ஏலியன்கள் உள்ளனவா? - தொடரும் ஆய்வு

ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய சுவாரசியமான கதைகள் ஏராளம் உள்ளன.
ஏலியன்கள் உள்ளனவா? - தொடரும் ஆய்வு

ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய சுவாரசியமான கதைகள் ஏராளம் உள்ளன. அவை ஹாலிவுட்டில் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. பெரிய தலை, ஒடுங்கிய உடல், முட்டைக் கண்கள் என நமது கற்பனை உலகம் ஏலியன்களுக்கு ஒரு வடிவமும் கொடுத்திருக்கிறது. ஏலியன்கள் பறக்கும் தட்டுகளில் பூமிக்கு அவ்வப்போது வருகிறார்கள், பூமியில் வாழும் மனிதர்களைவிட அவர்கள் புத்திசாலிகள் என்பனபோன்ற புனைவுகளுக்கும் பஞ்சமில்லை.

அப்படி உண்மையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? செவ்வாய் கிரகத்துக்கும், நிலவுக்கும் செயற்கைக்கோள்களை அனுப்பி அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியகூறுகள் உள்ளனவா, முந்தைய காலத்தில் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கிறதா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில் மற்றொரு வகை, வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து ஏதாவது தகவல்தொடர்பு சமிக்ஞைகளை நாம் பெற முடியுமா என்பது. அதாவது ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி சூரிய மண்டலத்துக்கு வெளியே நட்சத்திர மண்டலங்களிலிருந்து தகவல்தொடர்பு சமிக்ஞைகளைப் பெறுவது.

வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தகவல்தொடர்பு சமிக்ஞைகளை டெக்னோசிக்னேச்சர் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். எஃப்எம் வானொலி ஒலிபரப்புகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற அதிர்வெண்கள்தான் இது.

ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற மிகப்பெரிய ஆராய்ச்சியை ரேடியோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். தெற்கு வான அரைக்கோளத்தில் காணப்படும் "வெலா' விண்மீன் மண்டலப் பகுதியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அசாதாரணமான பரந்த புலக் காட்சியைக் கொண்டுள்ள இத்தொலைநோக்கி மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, சுமார் ஒரு கோடி நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு தொடர்பான கட்டுரை ஆஸ்திரேலிய வானியல் சங்கத்தின் கடந்த வார வெளியீட்டில் வெளியாகியுள்ளது. ஒரு கோடி நட்சத்திரங்களை ஆய்வு செய்தும் எந்த ஒரு சமிக்ஞைகளையும் விஞ்ஞானிகளால் பெற முடியவில்லை.

""சூரிய மண்டலத்துக்கு வெளியே உயிர்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவது மிகப்பெரிய சவால். இப்போதைய ஆய்வில் வெலா விண்மீன் மண்டலத்தைச் சுற்றியுள்ள வான் பகுதியை 17 மணி நேரம் ஆய்வு செய்தோம். முன்பைவிட அகலமான, ஆழமான ஆய்வு இது. இந்த ஆய்வில் வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து எந்தவொரு சமிக்ஞையையும் நாங்கள் பெறவில்லை. இதில் ஆச்சரியமில்லை. பால்வெளியில் நாம் தனியாக இல்லை என்பதற்கு அடையாளமான சமிக்ஞைகள் எப்போது, எப்படி, எங்கேயிருந்து கிடைக்கும், அந்த சமிக்ஞைகள் எந்த மாதிரியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. பால்வெளியில் 10 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. இதுவரை நாம் ஆய்வு செய்திருப்பது வெறும் ஒரு கோடி நட்சத்திரங்களைத்தான். அதாவது 0.001 சதவீதமே ஆய்வு செய்துள்ளோம்'' என்கிறார் ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் முகமையைச் சேர்ந்த வானியற்பியல் வல்லுநர் செனோவா டிரம்ப்ளே.

""இப்போது நடத்தப்பட்ட ஆராய்ச்சி இதுவரை நடத்தப்பட்டவற்றைவிட 100 மடங்கு பெரியது. நீங்கள் எதிர்பார்க்காவிட்டாலும்கூட அடுத்த ஆய்வு எதையாவது மாற்றும் வாய்ப்பாக எப்போதும் இருக்கும். விஞ்ஞானம் ஆச்சரியமானது, எனவே நாம் தொடர்ந்து ஆய்வு செய்வது அவசியம்'' என்கிறார் மற்றொரு வானியற்பியல் வல்லுநரான டிங்கே.

இதே காலகட்டத்தில் எந்த வேற்றுக்கிரக விஞ்ஞானிகளாவது பூமியிலிருந்து ஏதாவது தகவல்தொடர்பு சமிக்ஞைகள் வராதா என ரேடியோ தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டிருக்கக் கூடாதா என்ன? ஏனெனில் விஞ்ஞானம் ஆச்சரியமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com