செவ்வாயிலிருந்து ஒரு மெயில்!
By -எஸ்.ராஜாராம் | Published On : 10th August 2021 06:00 AM | Last Updated : 10th August 2021 06:00 AM | அ+அ அ- |

பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற கிரகத்தைத் தேடும் படலத்தில், வளிமண்டலம் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாகக் கூறப்படும் ஒரே கிரகம் செவ்வாய்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் எப்போதும் தங்களது கண்களை செவ்வாயில் பதித்துள்ளனர். பிரபஞ்சத்தின் இயக்கத்தையே மாற்றியமைக்கக் கூடிய எந்த ஒரு கண்டுபிடிப்பாவது அந்தக் கிரகத்தில் நிகழாதா எனக் காத்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் சாமானியர்களின் ஆர்வத்தையும் தூண்டுவதாகவே உள்ளது. அதனால்தான் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அவ்வப்போது செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
அவ்வாறு தனது ரெகொன்னாய்சன்ஸ் ஆர்பிட்டரால் எடுக்கப்பட்ட 3 புகைப்படங்களை அண்மையில் நாசா பகிர்ந்தது.
"செவ்வாயிலிருந்து ஒரு மெயில்' என்ற விளக்கத்துடன் வெளியிடப்பட்ட அந்தப் புகைப்படங்கள் மனதை மயக்கும் வகையிலும், செவ்வாயின் நிலவியல் அமைப்பைப் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.
முதல் புகைப்படமானது ஜிஜி பள்ளத்தாக்கிற்குள் உருவான ஒரு பாறை அடுக்காகும். இரண்டாவது புகைப்படம் ஒரு துருவ குன்றைக் காட்டுகிறது. இது சுவாரஸ்யமான சில வடிவங்களை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது புகைப்படமானது செவ்வாயின் தென் துருவத்தில் பனி படர்ந்திருப்பதைக் காட்டுகிறது.
செவ்வாயில் தரையிறங்கியுள்ள நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் அங்கிருந்து பாறை மாதிரிகளைச் சேகரிக்க காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதமே அந்தப் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாறைகளை பெர்சிவரன்ஸ் ரோவரின்
இயந்திரக் கரங்கள் சேகரிக்கும் புகைப்படமும் வரக்கூடும். அது இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.