டிஜிட்டல் மார்க்கெட்டிங்: புதிய வழிமுறைகள்!

நவீன உலகத்தில் இணையமின்றி எதுவுமில்லை. அதுபோல தொழில்துறையில் மார்க்கெட்டிங் இன்றி வணிகமில்லை.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: புதிய வழிமுறைகள்!

நவீன உலகத்தில் இணையமின்றி எதுவுமில்லை. அதுபோல தொழில்துறையில் மார்க்கெட்டிங் இன்றி வணிகமில்லை.  ஒரு பொருளை உற்பத்தி செய்வதைப் போலவே அதை விற்பனை செய்யவும் வேண்டும்.  வணிக விற்பனைக்கான அடிப்படைத் தேவையாக இன்று மார்க்கெட்டிங் தொழில்நுட்பம் உருவாகியிருக்கிறது.  

மார்க்கெட்டிங் எனப்படும் சந்தைப்படுத்துதல் ஆரம்ப காலம் தொட்டே இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப அது எந்த அளவுக்கு உருமாற்றம் பெற்று -  எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பது உண்மையில் ஆச்சரியத்தைத் தருகிறது.  

இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பால்,  தற்போது மார்க்கெட்டிங் பல வழிகளில், பல உத்திகளில் கையாளப்படுகிறது. மார்க்கெட்டிங்கிற்கு  டிஜிட்டல் மீடியாக்களே பெரிதும் உதவுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் பெரும்பாலும் ஒரு தனி அறிவியலாகவே கருதப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை  மார்க்கெட்டிங் துறை தற்போது பயன்படுத்தி வருகிறது.  

உதாரணமாக,  இன்று இணையத்தில் நாம் ஒரு பொருளைத் தேடினால், முகநூல், இமெயில் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதுதொடர்பான விற்பனை விளம்பரங்கள் நம் கண்முன்னே அடிக்கொருமுறை காட்டப்படுகின்றன. நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பயன்படுத்தப்படுவதே இதற்குக் காரணம் . இதுபோன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட ஒருவருக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொண்டு, அவர் பயன்படுத்தும் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவை தொடர்பான விளம்பரங்களைத் தோன்ற வைக்கிறது. இது டிஜிட்டல் மார்கெட்டிங்கின் ஒரு பகுதி மட்டுமே.  

ஒரு தயாரிப்பின் தரம், விலை, அதுகுறித்த சேவைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலமாகவே விற்பனையை அதிகரிக்க முடியும். அதிலும் இந்த சேவைகள் எல்லாம் எளிதாக வாடிக்கையாளர் 

அணுகும் முறையில் செய்வதற்கே டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவுகிறது. அவரவர் தயாரிப்பு, பணவசதிக்கு ஏற்ப இந்த சந்தைப்படுத்துதலுக்கு இன்று 3டி பிரிண்டிங் முதல் செயற்கை நுண்ணறிவு வரை அனைத்து தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை மேம்படுத்தும் புதிய வழிமுறைகள்:

தயாரிப்பின் அடையாளம்:

ஒரு தயாரிப்பின் தரம், சேவையின் மூலமாகக் கிடைக்கும் வாடிக்கையாளரின் அனுபவம் அனைத்து வணிகத்துக்கும் தேவை. வாடிக்கையாளர்களின் சிறந்த அனுபவங்களே வணிகத்தை வளப்படுத்துகின்றன. அந்த வகையில் உங்களுடைய தயாரிப்புக்கான ஓர்  அடையாளத்தை உருவாக்க வேண்டும். உதாரணமாக ஃப்ரைடு சிக்கன்  என்றால் கே.எப்.சி  என்பது போல  உங்களுடைய தயாரிப்பின் சிறப்பம்சத்தை வைத்து மார்க்கெட்டிங் செய்யும்போது உங்கள் தயாரிப்புக்கான ஓர் அடையாளம் உருவாகும்.  

