முந்தி இருப்பச் செயல் - 24

ஒரு தகராறில் தொடர்புடைய கட்சிகள் நேருக்கு நேர் சந்தித்து, ஒருவரோடொருவர் நேரடியாகப் பேசி, தமது ஈடுபாடுகள் பற்றி விவாதித்து
முந்தி இருப்பச் செயல் - 24

ஒரு தகராறில் தொடர்புடைய கட்சிகள் நேருக்கு நேர் சந்தித்து, ஒருவரோடொருவர் நேரடியாகப் பேசி, தமது ஈடுபாடுகள் பற்றி விவாதித்து, தங்கள் இலக்குகளில் ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதைப் பேரப் பேச்சு (நெகோசியேஷன்) என்றழைக்கிறோம்.

தகராறு கட்சிகள் நேருக்கு நேர் பேச முடியாத நிலையில், மூன்றாவது நபர் ஒருவர் தகராறு கட்சிகளோடு தனித்தனியாகப் பேசி, அவர்களிடையே ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்பட்டு, தகராறுக்குத் தீர்வுகாண உதவுவதை சமரசப்பேச்சு (மீடியேஷன்) என்று குறிப்பிடுகிறோம்.

பேரப் பேச்சு என்பதை "நெறிப்படுத்தப்பட்ட கருத்துப் பரிமாற்றம்' என்றும், சமரசப்பேச்சு என்பதை, மூன்றாம் நபர் "உதவியோடு நடத்தப்படும் பேரப்பேச்சு' (அசிஸ்டட் நெகோசியேஷன் ) என்றும் கொள்ளலாம்.

சமரசப் பேச்சு பல்வேறு வழிகளில் நடத்தப்படுகிறது. தலையீடு செய்யும் "தகராறு வல்லுநர்' எந்த அதிகாரத்தையும் தன்வசம் வைத்துக் கொள்ளாது, தகராறு கட்சிகள் ஒருவரோடு ஒருவர் பேசி இணக்கமாகிக்கொள்ளத் தேவையான சூழ்நிலையையும், ஒழுங்குமுறைகளையும் உருவாக்கிக் கொடுத்து, இணக்கம் ஏற்படுத்துவதை "இணக்கமுறை' (கன்சிலேஷன்) என்கிறோம்.

அதேபோல, தகராறு கட்சிகள் தங்கள் தரப்பு வாத-பிரதிவாதங்களை நடுவர் மன்றத்தில் எடுத்து வைக்க, நடுவர் அவற்றை கவனமாக அலசி ஆராய்ந்து, உரிய தீர்ப்பு வழங்குவதை "நடுவர்மன்றத் தீர்வு' (ஆர்பிட்ரேஷன்) என்றழைக்கிறோம்.

அடுத்து, தகராறு கட்சிகள் தம் சார்பாக வாதாடுவதற்கு வழக்குரைஞர்களை நியமித்து, அவர்கள் மூலம் வழக்காடு மன்றத்தை அணுகி, தீர்வு பெறுவதை "வழக்காடுமன்றத் தீர்வு' (லிட்டிகேஷன்) என்கிறோம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாமேயொழிய, தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் புறந்தள்ள முடியாது.

மேற்குறிப்பிட்ட முறைகளுள், நேரடிப் பேச்சுவார்த்தையில் மட்டுமே தகராறு கட்சிகள் தங்கள் சுதந்திரத்தை, இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்தப் பேரப் பேச்சு என்பது "பேரம் பேசுவதை' அடிப்படையாகக் கொண்டது.

பொதுவாக, ஒரு பொருளுக்கான விலையை அல்லது நமக்குத் தேவையான ஏதாவதொன்றை, நம்முடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் பெறுவதற்காக நடத்தும் இழுபறிப் பேச்சு வார்த்தையை "பேரம் பேசுதல்' என்று குறிப்பிடுகிறோம்.

இரண்டு பேர் அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே ஒரு பிரச்னை குறித்து இணக்கமான முடிவெடுப்பதற்காக, உடன்பாடு காண்பதற்காக, தீர்வு செய்வதற்காக, நடத்தப்படும் கலந்துரையாடல்தான் பேரப் பேச்சு என்பது. இந்த பேரப் பேச்சுத் திறன் இன்றைய நவீன வாழ்வின் அடிப்படையாக அமைகிறது.

