காற்றைத் தூய்மையாக்கும் செடிக்  கருவி!

நாம் எல்லாம் கரோனா  தீநுண்மி வந்த பிறகுதான்,  முகக்கவசம் அணியத் தொடங்கினோம்.  
காற்றைத் தூய்மையாக்கும் செடிக்  கருவி!

நாம் எல்லாம் கரோனா தீநுண்மி வந்த பிறகுதான், முகக்கவசம் அணியத் தொடங்கினோம்.
ஆனால் தில்லியில் வாழ்பவர்களோ இரண்டாண்டுகளுக்கு முன்பே முகக்கவசம் அணியத் தொடங்கிவிட்டார்கள். மிக மோசமான காற்று மாசே அதற்குக் காரணம். நமது சுற்றுப்புறத்தில் இருக்க வேண்டிய மாசின் அளவை விட 20 மடங்கு தில்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
வாகனப் போக்குவரத்து அதிகமானது, நச்சுக் காற்றை வெளியேற்றும் தொழிற்சாலைகள் பெருகிவிட்டது, குப்பைகளை எரிப்பது, அப்புறம் விழாக் காலங்
களில் பட்டாசுகளைக் கொளுத்துவது என காற்று மாசடைவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. மாசடைந்த இந்தக் காற்றைச் சுவாசித்துத்தான் நாம் உயிர் வாழ வேண்டியிருக்கிறது.
இந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கு நீண்ட காலமாகும். அது தனிநபரால் செய்யக் கூடிய செயலும் அல்ல. எனவே ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் மாசிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஏதேனும் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு உதவும்விதமாக வந்திருப்பவைதான் காற்றில் உள்ள மாசுகளைத் தூய்மைப்படுத்தும் பல கருவிகள்.
ஆனால் இந்தக் கருவிகளிலும் பல பிரச்னைகள் இருந்தன. காற்றைத் தூய்மையாக்கும் சில கருவிகள் காற்றைத் தூய்மைப்படுத்திவிட்டு, ஓசோன் வாயுவை வெளித் தள்ளின.
இந்த ஓசோன் வாயு கலந்த காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இருமல், நெஞ்சுப் பகுதியில் இறுக்கம் ஏற்பட்டன.
இன்னும் சில காற்றுத் தூய்மைப்படுத்திகள் காற்றில் கலந்துள்ள கரிமக் கலவைகளை நீக்கும் திறன் அற்றவையாக இருந்தன.
காற்றைத் தூய்மையாக்கும் சில கருவிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மின்சாரத் தேவை, அதிகமான பராமரிப்புச் செலவு என சில காற்றைத் தூய்மைப்படுத்தும் கருவிகள் கையைக் கடித்தன.
இவற்றுக்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக இயற்கையான வழிமுறையில் காற்றைத் தூய்மையாக்கும் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் சஞ்ஜய் மெüர்யா. ஐஐடி - கான்பூரில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துவிட்டு, தில்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பையும் முடித்திருக்கிறார் இவர். இவர் கண்டுபிடித்து இருக்கும் கருவியின் பெயர் "யூப்ரீத் ஸ்மார்ட் நேச்சுரல் ஏர் ஃபியூரிஃபயர்'. தில்லி குருகிராமில் யூப்ரீத் என்ற நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்.
""செயற்கையான வழிமுறைகளின் மூலம் காற்றைத் தூய்மையாக்காமல், இயற்கையான வழிமுறைகளில் காற்றைத் தூய்மையாக்கினால் என்ன எனத் தோன்றியது. அதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியபோது, காற்றைத் தூய்மையாக்கும் தாவரங்களைப் பயன்படுத்தி சுற்றுப்புறத்திலுள்ள காற்றைத் தூய்மையாக்க முடிவு செய்தோம். இந்தத் தாவரங்கள் சுற்றுப்புறத்திலுள்ள காற்றை இலைகளின் மூலமாக உறிஞ்சி, தூய்மைப்படுத்தி வேர்களின் வழியாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.
