முந்தி இருப்பச் செயல் - 22: தகராறு கடக்கும் திறன் - 4

இம்மண்ணுலகின் மீது ஏராளமான தகராறுகளோடும், தற்காப்புத் தேவைகளோடும், தண்ணீரோடும் வாழும் நாமனைவரும் தவறாது பெற்றிருக்க வேண்டிய மூன்று முக்கியமான திறமைகள் இவைதான்:
முந்தி இருப்பச் செயல் - 22: தகராறு கடக்கும் திறன் - 4

இம்மண்ணுலகின் மீது ஏராளமான தகராறுகளோடும், தற்காப்புத் தேவைகளோடும், தண்ணீரோடும் வாழும் நாமனைவரும் தவறாது பெற்றிருக்க வேண்டிய மூன்று முக்கியமான திறமைகள் இவைதான்: தகராறுகளைக் கடந்து செல்லல், முதலுதவிச் சிகிச்சை அறிந்திருத்தல், நீச்சல் கலை தெரிந்திருத்தல். ஆனால் இவை மூன்றையுமே நம் இளைய தலைமுறைகளுக்கு நாம் பயிற்றுவிப்பதில்லை.


சண்டை சச்சரவுகளே இல்லாத சொர்க்கலோக அமைதி சாசுவதமானதல்ல. வன்முறை வெறிபிடித்து அடித்து உதைத்து, இரத்தம் சொட்டச் சொட்ட, கொன்றொழிப்பது மனித இயல்பல்ல. இவ்விரு துருவ நிலைகளையும் நிராகரித்து, எதிர்த்தரப்பு கருத்துகளை ஆழமாகக் கேட்டு, இனிய சொற்களோடு ஒரு பரிவான கலந்துரையாடல் நடத்தி, எதிர்மறை உணர்வுகளை வெளிக்கொணர்ந்து, யாரும் வேதனைப்படாத வண்ணம், எல்லாரும் நிறைவடையும் விதத்தில் சண்டை செய்வதே சிறந்தது.

அழிவு சக்தியாக இருக்கும் ஒரு தகராறை ஆக்க சக்தி மிக்கதாக மாற்றுவதும், வன்முறைகளிலிருந்து அதனை வழிமாற்றிச் செல்வதும், மனித மற்றும் சமூக மேம்பாடு நோக்கி அதனை இட்டுச் செல்வதும் நம் நோக்கங்களாக இருக்க வேண்டும். இதற்கான முக்கிய கருவி, கருத்துப் பரிமாற்றம்தான்.

ஒரு தகராறைக் கடப்பதற்கு முன், அதனை மாற்றியமைக்க வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள் சிக்கியிருக்கும் பிரச்னையைப் பிடுங்கி வெளியே எடுத்து, ஒரு புதிய சட்டகத்துக்குள் நிறுவ வேண்டும்.

தகராறை மாற்றியமைத்தல் என்பது தகராறுச் சூழலை மாற்றியமைப்பதாகும்.
அதாவது ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்கி, ஒரு புதுத் தோற்றத்தினை எழச்செய்வது. அப்போது இதுவரை ஒவ்வாதிருந்த சூழல் ஒத்துக்கொள்ளத் தக்கதாய் மாறுகிறது. தகராறு கட்சிகள் சந்தேகம், கோபம், வெறுப்பு கலந்த ஒரு குறிப்பிட்ட பாத்தியில் நட்டு வளர்த்திருக்கும் தகராறுச் செடியைப் பிடுங்கி, மேம்பட்ட பண்படுத்தப்பட்ட ஒரு புதிய நிலத்தில் நடுவது போன்றது இது.

ஒரு தகராறில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொண்டிருக்கும் கட்சிகள் அனைவரையும், அவர்களின் இலக்குகள் அனைத்தையும் தெரிந்துகொண்டு, அந்தத் தகராறின் பரந்துபட்ட நிலையை உணர்ந்து, அந்த இலக்குகளைப் படைப்பாற்றலுடன் மாற்றியமைத்து, கட்சிகள் அனைவருக்கும் ஏற்புடைய விதத்தில் தீர்வு செய்வதே தகராறு மாற்றியமைத்தலின் நோக்கம்.