வாழ்க்கையில் நாம் பெறும் கல்வி வாய்ப்புகளோ, வேலை வாய்ப்புகளோ, சம்பள உயர்வோ, பணியிட மாற்றமோ, சிறு, பெரு வெற்றிகளோ, எதுவாக இருந்தாலும், நமது தகுதிகள் மற்றும் திறமைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எளிதில் கிடைக்கப் பெறுவன அல்ல; மாறாக, நம் பேரப் பேச்சுத் திறனை நேர்த்தியாகப் பயன்படுத்தி நாம் கடிதில் ஈட்டிக் கொள்வன. "மரத்தை நட்டவன் தண்ணீர் விடுவான்' அல்லது "எனக்கு விதித்தது எனக்குக் கிடைக்கும்'” என்றெல்லாம் வசனம் பேசிக்கொண்டு நீங்கள் வாளாவிருந்தால், போட்டியும், பொறாமையும் நிறைந்த இன்றைய உலகில் உங்களுக்கு எதுவுமே கிடைக்காது.

தகராறைப் பொறுத்தவரை, பேரப் பேச்சு என்பது அதற்கான தீர்வைத் தேடும், நெறிப்படுத்தப்பட்ட பேரம் எனக் கொள்ளலாம். தகராறு கட்சிகள் தீர்வுக்கான வாய்ப்புக்களைக் கண்டுணர்ந்து, தங்களுக்கு ஏற்புடைய ஓர் ஒப்பந்தத்தை எட்டிப் பிடிப்பதற்காக நடத்தப்படும் கருத்துப் பரிமாற்றம்தான் பேரப் பேச்சு.

""இரண்டு பேரோ அல்லது அதற்கு மேற்பட்டோரோ கலந்துரையாடும்போது, அவர்களுள் யாராவது ஒருவரின் மனதில் ஓர் இலக்கு இழையோடிக் கொண்டிருந்தால், அங்கே ஒரு பேரப் பேச்சு நடக்கிறது'' என்கிறார் பிராட் மெக்ரே எனும் அறிஞர்.

எதிர் தரப்பை நமது கோணத்திலிருந்து பார்க்க வைத்து, இருவரின் இலக்குகளையும் சற்றே மாற்றியமைத்து, அவர் செய்யத் தயங்கும் அல்லது மறுக்கும் ஒரு விடயத்தைச் செய்ய வைத்து, ஓர் உடன்பாட்டுக்கு வருவது என்பது அத்தனை எளிதான வேலையல்ல.

பேரப் பேச்சில் மதிப்பீடுகளை உருவாக்குவதும், மதிப்பீடுகளைக் கோருவதும் என இரண்டு விடயங்கள் நடக்கின்றன. ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி, தன்னுடைய தேவைகளை, ஈடுபாடுகளைத் தெளிவாக விவரித்து, அடுத்தவரின் தேவைகளை, ஈடுபாடுகளை கவனமாகக் கேட்டறிந்து, உள்வாங்கி, இவையனைத்தையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளைத் தேடும்போது, சில மதிப்பீடுகளை உருவாக்குகிறோம்.

தனது இலக்குகள், ஈடுபாடுகள் குறித்த தெளிவான புரிதலைப் பெறுதல், அதற்கு தொடர்புடைய தகவல்கள் அனைத்தையும் திரட்டுதல், தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக விவரித்தல், அதனை விளக்கிச் சொல்லுதல், தொடர்ந்து அதனில் உறுதியாக நிற்றல், எதிர்தரப்பைத் தாக்காமல், புண்படுத்தாமல் இருத்தல், தனது தேவைகளை, ஈடுபாடுகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றவை மதிப்பீடுகளை உருவாக்கும் மற்றும் கோரும் திறன்களாகக் கொள்ளப்படுகின்றன.

