மாற்றுங்கள்... மனச்சோர்வை!

மனித வாழ்வில் மற்ற உறவுகளைவிட ஒரு புனிதமான உறவாக இருக்கும் நட்பு காலம்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
மாற்றுங்கள்... மனச்சோர்வை!

மனித வாழ்வில் மற்ற உறவுகளைவிட ஒரு புனிதமான உறவாக இருக்கும் நட்பு காலம்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஒருவன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, துக்கத்தை சரிசெய்ய, வழிகாட்டுதல்களை அடைய பெரும்பாலும் நண்பர்களையே நாடுகிறான்.

உங்களுக்கு உண்மையான ஒரு நண்பன்/ நண்பி இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் கடந்துவிடலாம். இதற்கு எடுத்துக்காட்டாகவே உங்களைச் சுற்றி ஏராளமானோர் இருக்கலாம். ஏன் நீங்களே கூட எடுத்துக்காட்டாக இருக்கலாம்.

அப்படிப்பட்ட உங்களுடைய நண்பர் ஒருவர் வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது நீங்கள் அவருக்கு உதவியாக இருக்கிறீர்கள் என்றால் உண்மையில் நீங்கள் சிறந்த நண்பர்தான்.

நன்றாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், திடீரென மனச்சோர்வு அடையும்போது அவர் மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரிடமுமே அந்த சோகம் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமுமில்லை.

ஆனால், அந்த நேரத்தில் நண்பரைக் கையாள்வது என்பது உங்களுக்கு சவாலான காரியம்தான். நண்பருக்கு என்ன ஆறுதல் சொல்வது, என்னநமாதிரி உதவுவது என்பதே பலருக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் மனச்சோர்வை எதிர்கொள்ளும் விதம் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்பதால் அவரவருக்கு ஏற்றாற்போல் பேசுவது முக்கியம். அப்படிப்பட்ட நண்பரை மனச்சோர்வு அல்லது பதற்றத்தில் இருந்து மீட்டெடுப்பது எப்படி என்பதற்கான வழிகள் இதோ...

1. நடவடிக்கைகளை உற்றுநோக்குங்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் அவர்கள் கஷ்டத்தில் இருப்பதை வெளியில் சொல்வதில்லை.

சில நேரங்களில் வாழ்க்கையின் வழக்கமான ஏற்றத் தாழ்வான மனநிலைகளுக்கும், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநலப் பிரச்னை
களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்துகொள்வதே கடினம். அப்படி இருக்க முதலில் உங்கள் நண்பர் உண்மையில் மனச்சோர்வில்தான் இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

மனச்சோர்வில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?

அடிக்கடி மனமுடைந்தது போல சோகமாக இருப்பது, திடீரென அழுவது. தாமதத் தூக்கம் அல்லது அதிக நேரம் தூங்குவது உள்ளிட்ட தூக்கப் பிரச்னைகள். பள்ளி, கல்லூரி அல்லது வேலை போன்ற அன்றாடப் பணிகளில் ஈடுபடாமல் இருத்தல். நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தல். வழக்கமானதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுதல். போதைப் பொருள்களை எடுத்துக்கொள்ளுதல். பயனற்று இருப்பதாக உணர்தல், அவநம்பிக்கையோடு இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.

அதுவே உங்கள் நண்பர் பதற்றத்தில் இருப்பது போல உணர்ந்தால்....

முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுதல், புதிய நபர்கள், சூழ்நிலைகள் அல்லது அறிமுகமில்லாத இடங்களைத் தவிர்த்தல், திட்டங்களை வகுப்பதில் சிக்கல், ஆர்வமின்மை, மறதி, கவனச்சிதறல், செரிமானப் பிரச்னைகள், தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிரமம் ஆகிய பிரச்னைகளை எதிர்கொள்வார்.

இப்படிப்பட்ட அறிகுறிகளை வைத்தே நண்பரின் மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

2. வெளிப்படையாகப் பேசுங்கள்

உங்களுடைய நண்பர் மனச்சோர்வில்தான் இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பிறகு அவரிடம் வெளிப்படையாக பேசுங்கள். உன்னுடைய பிரச்னைக்கு நான் எவ்வாறு உதவ முடியும் என்று கேளுங்கள். முன்னதாக, உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் பொதுவான வசதியான ஓர் இடத்தைத் தேர்வு செய்து அவரின் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

அவருடைய பிரச்னைக்கு உங்களிடம் தீர்வு இல்லை என்றாலும் பிரச்னையை நீங்கள் கேட்பதே உங்கள் நண்பருக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கை அவரைப் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்கும்.

கடினமான சூழ்நிலையில் ஒருவர் இருக்கும்போது அவருக்கு ஆறுதலும், பாதுகாப்புமே அவசியமானது.

