சூரிய ஒளித் தகடுகள்...: தூய்மையாக்கும் தானியங்கி கருவி!

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மின்சாரம் தயாரிக்க நினைப்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது சூரிய ஒளித் தகடுகளே.
சூரிய ஒளித் தகடுகள்...: தூய்மையாக்கும் தானியங்கி கருவி!

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் மின்சாரம் தயாரிக்க நினைப்பவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது சூரிய ஒளித் தகடுகளே. அதுவும் வெயில் அதிகமாகக் கொளுத்தும் நமது நாட்டில் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்திவிட்டால், மின்சாரம் இலவசமாகவே நமக்குக் கிடைத்துவிடும். வீடுகளை விட பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் சூரியஒளித் தகடுகளைப் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த சூரிய ஒளித் தகடுகள் உண்மையில் கண்ணாடி போன்ற பொருளால் ஆனவை. இதில் படும் சூரிய ஒளியின் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இந்த சூரிய ஒளித்தகடுகளில் தூசி படிந்தால், அழுக்கு படிந்தால், பனி படர்ந்தால் இதன் வழியாகச் செல்லும் சூரிய ஒளிக்கதிர்களின் அளவு குறைந்துவிடுகிறது. இதனால் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவும் குறைந்துவிடுகிறது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை: மின்சாரக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்திவிட்டு, பிறகு ஒவ்வொரு நாளும் அதைத் தூய்மைப்படுத்த செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படித் தூய்மைப்படுத்தும்போது, ஒரு சூரிய ஒளித்தகட்டைத் தூய்மையாக்க சுமார் 1 முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை செலவாகிறது. உயரமான கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளித் தகடுகளைத் தூய்மையாக்க நான்கைந்துநபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது.

இம்மாதிரியான சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு காணும்விதமாக கோயம்புத்தூரைச் சேர்ந்த "சோலாவியா லேப்ஸ்' என்ற நிறுவனம், சூரிய ஒளித் தகடுகளைத் தூய்மையாக்கும் தானியங்கிக் கருவிகளை உருவாக்கியுள்ளது.

இந்தக் கருவியின் உருவாக்கம், பயன் குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் சூரஜ் மோகனிடம் பேசினோம். அவர் கூறியதிலிருந்து...

""நான் சென்னை கிண்டியில் உள்ள காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்கில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் பிரிவில் இளநிலைப் பொறியியல் பட்டம் பெற்றேன். ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றேன். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள டாடா பவர் சோலார் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தில் 2014 - இல் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் சூரிய ஒளி ஆற்றலின் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் உள்ள சிக்கல்களைத் தெரிந்து கொண்டேன். டாடா பவர் சோலார் சிஸ்டம் நிறுவனம் 100 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சூரிய ஒளித் தகடு மின்சார அமைப்புகளைத் தயாரித்து வந்தது.
பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சூரியஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளை தங்கள் நிறுவனங்களில் பொருத்துவதில் ஆர்வம் காட்டுவதும் அப்போது தெரிய வந்தது. சூரிய ஒளித்தகடுகளை எவ்வளவுக்கெவ்வளவு தூய்மைப்படுத்தாமல் விட்டுவிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்து போகும்.

அதனால் சூரிய ஒளித்தகடுகளைத் தினம்தோறும் தூய்மைப்படுத்துவதற்கு அவர்கள் சிரமப்பட்டார்கள்.

1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் சூரிய ஒளித்தகடு அமைப்பை ஏற்படுத்த 5 ஏக்கர் நிலத்தில் சுமார் 4000 - 5000 சூரிய ஒளித்தகடுகளைப் பொருத்த வேண்டியிருக்கும். தினம்தோறும் அவற்றைத் தூய்மைப்படுத்த குறைந்தது 5 பேர் கொண்ட குழுவை இறக்கிவிட வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைத் தூய்மைப்படுத்த நிறையத் தண்ணீரும் செலவாகும்.

தண்ணீரைப் பயன்படுத்தாமல் சூரிய ஒளித்தகடுகளைத் தூய்மைப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து, கடும் முயற்சியில் ஈடுபட்டேன். 2016 - இல் இதற்கான முயற்சிகளில் இறங்க, நான் தொடங்கிய நிறுவனம்தான் "சோலாவியா லேப்ஸ்' நிறுவனம். என்னுடைய இந்த முயற்சியில் மெக்கானிக் இன்ஜினியரிங்கில் பி.டெக் படித்த நண்பர் பிரசாந்த் கோயல் என்பவரும் இணைந்து கொண்டார்.

2017 - இல் தொடங்கிய முயற்சியின் விளைவாக 2019- இல் சோலார் பேனல்களைத் தூய்மைப்படுத்தும் தானியங்கிக் கருவியை உருவாக்கிவிட்டோம்.

நாங்கள் உருவாக்கியுள்ள தூய்மைப்படுத்தும் தானியங்கிக் கருவி, பிரஷ் மூலம் சூரிய ஒளித் தகடுகளைத் தூய்மையாக்கும். சூரிய ஒளி மின்சார அமைப்பில் சூரிய ஒளித்தகடுகளை அலுமினியம் ஃபிரேமில் பொருத்தியிருப்பார்கள். எங்களுடைய தானியங்கி தூய்மையாக்கும் கருவியை அந்த அலுமினியம் ஃபிரேமில் ஓடும்விதமாக நாங்கள் பொருத்திவிடுவோம். இதனால் அதன் சக்கரங்கள் சூரிய ஒளித் தகடின் மீது படாது. இதனால் சூரிய ஒளித் தகடுகளில் கீறல் விழாது. தேய்ந்து போகாது. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதை உறுதிப்படுத்தும்விதமாக டியூவி இந்தியா நிறுவனத்தின் தரச்சான்றிதழையும் பெற்று இருக்கிறோம்.

மேலும் சூரிய ஒளித் தகடுகளின் மீது 200 கிலோ எடையுள்ள பொருள்கள் வரை ஏற்றலாம். அவற்றைத் தாங்கும் திறன் அவற்றுக்குண்டு. எங்களுடைய கருவியின் எடை வெறும் 40 கிலோதான்.

இந்தக் கருவியை நாங்கள் நான்கு வகைகளில் உருவாக்கியிருக்கிறோம்.

கருவியில் உள்ள சுவிட்சை ஆன், ஆஃப் செய்தால் இயங்கும் கருவி, ஒருவிதம். இன்னொருவிதமான கருவி ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயங்கும். மொபைல் போன் மூலம் இயங்கும் கருவி மூன்றாவது வகையைச் சேர்ந்தது. நான்காவது வகையிலான கருவியில் சோலார் சூரிய ஒளித்தகடுகளை எப்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்று டைம் செட் பண்ண முடியும்.

எங்களுடைய தயாரிப்புக்காக இந்தியா அரசிடம் இருந்து ரூ.74 லட்சம் (நூறாயிரம் அமெரிக்க டாலர்) நிதி பெற்றிருக்கிறோம். கனடா நாட்டின் நியூ பர்ன்ஸ்விக் மாகாண அரசிடம் இருந்து ரூ.40 லட்சத்து 60 ஆயிரம் நிதியைப் பெற்றிருக்கிறோம், துபாய் அரசிடம் இருந்தும் நிதி பெற்றிருக்கிறோம். இந்த நிதியை வைத்து வரும் ஆண்டில் 500 தானியங்கி தூய்மையாக்கும் கருவியைத் தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com