விளையாட்டு... விளையாட்டல்ல!

"உனக்கு விளையாட்டே பொழப்பா போச்சு, நல்லா படிச்சு, வேலைக்குப் போகணும். விளையாட்டுத்தனமா இருந்திடாதே. விளையாட்டு சோறு போடாது!' 
விளையாட்டு... விளையாட்டல்ல!

"உனக்கு விளையாட்டே பொழப்பா போச்சு, நல்லா படிச்சு, வேலைக்குப் போகணும். விளையாட்டுத்தனமா இருந்திடாதே. விளையாட்டு சோறு போடாது!' 

- விளையாட்டுத்திடல்களில், தெருக்களில் ஓடியாடி விளையாடி குதூகலமாக இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் பெற்றோர் இவ்வாறு கண்டிப்புடன் பேசுவதைக் கவனித்திருக்கலாம். ஆனால், விளையாட்டும் சோறு போடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

விளையாட்டுத் துறை, தொழில் வாய்ப்புகளையும், வேலை வாய்ப்புகளையும் அள்ளித் தரும் அட்சய பாத்திரமாக மாறி இருப்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. எந்த விளையாட்டாக இருந்தாலும், உலக அளவில் விளையாட்டுவீரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செல்வாக்கான வாழ்க்கையும் கிடைப்பதைக்  கவனிக்கத் தவறக் கூடாது. 

இந்தியாவிலும் கூட, திரைப்பட நட்சத்திரங்களைக் காட்டிலும் விளையாட்டு வீரர்களுக்கு புகழ் வெளிச்சமும், செல்வாக்கும் அதிகம். விஞ்ஞானிகள், ராணுவ வீரர்களுக்கு அடுத்தபடியாக விளையாட்டு வீரர்களைத்தான் சமுதாயம் வியப்புடன் பார்க்கிறது. அந்த அளவுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது. 

ரஞ்சி கோப்பை, இந்தியன் பிரீமியர் லீக் (கிரிக்கெட்), ஹாக்கி இந்தியா லீக் (ஹாக்கி), இந்தியன் பேட்மின்டன் லீக் (பூப்பந்தாட்டம்), புரோ கபடி (கபடியாட்டம்), சூப்பர் லீக் (கால்பந்து) போன்ற விளையாட்டுப் போட்டிகள், அரும்பும் விளையாட்டு வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகளைத் தேடித் தந்துள்ளன. இவை தேசிய அளவில் மட்டுமல்லாது, மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலும் பிரபலமாகி வருகின்றன. 

விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளும் தாராளமாக நிதி ஒதுக்கத் தொடங்கியுள்ளன. உலக அளவிலான போட்டிகளில் பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதை கெüரவமாகக் கருதும் நாடுகள், விளையாட்டுக்கு கோடிகளைக் கொட்டி இளைஞர்களை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. 

ஒரு காலத்தில் பொழுதுபோக்காக, கேளிக்கையாக இருந்த விளையாட்டு, இன்று பணம் காய்க்கும் மரமாக விரிந்து வளர்ந்துள்ளது. விளையாட்டுக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் இனி விளையாட்டு விளையாட்டான விஷயமல்ல என்பதை உணர்த்தியிருக்கிறது. 

பல்கலைக்கழகங்கள் கரோனா தீநுண்மித் தொற்று படிப்படியாகக் குறைந்ததும், பொதுமுடக்கம் முழுமையாக நீக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகளும், உடற்பயிற்சிகளும் மீண்டும் தொடங்கும். அப்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்புகள் குவிய வாய்ப்புள்ளது. அது விளையாட்டு சம்பந்தமான கல்வி வாய்ப்புகளின் எல்லைகளையும் விரிவுபடுத்தும். 

தமிழகத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் (சென்னை), மத்திய பிரதேசத்தில் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் மையம் (குவாலியர்), மத்திய அரசின் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்(இம்பால், - மணிப்பூர்), பஞ்சாப் விளையாட்டு பல்கலைக்கழகம் (பாட்டியாலா), ராஜஸ்தான் விளையாட்டு பல்கலைக்கழகம் (ஜுன்ஹுனு), ஸ்வர்னிம் குஜராத் விளையாட்டு பல்கலைக்கழகம் (காந்திநகர்) போன்ற பல்கலைக்கழகங்கள் விளையாட்டு தொடர்பான கல்வியை வழங்கி வருகின்றன. 

