முந்தி இருப்பச் செயல் - 14

நள்ளிரவு நேரத்தில் யாருமில்லாத ஒரு சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள்.
முந்தி இருப்பச் செயல் - 14

நள்ளிரவு நேரத்தில் யாருமில்லாத ஒரு சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சற்று முன்னால் ஓர் இளம்பெண் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னால் அறிமுகமில்லாத ஓர் ஆண் நடந்து வருவதைப் பார்த்துவிட்ட அந்தப் பெண் சற்றே வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார். நீங்களும் வேகத்தை அதிகரிக்கிறீர்களா என்று அடிக்கடி திரும்பிப் பார்க்கிறார்.

இந்தச் சூழலில் உங்கள் எண்ணவோட்டம், எதிர்வினை கீழ்க்காண்பனவற்றில் எதுவாக இருக்கும்?

இந்த இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் ஏன் தேவையின்றி வெளியே வர வேண்டும்? நெருங்கி நடந்து, கொஞ்சம் பயம்காட்டி, ஒரு பாடம் கற்பித்து விடுவோம். இனி இந்த மாதிரி தவறை இவர் செய்யவே கூடாது.

அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் சாலையில் சம உரிமை இருக்கிறது; நான் ஏன் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டும்? நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பேன். நான் ஒன்றும் பாலியல் வன்கொடுமையாளன் அல்லவே?

எந்தச் சூழ்நிலையில் இந்தப் பெண் இப்படிச் செல்கிறார் என்று தெரியவில்லை. இளம்பெண்ணாக இருப்பதால், இருளும், தனிமையும் சூழ்ந்திருப்பதால் என்னைக் கண்டு அவர் பயப்படலாம்; பதற்றமடையலாம். எனவே நான் சற்றே ஒதுங்கி நின்று, அவரைக் கொஞ்சதூரம் முன்னேறிச் செல்ல விட்டுவிடுகிறேன். அவர் மனநிம்மதியோடு நடந்து போகட்டும்.

மூன்றாவது தெரிவு உங்களுடையதாக இருந்தால், நீங்கள் பாங்கான சிந்தையும், பரிவுணர்வும் உடையவர் என்று அர்த்தம். ஒத்துணர்வு, பச்சாதாபம் என்று பல்வேறு வார்த்தைகளில் நாம் குறிப்பிடும் பரிவுணர்வு என்பது இன்னொருவர் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் உணர்வதுதான். அதாவது அவருடைய இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்பது.

இந்தப் பரிவுணர்வு உங்கள் உள்ளத்தில் பொங்கியெழ வேண்டுமென்றால், நீங்கள் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி உள்வாங்குகிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என்பது முக்கியம்.

வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் உறவுகளை, நட்புகளை, பிரச்னைகளை, சந்தர்ப்பங்களை எப்படிக் கையாளுகிறோம் என்பது பல்வேறு அடிப்படைகளைக் கொண்டது. நமது விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்கள் போன்றவை மிக முக்கியப் பங்காற்றுகின்றன. அதே போல நமது ஆளுமையும் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்கள், ஆளுமை போன்றவற்றை நமது குடும்பப் பின்னணி, கல்வி, பயணங்கள், வாழ்க்கை அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் தீர்மானிக்கின்றன.

தாழ்வு மனப்பான்மையோ, உயர்வு மனப்பான்மையோ, பிற மனப்பிறழ்வுகளோ ஏதுமின்றி, நடு நிலைமை தவறாது வாழ்க்கையை, வாழ்வின் பல்வேறு அம்சங்களை நாம் புரிந்து கொள்வது பரிவுணர்வு பெருகப் பெரிதும் அவசியமாகிறது. புரிந்துணர்வும், பரிவுணர்வும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. நேர்மறைப் புரிதல் பரிவுக்கும், எதிர்மறைப் புரிதல் பிரிவுக்கும் இட்டுச் செல்கின்றன.

ஒரு விடயத்தை, பிரச்னையை, சந்தர்ப்பத்தை நாம் மூன்று விதங்களில் புரிந்து கொள்கிறோம்' என்கிறார் ஹெரால்ட் பெஞ்சமின் எனும் ஓர் அறிஞர்.

முதலாவது, ஓர் ஒற்றனின் பகுதிப் புரிதல். அதாவது ஓர் ஒற்றன் தன் கையில் இருக்கும் பிரச்னை தொடர்பாக தனக்குத் தேவைப்படும் பயனுள்ள தகவல்களை மட்டுமே சேகரிக்கிறார், உள்வாங்குகிறார். அத்தியாவசியமான தகவல்களை மட்டும் திரட்டிக் கொண்டு, அவை தொடர்பான பிறரின் நடவடிக்கைகளை மட்டும் அவதானித்துவிட்டு, தனது நோக்கத்தைத் திறம்பட சாதிப்பதில் மட்டுமே அவரது கவனம் குவிகிறது.

பெஞ்சமின் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்கிறார். ஓர் அரசுக்காக, அல்லது ஒரு சர்வதேச நிறுவனத்துக்காக (அரபு நாடுகளும், இஸ்ரேலும் அடங்கிய) மத்திய கிழக்குப் பகுதியை ஒருவர் உளவு பார்க்கிறார் என்று வையுங்கள். அவர் அப்பகுதியின் வரலாறு, அரசியல், பொருளாதாரம், மதங்கள், மொழிகள் போன்றவை பற்றிய குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டும் வாசிப்பார், அல்லது ஒரு சில கல்லூரிப் பாடங்களை மட்டும் பயில்வார்.

