விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்கள்!

"காடு வெளைஞ்சென்ன மச்சான்... நமக்கு கையும் காலும்தானே மிச்சம்?' என்று தொடங்கும் பழைய திரைப்படப் பாடல் எல்லாருக்கும் நினைவிருக்கும். ஆனால் இன்று "காடு விளைவது' கூட சிரமமான ஒன்றாகிவிட்டது.
விவசாயிகளுக்கு உதவும் இளைஞர்கள்!

"காடு வெளைஞ்சென்ன மச்சான்... நமக்கு கையும் காலும்தானே மிச்சம்?' என்று தொடங்கும் பழைய திரைப்படப் பாடல் எல்லாருக்கும் நினைவிருக்கும். ஆனால் இன்று "காடு விளைவது' கூட சிரமமான ஒன்றாகிவிட்டது. மழை பெய்யாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை; அதிக மழை பெய்து பயிர்கள் நாசமாவது; விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுவது என விவசாயிகளின் வாழ்க்கை இழப்புகளை எதிர்கொள்வதாகவே மாறிவிட்டது. தொடர்ந்து விவசாயம் செய்ய முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

""விவசாயத்தில் இழப்பு ஏற்பட்டால், விவசாயிகள் விவசாயம் சார்ந்த வேறு தொழில்களில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் அவர்கள் உயிர் வாழ முடியும். கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகியற்றில் ஈடுபட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதற்கான வழிகாட்டுதல்களை, உதவிகளை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்'' என்கிறார் பரணி.

சென்னை காரப்பாக்கத்தில் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் அக்ரோமலின் நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான அவரிடம் அது பற்றித் தொடர்ந்து பேசினோம்.

""விவசாயிகள் தொடர்ந்து இழப்பைத் தாங்கிக் கொண்டு இருக்க முடியாது. நம்நாட்டில் உள்ள 17 கோடி விவசாயிகள் 1 ஏக்கர் நிலத்துக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள். அவர்களுடைய வாழ்வாதாரமான நிலம் அவர்களைக் கைவிட்டுவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர நம்மாலான ஏதேனும் செய்ய வேண்டும் என்று நானும், நண்பர் பிரசன்னாவும் நினைத்தோம். அதன் விளைவாக உருவானதுதான் எங்களுடைய அக்ரோமலின் நிறுவனம்.

விவசாயிகளின் வருமானத்துக்கு உதவும் வகையில் ஏதேனும் விவசாயம் சார்ந்த தொழில்களில் அவர்களை ஈடுபடுத்தலாம் என்று நினைத்தபோது உலக அளவில் எந்தப் பொருள்களுக்கு அதிகத் தேவை உள்ளது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தோம்.

நாங்கள் ஏற்கெனவே விவசாயப் பொருள்களை குறிப்பாக வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் ஈடுபட்டு இருந்ததால், எதற்குத் தேவை உள்ளது என்பதைக் கண்டறிவது எளிதாக இருந்தது.

உலக அளவில் மீன், கோழி, வாத்து, காடை போன்வற்றுக்கு அதிகத் தேவை உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டோம்.

விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் மீன், கோழி, வாத்து, காடை போன்றவற்றை வளர்க்கும் சிறு பண்ணைகளை நடத்தினால், அவர்களுக்கு வருமானம் கிடைக்குமே என்று நினைத்தோம்.

ஏற்கெனவே ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தபோது, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளைவிக்கும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்த அனுபவம் இருந்ததால், விவசாயிகளிடம் தொடர்பு கொள்வதும் எங்களுக்கு
எளிதாக இருந்தது.

தரமான கால்நடை, மீன்களை உற்பத்தி செய்ய அவற்றுக்குத் தரமான தீவனங்களை வழங்க வேண்டும்; அவை நோய் வாய்ப்படும்போது தரமான மருந்துகளை அவற்றுக்குத் தர வேண்டும். பண்ணைகளுக்கு உரிய கட்டமைப்பு வேண்டும்.