இவைதவிர, நாடெங்கும் ஏராளமான அரசு, தனியார் கல்விக்கூடங்கள் விளையாட்டுத் துறையில் பயிற்சியாளர்களின் பற்றாக்குறையைப் போக்க உழைத்து வருகின்றன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விளையாட்டு அறிவியல், விளையாட்டு ஊட்டச்சத்து, உணவு திட்டமிடல், யோகா, விளையாட்டு மேலாண்மை போன்றவற்றில் இளநிலை, முதுநிலை பட்டங்கள் வழங்கப்படுகின்றன. 

வேலைத்தன்மை விளையாட்டுசார் தொழில்முறை பட்டப் படிப்புகளைப் படித்து முடிப்போருக்கு, விளையாட்டு அணிகளின் மேலாளர், விளையாட்டுத் தொடர்பான தரவுப் பகுப்பாய்வாளர், போட்டி மற்றும் ஊடக மேலாளர்கள், விளையாட்டு எழுத்தாளர், விளையாட்டு தொடர்பாக எழுதும் ஊடகவியலாளர், தொலைக்காட்சிகளில் விளையாட்டுப்போட்டிகள் தொகுப்பாளர், வர்ணனையாளர், பயிற்றுநர், விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சியாளர், ஊட்டச்சத்து ஆலோசகர், பொதுமக்கள் தொடர்பாளர், விளையாட்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர், சந்தைப்படுத்தல் ஆலோசகர், விளையாட்டு நிகழ்ச்சித் தொகுப்பாளர், மேலாளர், ஒருங்கிணைப்பாளர் போன்ற பல்வேறு வேலைகள் காத்திருக்கின்றன. 

பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான ஆழமான அறிவு, வேலைவாய்ப்புகளை மட்டுமல்லாது, தொழில்முனைவோர் வாய்ப்புகளையும் வழங்குகின்றன. 

கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், விளையாட்டு வீரராவது மட்டுமல்லாது, பயிற்சியாளர், நடுவர், மேலாளர், வர்ணனையாளர், காணொலிக் கலைஞர், புகைப்படக் கலைஞர் போன்ற ஏராளமான வேலைகள் உள்ளன. இதேபோல, ஒவ்வொரு விளையாட்டுக்கும் அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும், தொழில்வாய்ப்புகளும் உள்ளன. 

விளையாட்டை "விளையாட்டாக' எடுத்துக்கொள்ளாமல், விளையாட்டுத் துறையிலேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்று முடிவெடுத்து இறங்கினால், சிக்சர்களும், கோல்களும், பாயின்ட்களும் குவியத் தொடங்கும். 
இணையவழி விளையாட்டு கரோனா காலத்தால் விளையாட்டால் விளைந்த நன்மைகளில் ஒன்று, இணையவழி விளையாட்டுப் போட்டிகள்.

பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் போட்டிகளை ஒளிபரப்புவதற்கு உரிமங்களை விற்பதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால், அதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. 

விளையாட்டுத் துறை முறைசார்ந்த தொழிலாக வடிவம் பெற்று வருவதால் இணையவழி விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்ல, பயிற்சிகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கரோனாவுக்குப் பிறகும், இணையவழிப் போட்டிகளுக்கான வரவேற்பு குறையாது. 

யூடியூப் இணைய காணொலி வழியாக, பல வழிகளில் விளையாட்டுகள் ஊக்குவிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. யோகா, உடல் எடைக் குறைப்பு, நோய்களுக்கான உடற்பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்கள் போன்ற பல்வேறு கூறுகளில் வருவாய் ஈட்டுவதற்கான தொழிற்களமாக யூடியூப் சேனல் மாற்றப்பட்டுள்ளது. 

இது தவிர, செல்லிடப்பேசிகளில் உடல்நலம் சார்ந்த உடற்பயிற்சி செயலிகள் பிரபலமாகி, புதிய தொழில், வேலைவாய்ப்புகளுக்கு வித்திட்டுள்ளன. மரபு விளையாட்டுகளும் இணையம் வழியே பிரபலமடைந்து வருகின்றன. 

வலுவடையும் விளையாட்டுத் தொழில் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமல்லாது, கரோனாவால் உடல்நலம் சம்பந்தமான அக்கறையும், அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வமும் பரவலாகக் காணப்படுவது, விளையாட்டுத் துறையின் எதிர்காலத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. யோகா மையங்களும், ஜிம்களும் ஆங்காங்கே தென்படத் தொடங்கிவிட்டன. அதேபோல, கிரிக்கெட் பயிற்சி மையங்களும், கால்பந்தாட்ட மையங்களும் பெருகி உள்ளன. 

இந்த மாற்றம் மேலும் விரிவடைவதால், விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்புகளும், தொழில் வாய்ப்புகளும் பெருகும் காலம் கனிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com