்கியுள்ளது. புற ஊதாக் கதிர்கள் கரோனா வைரஸ் உள்ளிட்ட எல்லாவிதமான வைரஸ்களையும், பாக்டீரியாக்களையும் அழித்துவிடும்.

இந்த கலனை இயக்குவதற்கு யாரும் தேவையில்லை. தூய்மைப்படுத்த வேண்டிய செல்போன், லேப்டாப், பாஸ்புக் போன்ற பொருள்களை உள்ளே வைக்கும்போதோ, அவை தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு வெளியே எடுக்கும்போதோ இந்த கலனை யாரும் திறக்கவோ, மூடவோ தேவையில்லை. தூய்மைப்படுத்த வேண்டிய பொருள்களை அருகில் கொண்டு செல்லும்போதே, இந்த கலனில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களின் மூலம் தெரிந்து கொண்டு செயல்படும். தூய்மைப்படுத்தும் பணி நடந்து முடிந்ததும் தானாகவே இந்த தூய்மைப்படுத்தும் கலன் நின்றுவிடும்.

ஆனால் ரூபாய் நோட்டுகளைத் தூய்மைப்படுத்துவது இந்த தானியங்கி முறையில் சிரமமானது. ஏனென்றால் ஒவ்வொரு ரூபாய் நோட்டிலும் வைரஸ் தொற்று இருக்கக் கூடும். அவற்றைத் தனித்தனியாக எடுத்து இந்த கலனுக்குள் வைத்து, தூய்மைப்படுத்தி எடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். நிறைய நேரம் பிடிக்கும்.

ஒருவர் இந்த கலனுக்கு அருகே சென்று ரூபாய் நோட்டைத் தனித்தனியாக உள்ளே வைக்க வேண்டும். புற ஊதாக் கதிர்களின் மூலம் தூய்மைப்படுத்தும் பணியை இந்த கலன் செய்வதால் மனிதர்கள் அதன் அருகே சென்றால் மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ரூபாய் நோட்டுகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் இவர்கள் ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். ரூபாய் நோட்டுகளை கட்டாக இல்லாமல் பிரித்து இந்தக் கலனுக்குள் வைத்தால் போதும். அதுவே ஒவ்வொரு நோட்டாகத் தனியாகப் பிரித்து, தூய்மைப்படுத்திவிடும்.

ஐஐடி - மும்பையைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று, இதேபோன்று ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. இந்த கல்விநிறுவனத்தின் தொழிற்துறை வடிவமைப்பு மையம் இதை உருவாக்கியுள்ளது.

கரோனா ஊரடங்கு காலத்தில் இந்தக் கருவியை உருவாக்க ஏற்கெனவே உள்ள பொருள்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக வீடுகளில் பயன்படுத்தக் கூடிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் இந்தக் கருவி செய்யப் பயன்பட்டிருக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா மாநிலம் குருகிராம் நகரைச் சேர்ந்த மாணவர்கள் அனுத் மிஸ்ரா, அவ்னித் மிஸ்ரா, கஸ்துப் பரத்வாஜ் ஆகிய 3 மாணவர்கள் இதே புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளைத் தூய்மைப்படுத்தும் மூன்றுவிதமான கருவிகளை உருவாக்கியிருந்தார்கள். இதற்காக 2017 ஆம் ஆண்டின் IGNITE விருதையும் அவர்கள் பெற்றிருந்தனர்.

அவர்கள் உருவாக்கிய ஒரு கருவி ஏடிஎம் இல் இருந்து எடுக்கும் பணத்தைத் தூய்மைப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்னொரு கருவி எடிஎம் இல் டெபாசிட் செய்யும் பணத்தைத் தூய்மைப்படுத்துகிறது. இந்த ஏடிஎம் இயந்திரத்துக்குத் தொடர்பில்லாத வகையில் எந்தப் பணத்தையும் தூய்மைப்படுத்தும் பணியை இன்னொரு கருவி செய்கிறது.

கரோனா தொற்று ஏற்பட்ட இந்தக் காலத்தில் இந்தக் கருவிகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

ஏனென்றால், பணம் எடுப்பவர்கள், போடுபவர்கள் என மக்கள் அதிகம் புழங்கும் இந்தப் பகுதியில் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com