முகநூல் நட்பு... நட்பு?

வாழ்க்கையின் மிகச் சிறந்த பரிசு நண்பர்கள். அப்பா, அம்மா, உடன்பிறந்தோர், மனைவி, வாரிசுகள் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனதுக்கு மிகவும் நெருக்கமான உறவு நட்பே.
முகநூல் நட்பு... நட்பு?

வாழ்க்கையின் மிகச் சிறந்த பரிசு நண்பர்கள். அப்பா, அம்மா, உடன்பிறந்தோர், மனைவி, வாரிசுகள் என ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனதுக்கு மிகவும் நெருக்கமான உறவு நட்பே. கணவன்-மனைவி உறவுக்கே  சமூகம் அதீத கவனம் செலுத்துகிறது. நல்ல வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டால் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்துவிடும் என்ற மேலோட்டமான பார்வை சமூகத்தில் நிலவுகிறது. 

திருமணம் ஆகிவிட்டாலே நண்பர்களுக்கான முக்கியத்துவத்துவத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற மாயவலை அனைவர் மீதும் வீசப்படுகிறது. ஆனால், மனரீதியிலான மகிழ்ச்சிக்கு நண்பர்கள் மிகவும் அவசியம் என பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.  வேறு எதையும் விட வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்றுவதில் நண்பர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். 

தனிமையை அகற்றுவதிலும் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் நண்பர்களின் பங்கு அவசியமானது. அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரும் சக்தியும் நட்புக்கு உள்ளது. அன்றாடம் உடற்பயிற்சிகளைச் செய்து, நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது நமது வாழ்நாளை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

நட்பின் பலன்கள்

மனநிலை மேம்பாடு: நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது மனநிலையை மேம்படுத்தும். நண்பர்கள் நம் மகிழ்ச்சிக்கான வித்தாக இருப்பார்கள். 

இலக்கை நோக்கிய பயணம்: நண்பர்கள் நம் இலக்கை நோக்கிய பயணத்தில் துவண்டு விடாமல் இருப்பதற்கான ஊக்கத்தை அளிப்பார்கள். புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்டவற்றில் அடிமையாகிக் கிடப்பதிலிருந்து விடுதலை பெறுவதற்கு நல்ல நண்பர்களின் நட்பு துணைநிற்கும். 

நம் வெற்றிக்கான வாய்ப்பை நண்பர்கள் அதிகரிக்கச் செய்வார்கள்.

மனஅழுத்தம் குறையும்: வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை நண்பர்கள் தெளிய வைப்பார்கள். தனிமையில் இருப்பது மன அழுத்தம் ஏற்படு வதற்கான முக்கியக் காரணி. நல்ல நண்பர்கள் மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிப்பார்கள்.

கடினமான சூழலில் ஆதரவு: வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படும் சமயங்களில் நண்பர்கள் நமக்குத் தொடர்ந்து ஆதரவளித்து தொடர்ந்து பயணிக்கச் செய்வார்கள். பிரச்னைகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தை நட்பு வழங்கும்.  

இயலாமையில் ஆதரவு: வயது முதிர்வு ஏற்படும் சமயத்தில் தனிமை வாட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பணிஓய்வு, நோய்கள், துணையின் இழப்பு உள்ளிட்டவை மனதில் மேலும் வலியைக் கூட்டும். அத்தகைய சமயங்களில் நண்பர்களின் ஆதரவு மிகவும் அவசியமானது.  

மதிப்பை அதிகரிக்கும்: நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது நம் மதிப்பை அதிகரிக்கும். நண்பர்களுடன் பல விஷயங்களைப் பற்றி உரையாடுவது நம் அறிவையும் மேம்படுத்தும்.  

தற்காலத்தில் நட்பு என்பதன் இலக்கணம் வெகுவாக மாறிவிட்டது. இணையத்தின் வளர்ச்சி நட்புறவில் பெரும் மாற்றங்களைப் புகுத்தியுள்ளது. 

முன்பின் தெரியாதவர்கள் கூட முகநூலிலும் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்.  வெறும் கருத்துப் பரிமாற்ற உறவாக இருந்தாலும், முகநூல் நட்பை பெரிதும் மதிப்பவர்கள் இருக்கிறார்கள்.  இருந்தாலும் முன்பின் தெரியாதவர்களிடம்  கருத்துகளைப் பரிமாறுவதில் கவனம் தேவை.  இதனால் பல சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நேரில் பார்த்துப் பழகி, ஒன்றாக ஊர் சுற்றி,  ஒன்றாக உண்டு களித்து, ஓடியாடி விளையாடிய நண்பர்களினால் இப்படிப்பட்ட பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்புகளில்லை. 

நமது நண்பர்களை எந்நேரத்திலும் தொடர்பு கொள்வதற்கான வசதிகள் தற்போது ஏற்பட்டிருந்தாலும், நேரில் அவர்களின் முகத்தைப் பார்த்துப் பேசி நேரத்தைச் செலவிடுவது குறைந்து கொண்டே வருகிறது. 

தொழில்நுட்ப வசதிகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தாலும், நண்பர்களை நேரடியாகச் சந்தித்து நேரத்தைச் செலவிடுவதில் உள்ள இன்பத்துக்கு இணையேதும் இல்லை. நட்பென்ற உறவையும் அதன் வலிமையையும் அப்போதுதான் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.  


சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பது பெரும் சாதனையல்ல. நல்ல நண்பர்கள் நால்வரை அவ்வப்போது நேரில் சந்தித்து அளவளாவி மகிழ்வதே மன நிம்மதியைத் தரும். அதைத் தற்போது பலர் மறந்துவிட்டனர். 

திருமணத்துக்குப் பிறகு நண்பர்கள் முக்கியமில்லை என்ற எண்ணமும் வீழ்த்தப்பட வேண்டும். கணவனோ மனைவியோ தங்கள் துணையின் நட்புறவுக்கு உரிய மரியாதை அளிக்க  வேண்டும். அதே வேளையில், நட்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எல்லையையும் வகுத்துக் கொள்ள வேண்டும். 

நட்பு மிகவும் அழகானது. எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாதவர்களே நண்பர்கள். வெறும் அன்பினாலும், ஒத்த மனவோட்டத்தாலும் பிணைக்கப்படுவதே நட்பு. அத்தகைய நட்பையும் நண்பர்களையும் காலந்தோறும் கொண்டாடுவோம். முகநூல் நட்புகளை விட, முகத்தைப் பார்த்துப் பேசி அன்றாடம் பழகும் நட்புக்கே முன்னுரிமை தருவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com