இதனைச் செய்வதற்கு குறிப்பிட்ட தகராறின் ஆழத்தையும், அகலத்தையும் அதிகரிக்க வேண்டும். அப்படிச் செய்வது என்பது அந்தத் தகராறில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்துக் கட்சிகளையும், இலக்குகளையும் இணைத்துக் கொள்வது ஆகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கணவன்-மனைவி தகராறுக்குப் பின்னால், மாமியார், நாத்தனார் என்று பலரும், பல பிணக்குகளும் மறைந்து கிடக்கின்றன. அதேபோல சமூக-அரசியல்-பொருளாதாரத் தகராறுகள், சுற்றுச் சூழல் பிரச்னைகள் போன்றவற்றில் எண்ணற்ற கட்சிகளும், சிக்கல்களும் இணைந்திருக்கின்றன. இவை அனைத்தையுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, மேல்மட்டத் தகராறை மட்டும் பார்க் காமல், அதன் அடி ஆழத்துக்குச் சென்று பிரச்னையின் வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அடிப்படைத் தகராறுகளைக் கவனமாக அலசி ஆராய வேண்டும்.

அப்படி கூர்மையாகப் பார்த்தால்தான், மேல்மட்டத்தில் கொரில்லா படைத் தாக்குதலாகத் தெரியும் ஒரு பிரச்னையின் அடி ஆழத்தில் உறைந்திருக்கும் வேற்றுப்படுத்துதல், அடக்கியாளுதல், வறுமையில் வாடுதல் போன்ற உண்மைப் பிரச்னைகள் அனைத்தும் உலகுக்குத் தெரிய வரும்.

வேர்களோடு பிடுங்கி நடப்படும் செடி மட்டுமே புத்துயிர் பெறுவது போல, முழுப் பரிமாணங்களுடன் புரிந்து கொள்ளப்படும் தகறாரைத்தான் மாற்றியமைக்க முடியும்; வெற்றிகரமாகக் கடந்து செல்லவும் முடியும்.

முதலாவதாக, நான் - நீ என்கிற இருதுருவ நிலையைக் கைவிட்டுவிட்டு, நாம் அனைவரும் எதிர்நோக்கிநிற்கும் பிரச்னை என்கிற மாற்று நிலையில் தகராறுகளைப் பார்க்கப் பழகவேண்டும்.

மகாத்மா காந்தி, இந்தியர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் என்று சிந்திக்கவே இல்லை. மாறாக, நாம் - நம் அனைவரையும் பிடித்தாட்டும் காலனியாதிக்க முறைஎன்றுதான் பார்த்தார்.

இரண்டாவதாக, நமது தன்னலப் பார்வை, நாம் பயன்படுத்தும் மொழி போன்றவற்றை மறுகட்டமைப்புச் செய்தாக வேண்டும். எடுத்துக்காட்டாக, மனித - மிருகத் தகராறுகளை எடுத்துக் கொள்வோம். ஒரு யானை ரயிலில் அடிபட்டுச் சாகும்போது, ஒரு கரடி ஊருக்குள் நுழையும்போது, ஒரு சிறுத்தை வயலுக்குள் புகும்போது, நாம் சிந்திக்கும் விதத்தை, பயன்படுத்தும் மொழியை, கைக்கொள்ளும் அணுகுமுறைகளைக் கவனியுங்கள். நாம் ஒரு மனிதனாக, மனிதாதிக்கச் சிந்தனையோடுதான் அதனைப் பார்க்கிறோம்.

ஓர் அண்மை பத்திரிக்கைச் செய்தியை அப்படியே தருகிறேன்: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தையொட்டி கொழுந்து மாமலை வனப்பகுதிக்கு அருகே கரிசல்பட்டி கிராமத்தில் விவசாயி மன்னார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது.

