விலகி நின்னா... வெற்றியில்லை!

எனது கப்பலை எவ்வாறு செலுத்துவது என்பதை நான் கற்றுக்கொண்டிருப்பதால், புயல்களுக்கு நான் பயப்படவில்லை.
விலகி நின்னா... வெற்றியில்லை!

எனது கப்பலை எவ்வாறு செலுத்துவது என்பதை நான் கற்றுக்கொண்டிருப்பதால், புயல்களுக்கு நான் பயப்படவில்லை.

- லூயிசா மே அல்காட்

சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவைப் போலவே அனைத்து பிரதான நகரங்களிலும் ஏதாவது ஒரு வணிக வீதி முழுவதும் மனிதத் தலைகள் கடல் அலைகள் போல ஊர்ந்து செல்வதை நாம் பார்த்திருப்போம்.

ஏன், நாமும்

அப்படி ஊர்ந்து போயிருப்போம். இதுபோன்ற தெருக்களை முதலில் பார்ப்பவர்கள், "ஐயையோ... இந்த கூட்டத்தில நாம் இறங்கி நடக்க முடியுமா?' என்று சந்தேகிப்பார்கள். ஆனால், அப்படி மலைத்தவர்கள் அத்தெருவில் இறங்கி ஓர் அடி எடுத்து வைத்துவிட்டாலே, ஊர்ந்து செல்கின்ற கூட்டமே அவர்களை கடைக்கோ, கரைக்கோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும்.

வாழ்க்கையின் இலட்சியங்களும் இலக்குகளும் கூட இப்படித்தான். "ஒரு பெரிய பயணம் கூட சாதாரணமாக முதல் காலடியை எடுத்து வைப்பதிலேயே ஆரம்பமாகிறது' என்பதுதான் முதுமொழி. அப்படி எடுத்து வைக்க வேண்டிய முதல் அடியிலும் அல்லது அதற்கு அடுத்தடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடிகளிலும் தயங்கியும், பயந்தும் ஒதுங்கி நின்றால், ஊர் போய்ச் சேர முடியுமா? தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாமலேயே எம்.எல்.ஏ. ஆக வேண்டும்; முதல்வர் ஆகவேண்டும் என்று வெற்றுக்கனவுகளில் சுற்றித்திரிந்தால் அது காரிய சித்தியாக்குமா?

பள்ளி, கல்லூரி படிப்புகளில் தானே முதல் மாணவன் என்பதற்காக, அரசுப் பதவிகளில் உயர் அலுவலர் ஆகிவிடுவேன் என்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்காமலேயே விலகிநின்றவர்கள் பலர் , இன்று நட்டாற்றில் விடப்பட்ட கப்பலாக தத்தளித்துக் கிடக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா?

நீல் ஆம்ஸ்ட்ராங்!

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர். இப்படித்தான் வரலாற்றில், நமது பாடப் புத்தகங்களில், அறிவியலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், முதன் முதலில் நிலவில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? அல்லது நிலவில் முதன் முதலில் கால் வைத்ததாக யாருடைய பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியுமா?

பலருக்குத் தெரியாது எட்வின் சி ஆல்ட்ரின் தான் நிலவுக்குச் சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்; அதாவது விமானி. ஆல்ட்ரின்
அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார். ஆனால், நீல் ஆம்ஸ்ட்ராங்கோ அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். கப்பல் படையில் பணியாற்றிய இவர், இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவர் மிகுந்த தைரியசாலி என்பதால்தான். எனவே, நீல் ஆம்ஸ்ட்ராங் ஆல்ட்ரினுக்கு கோ - பைலட்டாக, இணை விமானியாக நியமிக்கப்பட்டார்.

அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்தது. நம் நாயகர்கள் இருவரும் சென்ற விண்கலம் நிலவைத் தொட்டவுடன், நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்...' என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல, "நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கப் போகிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்?' தயக்கத்தில் அவர் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை... சில நொடிகள், சில நொடிகள் மட்டுமே தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்' கட்டளை வந்த அடுத்த நொடி நிலவில் காலடி எடுத்துவைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். அந்நொடியில் ஒரு புது வரலாறு உருவானது. நீல் ஆம்ஸ்ட்ராங் உலகவரலாறானார்.

உலக வரலாறு மட்டுமல்ல, பல நேரங்களில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு நொடி தயக்கத்தில், தாமதத்தில் மாற்றி எழுதப்படுகிறது. அன்றும் அப்படியே மாற்றி எழுதப்பட்டது.

திறமையும் தகுதியும் இருந்தும் கூட, தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால், இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை. முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியைப் பாதிக்கும் என்பதை ஒருவருக்குப் புரிய வைக்க இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா?

இனி நிலவைப் பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்வோமே. ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லாருமே மிகப்பெரும் சாதனை களைப் படைக்கிற வல்லமை உடையவர்கள்தாம். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதானே ஒருவருக்கு முதல் எதிரி. பலருக்கு தன்னுடைய தவறுகளைக் களைவதில் தயக்கம். ஒரு சிலருக்கு தவறுகளைத் தட்டிக் கேட்க தயக்கம். இன்னும் ஒரு சிலருக்கோ, அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம். ஏன், சொற்ப சிலருக்கோ இந்தத் தகவலை நண்பர்களுக்குப் பகிர்வதில் கூட அற்ப தயக்கம்.

சரியானதைச் செய்யத் தயங்குபவர்கள், தவறானதை தான் செய்து கொண்டிருப்பார்கள். எனவே, சுய வளர்ச்சியில், நல்லொழுக்க வரையறைகளில், நன்மை பயக்கும் கருத்துகளில், ஏற்றமிகு காரியங்களில், சிந்தனைகளில், நல்லுறவு நடவடிக்கைகளில், பல்லுயிர் மேம்பாட்டு முன்னெடுப்புகளில், தயக்கத்தை தவிர்ப்போம்... தலைநிமிர்ந்து நிற்போம்.

வெல்ல நினைப்பவர்கள் விலகி நிற்பதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com