இரண்டாவது, ஒரு சுற்றுலாப் பயணியின் மேம்போக்கான புரிதல். ஓர் ஒற்றன் ஒரு சில விடயங்களைக் கூர்மையாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது போலல்லாமல், ஒரு சுற்றுலாப்பயணி அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஏனோதானோவென நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பார். அவரிடம் ஜெருசலேம், காசா, யாசர் அராஃபத், மோஷே தயான் பற்றியெல்லாம் துணுக்குச் செய்திகள் நிறைந்திருக்கும். ஆனால் இவற்றுக்கிடையேயான தொடர்புகள், இணைப்புக்களோடு கூடிய பரந்துபட்ட பார்வை இருக்காது.

மூன்றாவது, ஓர் அறிஞனின் ஆழமான புரிதல். ஒரு பகுதியை மட்டுமோ, அல்லது மேம்போக்காகவோ அல்லாமல் அவருடைய அறிவு நீளமும், அகலமும், ஆழமும் கொண்டதாக இருக்கும். நீட்சியை அறிந்து, மீட்சியைத் தேடும் பரந்துபட்ட அறிவாகவும், தேடலாகவும் அது அமையும். அறிவைத் தேடி, திறமைகளை வளர்த்து, யதார்த்தத்தை இன்னும் மேம்படச் செய்யும்.

கோபத்தோடும், வெறுப்போடும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, துன்புறுகின்ற யூதர்களும், பாலஸ்தீனியர்களும் புரிந்துணர்வோடும், பரிவுணர்வோடும் தங்கள் உறவினை அமைத்துக் கொள்ள, அகிம்சை வழியில் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தேடிக் கொள்ள, ஒட்டுமொத்த பிராந்தியத்தின் சமாதானத்திற்கும், வளர்ச்சிக்கும், மேம்பட்ட வாழ்வுக்கும் தங்களைத் தயாரித்துக் கொள்ள அவரது அறிவு விடை பகரும்; வழிபயக்கும்; இட்டுச் செல்லும்.

ஆழமான பிணக்கும், அகன்ற மனக்கசப்பும் கொண்ட ஒரு கணவனும் -மனைவியும் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வினைத் தேடி ஒரு சமூக சேவகரிடம் வந்து சேர்ந்தனர். முதலில் மனைவி தரப்பு வாதங்களை நீண்ட நேரம் பொறுமையாகக் கேட்ட அந்த சமூக சேவகர், "நீங்கள் சொல்வது சரிதான்' என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார். பின்னர் கணவர் தரப்பை நீண்டநேரம், அமைதியாகக் கேட்டுவிட்டு, அவரிடமும் "நீங்கள் சொல்வது சரிதான்' என்று தேறுதல் சொல்லி அனுப்பி வைத்தார் சமூக சேவகர்.

இந்த உரையாடல்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த சமூக சேவகரின் கணவர், ""இதென்னக் கூத்தாக இருக்கிறது? மனைவியிடம் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி அனுப்பி வைத்தாய். பிறகு கணவரிடமும் நீங்கள் சொல்வது சரிதான் என்று சொல்லி அனுப்புகிறாய். அதெப்படி இருவர் சொல்வதும் சரியாக இருக்க முடியும்?'' என்று பொரிந்து தள்ளினார். கணவர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, சமூக சேவகர் சொன்னார்:

""நீங்கள் சொல்வதும் சரிதான்''

அப்படியானால், அனைவர் சொல்வதையும் புரிந்துகொண்டு, அந்த ஆற்றொழுக்கோடு அடித்துச் செல்லப்படுவதுதான் பரிவுணர்வு என்பதா? இல்லை. உங்கள் இலக்குகள், தேவைகள், ஈடுபாடுகளைக் காத்துக் கொள்வதுதான் உங்கள் நிலைப்பாடாக இருக்க வேண்டும். ஆனாலும் ஒரு பிரச்னைக்கு பல்வேறு கோணங்கள், பரிமாணங்கள் இருப்பதைப் புரிந்து கொள்வது பரிவுணர்வுக்குக் கைகொடுக்கும் என்பதுதான் நாம் படிக்க வேண்டிய பாடம்.

இந்தப் பரிவுணர்வை எப்படி வளர்த்தெடுப்பது?

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், கன்றை இழந்த பசுவுக்காக தன் மகனையே கொன்ற மனுநீதிச் சோழன் பற்றியெல்லாம் படியுங்கள்.
மாதிரி நாடாளுமன்றம், மாதிரி ஐ.நா. போன்ற நிகழ்வுகளில் உங்களுக்குப் பிடிக்காத அரசியல் கட்சியின் அல்லது நாட்டின் பிரதிநிதியாக வாதிட்டுப் பாருங்கள்.
உங்கள் தந்தையாரின் சட்டையை அணிந்துகொண்டு, அல்லது தாயாரின் சேலையைப் போர்த்திக்கொண்டு, சில குடும்பப் பிரச்னைகளில் அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை, முடிவை அணுகிப் பாருங்கள்.
உங்கள் பணியிடத்தில் எழும் ஒரு பிரச்னையை உங்களின் மேலாளர் அல்லது தொழிற்சங்கத் தலைவர் போன்றோரின் இடங்களிலிருந்து அணுகிப் பார்த்து, நீங்கள் எப்படி முடிவெடுப்பீர்கள் என்று சிந்தியுங்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com