கடந்த ஒரு மாதமாக இத்தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்து மா, பலா, சப்போட்டா ஆகிய மரங்களின் மகசூலைச் சேதப்படுத்தி வருவதாக திருநெல்வேலியில் உள்ள களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநரிடம் மன்னார் புகார் தெரிவித்தார்.

பின்னர் நடந்தவற்றைத்தான் நீங்கள் யூகித்துக் கொள்ள முடியுமே?

மலையடிவாரத்தில், வனப்பகுதிக்கு அருகே உங்கள் தோட்டம் இருந்தால், அது உங்கள் குற்றமா அல்லது கரடியின் பிரச்னையா? தோட்டம், தனியார் சொத்து, மகசூல், சேதம் என்பதெல்லாம் கரடிகளுக்குக் கிடையாதே? திருநெல்வேலியில் உள்ள புலிகள் காப்பக கள இயக்குநர் உங்களுக்கு பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால் கரடிகளுக்கு யார் அதிகாரி, எது அதிகாரம்? கேடுகள் அனைத்தையும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் செய்பவர்கள் மனிதர்களாகிய நாம்தான்.

மூன்றாவதாக, ஓர் உண்மையான ஆத்மப் பரிசோதனையில் ஈடுபட்டு, உள்ளார்ந்த மாற்றங்களைக் கொணர்ந்து, எதிர்த்தரப்பின் இடத்திலிருந்து பிரச்னைகளைப் பார்க்க முயல்வோம். மேற்குறிப்பிட்ட மனித - மிருகத் தகராறில், ஒரு மனிதனாகச் சிந்திப்பதை விடுத்து, ஒரு விலங்காகச் சிந்தித்துப் பாருங்கள்.

வேட்டையாடுவதைப் பற்றி வேட்டைக்காரர்கள் எழுதுவதைத்தான் நாம் படித்திருக்கிறோம். வேட்டையாடப்படும் விலங்குகள், பறவைகள் எப்படி எழுதுவார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். பாரதியாரின் குருவிப் பாட்டு அருமையாக குத்திக் காட்டுகிறது:

கேளடா மானிடவா - எம்மில்
கீழோர் மேலோர் இல்லை
களவுகள் கொலைகளில்லை - பெருங்
காமுகர் சிறுமையில்லை
இளைத்தவர்க்கே வலியர் - துன்பம்
இழைத்துமே கொல்லவில்லை.

அப்படி எதிர்த்தரப்பின் பார்வையிலிருந்துப் பார்க்கும்போது, அவர்களின் நிலைப்பாட்டையும், இலக்கையும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

நான்காவதாக, மாற்றுக் கதையாடல்களும், மாளாக் கருத்துப் பரிமாற்றங்களும், தொலையா மாந்தநேயமும், தொய்வில்லா முயற்சிகளுமாகவே நாம் தொடர்ந்தாக வேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒரே மொழி பேசும், ஒரே இனத்தவரான வட கொரிய மக்களும், தென் கொரிய மக்களும் கீரியும் பாம்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சீனா வட கொரியாவை ஆதரிக்கிறது. ஜப்பான் தென் கொரியாவோடு இணக்கமாக இருக்கிறது. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் ஆகவே ஆகாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளும் இப்பிரச்னையில் மூக்கை நுழைக்கின்றன.

இந்தத் தகராறைக் கடந்து சென்று, அப்பிராந்திய மக்கள் வாழ்வில் அமைதியை ஏற்படுத்துவது எப்படி? ஒவ்வொரு "ஹீரோ-வில்லன்' இணையரையும் தனித்தனியாகக் கையாண்டு தடுமாறிப் போவதைவிட, அனைத்துக் கொரியர்களும், ஜப்பானியர்களும், சீனர்களுமாகச் சேர்ந்து ஒரு கிழக்கு ஆசியச் சமூகத்தை எப்படி நிறுவலாம், என்னென்ன பரந்துபட்ட உயர் இலக்குகளை அவர்கள் அமைத்துக்கொள்ளலாம் என்று சிந்திப்பது அந்தத் தகராறைக் கடந்து செல்லும் ஓர் உன்னத வழியாக இருக்கும்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com