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பத்தின் மூலமாக மக்களை எளிதில் அணுகும் சூழ்நிலை இருப்பது அனைவரும் அறிந்ததே. இணையம் வழியாகவே தயாரிப்பை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து, வாடிக்கையாளர்களின் குறைகளை பதிவிடச் செய்து அதனை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைன் வழியாகவே செய்யும் வழிவகை வந்துவிட்டது.  

கரோனா தொற்று காலத்தில் மட்டுமின்றி,  நகரங்களில் வசிக்கும் மக்கள் நேரமின்மை காரணமாக இப்போது நேரடியாக கடைக்குச் செல்வதற்குப் பதிலாக இணையத்தில் தேடி வீட்டில் இருந்து பெறுவதையே அதிகம் விரும்புகின்றனர். எனவே, நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை அனைத்து சேவைகளுக்கும் எளிதில் அணுகுங்கள். 

பொறியியல் நுணுக்கம்: 

தயாரிப்புகளின் தரத்தைப் பயன்படுத்த சிறந்த பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவது தயாரிப்பின் தரத்தை  தொடர்ந்து அதிகரிக்கும். மேலும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் தயாரிப்பில் புதுமையை புகுத்துவது வாடிக்கையாளரைக் கவரும். உங்களுடைய புதுமையையும் மறக்காமல் விளம்பரப்படுத்துங்கள். 

விளம்பரங்கள்: 

தொலைக்காட்சி, இணையம், சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரங்களைப் பார்த்துதான் பலரும் ஒரு பொருளை வாங்குகின்றனர். விளம்பரம் உங்கள் தயாரிப்போடு நன்றாக தொடர்புடையதாகவும்   வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். பழங்கால கதைகளைத் தொடர்புபடுத்தி அல்லது சமூகப் பிரச்னைகளை தொடர்புபடுத்தி என வித்தியாசமான முறையில் விளம்பரங்கள் இருக்கும்பட்சத்தில் அது மக்களின் கவனத்தைப் பெற்றுவிடும். 

பிரபலங்களையும் பயன்படுத்துங்கள்: 

மார்க்கெட்டிங் துறையில் சமூக வலைதளங்கள் ஒரு முக்கிய ஊடகமாக மாறிவரும் நிலையில், அதன் இன்னொரு பிரிவாக இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பிரபலங்களைப் பயன்படுத்தி அவர்களின் மூலமாக தங்களுடைய தயாரிப்பை, சேவைகளை விளம்பரம் செய்து சந்தைப்படுத்தும்முறை அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட விளம்பரங்களினால் பல தயாரிப்புப் பொருள்கள் நல்ல வரவேற்பையும் விற்பனையையும் பெற்றுள்ளன. 

வாடிக்கையாளர்  தொடர்பு: 

இவை தவிர வாடிக்கையாளர்களுக்கான சேவைகள், பொருள்கள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட வேண்டும். ஒரு பொருளின்  விற்பனை தொடர்பான சேவைகளை விரைந்து அளிக்க வேண்டும். மேலும் உங்கள் தயாரிப்பின் தரம், சேவை குறித்து வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்று அதில் குறை இருப்பின் உடனடியாகச் சரிசெய்வது அவர்களுக்கு உங்கள் தயாரிப்பின் மீது நன்மதிப்பை ஏற்படுத்தும்.  

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை ஒவ்வொரு முறையும் புதுப்புது முறைகளில் கையாள வேண்டும். தயாரிப்பை விளம்பரப்படுத்த அனைத்துவகை சமூக ஊடகங்களையும் முறையாக பயன்படுத்தினாலே போதுமானது. 

இன்றைக்கு வெற்றி நிறுவனங்களாகத் திகழும் பலவும் மார்க்கெட்டிங் துறையில் சிறந்த அனுபவம் பெற்றவையே. எனவே, நீங்களும் உங்கள் தயாரிப்புக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை உடனே தொடங்குங்கள்!
கோமதி எம்.முத்துமாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com