ஆனால் இந்த தூய்மைப்படுத்தும் வேலை மிகவும் மெதுவாக நடக்கிறது. இதனால் மிகவும் குறைந்த காற்றே தூய்மையாக்கப்படுகிறது. வீட்டின் ஓர் அறையில் உள்ள மாசடைந்த காற்றைத் தூய்மையாக்க குறைந்தது 10 செடிகளையாவது அந்த அறையில் வைக்க வேண்டும். அப்போதுதான், சில மணி நேரங்களில் அவை அந்த அறையில் உள்ள காற்றைத் தூய்மையாக்கும். எனவே இந்த தூய்மையாக்கும் செயலை விரைவுபடுத்துவது, அதிகப்படுத்துவது ஆகியவைதான் நாங்கள் செய்ய வேண்டிய செயல் என்ற முடிவுக்கு வந்து அந்த ஆராய்ச்சியில் இறங்கினோம்'' என்கிறார் சஞ்சய் மெüர்யா.
அப்படி உருவான இந்த யூப்ரீத் கருவியில் காற்றைத் தூய்மையாக்கும் ஒரு செடி, ஸ்மார்ட் பூந்தொட்டி, நுண்ணுயிர்கள் நிறைந்த மண் ஆகியவை உள்ளன.
இந்த ஸ்மார்ட் பூந்தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறி, சுற்றுப்புறத்திலுள்ள காற்றை உறிஞ்சி செடியின் இலைகளில் விடுகிறது. இலைகளிலிருந்து அதன் வேர்களின் வழியாக வெளியேறும் தூய்மையாக்கப்பட்ட காற்றைப் பூந்தொட்டியில் இருந்து வெளியேற்றுகிறது. வேர்களில் இருந்து வெளியேறும் காற்று பூந்தொட்டியில் உள்ள நுண்ணுயிர்கள் கலந்த மண்ணின் வழியாக வெளியேறும்போது இன்னும் தூய்மையாகிறது.
""குருகிராமில் உள்ள நர்சரிகளிலேயே ஐந்து வகையான காற்றைத் தூய்மையாக்கும் தாவரங்கள் விற்கப்படுகின்றன. நாங்கள் அவற்றைச் சோதனை செய்து பார்த்தோம். அதில் ஸ்நேக் பிளான்ட் என்று அழைக்கப்படும் செடியையே இதற்காகத் தேர்வு செய்தோம். ஏனென்றால் இதைப் பராமரிப்பது மிகவும் எளிது. இந்தச் செடியின் மூலமாக 200 சதுர அடி பரப்பளவுள்ள அறையில் உள்ள கெட்ட காற்றை 15 நிமிடங்களில் தூய்மைப்படுத்திவிடலாம்'' என்கிறார் சஞ்ஜய்.
இந்தச் செடிக்கு அதிகத் தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. ஒரு மாதத்துக்கு வெறும் 150 மி.லி. தண்ணீர் ஊற்றினால் போதும்.
ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ் என்று அழைக்கப்படும் காற்றுத் தரக் குறியீட்டு எண் என்பது சுவாசிக்கத் தேவையான தூய்மையான காற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் அளவீடு ஆகும். காற்றில் இந்த அளவீடு 201 முதல் 300 வரை பதிவானால் அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும். இந்தக் குறீயிட்டு எண் 50-க்குள் இருக்க வேண்டும். இந்த யூப்ரீத் கருவி 20 நிமிடங்களில் 285 காற்றுத் தரக்குறியீட்டு எண் உள்ள காற்றை 30 காற்றுத் தரக் குறியீட்டு எண் உள்ள காற்றாக மாற்றிவிடுகிறது. அதுதான் இந்தக் கருவியின் சாதனை.
காற்றைத் தூய்மையாக்க மரங்களை வளர்க்க வேண்டும் என்பார்கள்.
இப்போது செடிகளை வளர்க்க வேண்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com