இவையெல்லாம் கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகளுக்குத் தெரியாது. கால்நடைப் பண்ணை, மீன் பண்ணைகளை நடத்துவது எப்படி என்று தெரியாத விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உதாரணமாக கோழிப்பண்ணை வைக்க விரும்பி ஒரு விவசாயி எங்களிடம் வருகிறார் என்றால், அவருக்கு அதற்கான பயிற்சிகள் எங்கு தரப்படுகின்றன என்பதைச் சொல்கிறோம். பயிற்சி பெற்று வந்த பிறகு அவர் எந்த வகையான கோழியை வளர்க்க விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

நவீன ஹைபிரீட் வகை நாட்டுக் கோழியை எடுத்துக் கொண்டோம் என்றால் கிட்டத்தட்ட 20 - 30 வகைகள் அவற்றில் உள்ளன. மீன்களில் 25 வகைகள் உள்ளன. மாநில அரசுகள் கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மைத்துறைகளின் மூலமாக ஹைபிரீட் வகையிலான நாட்டுக்கோழிகளை உருவாக்கியிருக்கிறார்கள். கேரள அரசு "கைராலி' கோழி
களுக்கு முன்னுரிமை அளித்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஒரு விவசாயி கைராலி கோழிப் பண்ணையை வைக்க விரும்புவதாக எங்களிடம் கூறினால், நாங்கள் 1000 கைராலி கோழிக்குஞ்சுகளை அவர்களுக்கு விற்பனை செய்கிறோம். அவை வளர்வதற்கான தீவனம், அவற்றுக்குத் தேவையான மருந்து, அவற்றை வளர்ப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு என அனைத்தையும் விற்பனை செய்கிறோம். கோழிக்குஞ்சுகள் குறிப்பிட்ட எடை அளவு உள்ள கோழியாக வளர்ந்தவுடன், அவற்றை நாங்களே விலைக்கு எடுத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் தருவதாகச் சொன்ன விலையை விட அதிக விலைக்கு அவர்கள் பிறரிடம் விற்க விரும்பினால் விற்றுக்கொள்ளலாம்.

கோழிப் பண்ணை மட்டுமல்ல, வாத்து, காடை, மீன் பண்ணைகளை அமைக்கவும் இந்த வகையில் நாங்கள் உதவுகிறோம்.

இதற்கு நாங்கள் உருவாக்கியுள்ள செயலியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களுடைய இணையதளம் வாயிலாகவும் எங்களை விவசாயிகள் அணுகலாம். அதன் மூலம் அவர்கள் விருப்பத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். கோழி, மீன், காடை போன்ற உயிருள்ள பொருள்களை விவசாயிகளுக்கு வாங்கித் தருவதும் அவற்றை வளர்ப்பதற்கான பொருள்களை வாங்கித் தருவதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும்தான் எங்கள் பணி,

ஒரு குறிப்பிட்ட வகையான கோழிகளை ஒருவர் வளர்க்க விரும்பலாம். குஞ்சாக இருக்கும்போது இன்ன வகையான கோழிக் குஞ்சு என்று கண்டுபிடிக்க முடியாது. ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் தெரியும். விவசாயிகள் பல வியாபாரிகளிடம் ஒரு குறிப்பிட்ட வகையான கோழிக்குஞ்சு என வாங்கி, அவை வளர்ந்த பிறகு ஏமாற்றத்துக்கு உள்ளானதும் நடந்திருக்கிறது. ஆனால் நாங்கள் ஒரு குறிப்பிட்ட வகையிலான கோழிக்குஞ்சு வேண்டும் என்றால் அதை மட்டும்தான் நாங்கள் அவர்களுக்குத் தருகிறோம். பொதுவாக கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு பண்ணைகளில் பல லட்சங்கள் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் நாங்கள் குறைந்த முதலீட்டில் உருவாகக் கூடிய மைக்ரோ பண்ணைகளை உருவாக்க உதவுகிறோம்'' என்கிறார் பரணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com