தகராறு கட்சிகள் பேரப் பேச்சில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களின் மனப்பக்குவம், முதிர்ச்சியின் அடிப்படையில், பிரச்னையை ஆபத்தானதாக மாறவிடாமல், பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று நினைக்கலாம். அல்லது அவர்களின் தகராறு இருவரையுமே பாதிக்கிற ஒரு தேக்க நிலையை எட்டியிருந்தால், அவர்கள் ஒரு பேரப் பேச்சில் ஈடுபடலாம். அல்லது பேரப் பேச்சைத் தவிர பிற தெரிவுகள் சாத்தியமற்றவையாக இருக்கும்போதும், அவர்கள் பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ள விரும்பலாம்.

பேரப் பேச்சுகளில் தயாரித்தல், கலந்துறவாடல், முடிவெடுத்தல் எனும் மூன்று படிநிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் பற்பல அம்சங்கள் புதைந்திருக்கின்றன.

தயாரித்தல் நிலையில் எதிர்தரப்பின் தேவைகள், ஈடுபாடுகள், விழுமியங்கள் போன்றவை பற்றிய தகவல்களைச் சேகரித்தல், பேரப் பேச்சு தவிர்த்த பிற தெரிவுகளை அலசி ஆராய்தல், எதிர்க்கட்சியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளல் போன்றவை அடங்கும்.

அதேபோல, கலந்துறவாடும் கட்டத்தில் நேரடிச் சந்திப்பு, தத்தம் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளல், தெரிவுகளை உருவாக்குதல், பரஸ்பரம் ஏற்புடைய தெரிவைத் தேர்வு செய்தல் ஆகிய அம்சங்கள் இடம் பெறும்.

முடிவெடுத்தல் நிலையில், ஒப்பந்தத்தை இறுதி செய்தல், அதனை அமல்படுத்த கால அட்டவணையைத் தயாரித்தல், தொடர் நடவடிக்கைகளை முடிவுசெய்தல் போன்றவை அமையும்.

நம் நாட்டில் இவற்றை மேற்கத்திய முறையாகவும், மிகவும் முறைப்படுத்தப்பட்ட, கட்டமைக்கப்பட்ட அமைப்பாகவும் பார்க்கிறோம். நம்முடைய பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலும் மூன்றாம் நபர்களை இணைத்துக் கொள்கிறோம், நிறையப் பேசுகிறோம், வாய்வழி உடன்பாடுகளை ஏற்றுக் கொள்கிறோம்.

நம்முடைய நிலைப்பாட்டில் பிடிவாதத்துடன் நின்று, உரக்கப் பேசுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும்தான் பேரப் பேச்சு என்று தவறாக நினைக்கிறோம். ஒரு போட்டி மனப்பான்மைக்குள் விழுந்து, வாய்த்தகராறில் ஈடுபடுகிறோமே தவிர, மறுதரப்பு சொல்வதைக் கவனமாகச் செவிமடுப்பதோ, கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதோ இல்லை.

எனவே பேரப் பேச்சு தோல்வியடைந்து, ஒரு தேக்க நிலையை அடைந்து விடுகிறது. நாம் வெற்றி- தோல்வி எனும் வழமையான துருவநிலைகளுக்குத் தள்ளப்படுகிறோம். இவ்வாறாக, பேரப் பேச்சு என்பது மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும் ஒரு மோசமான அனுபவமாக மாறுகிறது.

காலனியாதிக்க பிரிட்டிஷாரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மகாத்மா காந்தி இப்படி வேண்டுகோள் விடுத்தார்: ""சமமானவர்களுக்கு இடையேயான நேர்மையான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிகோலும்படி உங்களை மிகுந்த மரியாதையுடன் நான் அழைக்கிறேன்''.

இந்த வாக்கியத்தை கவனமாகப் படியுங்கள். சமத்துவம் பேணுவது, எதிராளிக்கு மதிப்பளிப்பது, அவரை ஒரு முயற்சி எடுக்க அனுமதிப்பது, அதே நேரத்தில் தன்னையும் உறுதியாக நிறுவிக் கொள்வது, தன்னுடைய நோக்கத்தில் குறிப்பாய் இருப்பது என ஓர் உன்னதமான பேரப் பேச்சின் பல்வேறு அம்சங்களை இந்த அழைப்பு அழகாக கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நுணுக்கமான அணுகுமுறைதான் வன்முறையைப் புறந்தள்ளிவிட்டு, மாந்த நேயத்தை ஏற்றெடுக்க மகாத்மா காந்திக்கு உதவியது.

(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com