எனவே அவருடைய பிரச்னையை பொறுமையாகக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவரை வற்புறுத்தாமல் ஆறுதல் கூறி, சரியான சூழ்நிலையில் கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம்.

3. பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்

எந்தவொரு பிரச்னையையும் அனுபவிப்பவருக்கே அதன் வலி புரியும். எனினும், மனச்சோர்வில் உள்ள உங்கள் நண்பரின் உணர்வுகளை முதலில் நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் பிரச்னையில் இருக்கும்போது கேலி செய்யாமல் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஒரு பிரச்னையிலிருந்து வெளிவருவது அவ்வளவு சாதாரணமல்ல. நண்பரின் உணர்வுகளை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே அவருக்கு ஆறுதல் சொல்ல முடியும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

4. ஆதரவாக இருங்கள்

நண்பரின் பிரச்னையைப் புரிந்துகொண்ட பிறகு அவர் அதிலிருந்து முழுவதுமாக மீளும்வரை உறுதுணையாக இருங்கள். உங்கள் நண்பரை முதலிலேயே மனநல ஆலோசகரிடம் செல்ல வற்புறுத்த வேண்டாம். அது அவர்களை மனதளவில் அதிகமாகக் காயப்படுத்தும். குறிப்பாக ஒரு நோயாளியைப் போன்று அவரை அணுக வேண்டாம்.

"எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு' என்று வார்த்தைகளை முன்வைத்து அவரை பிரச்னையிலிருந்து மீள உதவுங்கள்.

நண்பருக்கு எப்படி ஆறுதல் சொல்வது, எப்படி அவரை மனச்சோர்விலிருந்து மீட்பது என்று தெரியாத பட்சத்தில் உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது மனநல ஆலோசர்களிடம் ஆலோசனை பெற்று நீங்கள் நண்பருக்கு ஆலோ சனைகள் வழங்கலாம்.

தேவைப்பட்டால், பெரியவர்கள் அல்லது ஒரு மனநல நிபுணரிடம் நேரடியாக அழைத்துச் செல்லலாம். நீங்களும் உடன் இருக்க வேண்டியது அவசியம். அல்லது உங்கள் நண்பருக்கு தனிப்பட்ட ஒருவருடன் பிரச்னை ஏற்பட்டிருந்தால் அந்த நபருடன் நேரடிச் சந்திப்பை ஏற்படுத்தி பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்கலாம்.

5. அவசர நிலைகளில் வழிகாட்டுங்கள்

உங்களுடைய பிரச்னைகளிலிருந்து மீள தேவையான ஒரு முக்கிய முடிவை எடுக்க அவருக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் ஏதேனும் தவறு செய்திருக்கும் பட்சத்தில், ""தவறு செய்வது என்பது மனித வாழ்வில் இயல்பானது. சில சூழ்நிலைகளில் தவறுகளைத் தவிர்க்க முடியாது. தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு வாழ்க்கையை செம்மைப்படுத்துவதே ஒரு சிறந்த மனிதனுக்கு அழகு. அதனை ஒரு வாழ்க்கை அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று நீங்கள் உங்களுடைய நண்பரிடம் கூறி, அவரது தாழ்வு மனப்பான்மையை மாற்றுங்கள்.

6. நண்பரின் வெற்றியைக் கொண்டாடுங்கள்

வாழ்வில் ஒரு கடினமான சூழ்நிலையைக் கடந்து வெற்றி பெறும்போது அதனைக் கொண்டாடுவது அவசியம். அதிலும் உங்கள் நண்பர், அப்படியொரு மோசமான சூழ்நிலையை உங்களுடைய உதவியுடன் கடந்திருந்தால் அது நீங்களும் கொண்டாட வேண்டிய தருணம். வாழ்வில் வீழ்வது சாதாரணம். ஆனால், வீழ்ந்து எழாமல் இருப்பதே தவறு. எனவே, கடினமான பிரச்னையை எதிர்கொண்டு வெற்றி பெற்றதற்கு நண்பருக்கு பாராட்டு தெரிவித்துக் கொண்டாடுங்கள்.

7.நீங்கள் கவனமாக இருங்கள்

நண்பர் ஒருவர் மனச்சோர்வில் இருக்கும்போது கண்டிப்பாக சுற்றியுள்ளவரையும் அது பாதிக்கும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் நண்பருக்கு உதவச் சென்று நீங்கள் மனச்சோர்வு அடைந்துவிடக் கூடாது. எனவே, முன்னதாக நீங்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட வேலைகள் பாதிக்காத வண்ணம் உங்கள் நண்பருக்கு உதவுங்கள். ஏனெனில் உங்களுடைய வேலைகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது உங்களிடம் சோர்வை, பதற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும், தேவையான ஓய்வு எடுக்கவும் உங்களுக்கு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே நண்பருக்கு உதவ முடியும் என்பதை மனதில்கொண்டு செயல்படுவது சிறந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com