பழகலாம்... வாங்க!

பள்ளி, கல்லூரியிலோ அல்லது பணியிடத்திலோ நமக்கு விருப்பமான நபர்களுடன் இணைந்திருப்பது அளவில்லாத மகிழ்ச்சியை நமக்கு ஏற்படுத்தும்.
பழகலாம்... வாங்க!

பள்ளி, கல்லூரியிலோ அல்லது பணியிடத்திலோ நமக்கு விருப்பமான நபர்களுடன் இணைந்திருப்பது அளவில்லாத மகிழ்ச்சியை நமக்கு ஏற்படுத்தும். நமக்கு ஒத்த கருத்துடையவர்களிடம் நம்மால் வெகு இயல்பாகப் பழகி விட முடியும். நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நம் விருப்பத்துக்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுதல் இயல்பு.

நாம் விருப்பப்படுவதைப் போலவே மற்றவர்களும் அவர்களுடைய விருப்பப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயல்பே. ஆனால், அத்தகைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு நடைமுறை வாழ்வு அமையவில்லை எனில், நம் நெருங்கிய நண்பர்களிடமே கூட மனக்கசப்பு தோன்றிவிடும்.

இத்தகைய சூழலைச் சமாளிப்பதற்கு எளிமையான வழிமுறைகள் உள்ளன.
மற்ற நபர்களால் விரும்பப்படுவதற்கு நாம் முதலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய குணம் எப்போதும் புன்முறுவலுடன் காணப்படுவது. முக்கியமாக புதிய நபர்களைச் சந்திக்கும்போது புன்முறுவலை வெளிப்படுத்த வேண்டும். அத்தகைய சூழலில் அந்நபரின் கண்களைப் பார்த்தே பேச வேண்டும்.

அறிமுகம் இல்லாத நபர்களுடன் கைகுலுக்கும்போதே (கரோனா காலம் இதற்கு விதிவிலக்கு) நம்மைப் பற்றி நல்லெண்ணம் தோன்றும் வகையிலான நம்பிக்கையை அவர்களுக்குள் விதைக்க வேண்டும். அந்நபரைக் குறித்தும் அவரின் நடவடிக்கைகள் குறித்தும் பாராட்டிப் பேசலாம். மேலும், அண்மையில்
அவர் ஏதேனும் சாதனை புரிந்திருந்தால் அதைக் குறிப்பிட்டுப் பேசி அவரைப் பாராட்டிப் பேசலாம். இது அவர்களுடைய மனதில் நமக்கென்று தனி இடத்தை உருவாக்கும்.

பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மற்றவர்களிடம் பேசுவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் பேசுவதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். பிறரின் பிரச்னைகளுக்கு செவிசாய்க்கும் நபர்களுடன் அவர்கள் நெருக்கமாகிவிடுகின்றனர். அதைக் கருத்தில் கொண்டு, மற்றவர்களின் பிரச்னைகளைக் கவனமாகக் கேளுங்கள்.

நீங்கள் மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பேச வேண்டும். நீங்கள் பேசும்போது அவர்கள் உங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். வேறு எதையும் அவர்கள் யோசிக்கக் கூடாது. அவ்வப்போது நீங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்தை உதாரணத்துடன் விளக்குவது உங்கள் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.

சில நபர்களுடனான உரையாடல் வெகு சீக்கிரமாகவே முடிவடைந்து விட வாய்ப்புள்ளது. அந்த உரையாடலை மேலும் நீட்டிக்க அந்த நபருக்குப் பிடித்தமானவற்றைத் தெரிந்து கொண்டு அதைப் பற்றிப் பேச வேண்டும்.

உதாரணமாக, உங்களுடன் உரையாடும் நபர் கவிதை எழுதுவதிலோ அல்லது புகைப்படம் எடுப்பதிலோ ஆர்வம் உடையவராக இருப்பார். அந்தஆர்வம் அவருக்கு எப்படி என்று தொடங்கி அது தொடர்பான எல்லாவற்றையும் அவரிடம் கேட்டால், அவருக்கு விருப்பமான நபர்களில் ஒருவராக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

அதுபோன்று பிறரிடம் உரையாடும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவாக உள்ள விருப்பங்களைத் தெரிந்து கொள்வது மிகுந்த பலனளிக்கும். அவை குறித்து உங்களால் நீண்ட நேரம் உரையாட முடியும். அவருக்கும் எந்தவித சலிப்பும் ஏற்படாது. உங்களிருவருக்கும் இடையேயான நெருக்கமும் அதிகரிக்கும்.

அதேபோல், ஏற்கெனவே சந்தித்த நபர்களின் பெயர்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. மீண்டும் அதே நபர்களைச் சந்திக்கும்போது அவர்கள் குறித்த முக்கிய விவரங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பது, உங்கள் மீதான விருப்பத்தை அதிகரிக்கும். ஒரு முறை மட்டும் சந்தித்த நபர் நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் மறக்காமல் சொல்கிறாரே என்ற வியப்பு கலந்த உங்கள் மீதான நல்லெண்ணம் அவர்களிடம் உருவாகும்.

நீங்கள் சந்திக்கும் முக்கியமான நபர்களின் செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்டவற்றைக் குறித்து வைத்துக் கொள்வது மிகுந்த பலனை அளிக்கும். உங்கள் வீட்டில் நடைபெறும் முக்கிய விழாக்களுக்கு அவர்களை அழைப்பது நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

பிறரின் விருப்பத்துக்குரியவர்களாக நாம் மாறினால், பிறர் நமக்கு விருப்பமானவர்களாக மாறிவிடுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com