தீர்வு காணும் திறமை!

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதே இளைஞர்கள் பலரது விருப்பமாக உள்ளது. அதற்காகப் பல்வேறு நிறுவனங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
தீர்வு காணும் திறமை!

நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதே இளைஞர்கள் பலரது விருப்பமாக உள்ளது. அதற்காகப் பல்வேறு நிறுவனங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கணினியைத் திறம்பட இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் விஷயங்களை இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர். 

ஆனால், அவர்கள் கவனம் செலுத்தாத விஷயங்களில் ஒன்று பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன். 

பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன்:

அந்தத் திறனானது தற்போது அனைத்து நிறுவனங்களாலும் பரிசோதிக்கப்படு
கிறது. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன் கொண்ட இளைஞர்களையே பணிக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன. 

நிறுவனங்களில் பிரச்னைகள் தோன்றுவது இயல்பு. அந்தப் பிரச்னைகளுக்குத் தகுந்த தீர்வு காணும் நபர்களையே வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் விரும்பும். பட்டப் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறியிருந்தாலும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது சற்று சிரமமாகவே உள்ளது. 

எனவே, பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. 

என்ன பிரச்னை... தெளிவு தேவை:

பிரச்னைகளை முறையாக எதிர்கொண்டு அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டாலே போதுமானது. அந்தத் தீர்வையும் தனி ஆளாக இருந்து கண்டறிய வேண்டிய அவசியமில்லை. பலரிடம் கருத்துகளைக் கேட்ட பிறகு தீர்வைக் காண வேண்டும். அதற்கான திறனை 
வளர்த்துக் கொள்ள வேண்டும். 

முதலில் பிரச்னை குறித்த அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பிரச்னை என்ன, அதற்குத் தீர்வு காண வேண்டியது ஏன் என்பதற்கான விடையைக் கண்டறிய வேண்டும். பிரச்னைகளைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்து கொண்டால் மட்டுமே தீர்வு காண்பது எளிதாகும். அப்போதுதான் அந்தப் பிரச்னைக்குத் தகுந்த தீர்வையும் அளிக்க முடியும். 

ஆரம்பத்தில் தீர்வுகளைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசிக்கத் தேவையில்லை. முதலில் என்ன பிரச்னை, அது எதனால் ஏற்படுகிறது என்பது தொடர்பான தகவல்களைத் திரட்ட வேண்டும். 

ஏன் தீர்வு காண வேண்டும்?

அதற்குப் பின்பு,  போதிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதாவது, இந்தப் பிரச்னையை ஏன் தீர்க்க வேண்டும், அதற்குத் தீர்வு காண்பதன் மூலமாக என்ன நடக்கும் என்பது போன்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். 

குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரும் போதுதான் அதற்கேற்ற சரியான தீர்வை வழங்க முடியும். இப்போதும் கூட பிரச்னைக்கான தீர்வு குறித்து சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. நிறுவனத்தின் ஒட்டுமொத்த இலக்கு, இந்தப் பிரச்னையால் அந்த இலக்கை அடைவதற்கு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள தடங்கல்கள்  குறித்து மட்டும் ஆராய்ந்தால் போதுமானது. 

பிறர் கருத்துகளையும் கேளுங்கள்...

அந்த விஷயங்களைச் சேகரித்த பிறகு, சக பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். பிரச்னை குறித்து அவர்களிடம் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்கு என்ன மாதிரியான தீர்வுகளை வழங்க முடியும் என்பது தொடர்பாக அவர்களிடம் ஆலோசனை நடத்தலாம். 

அந்த சமயத்தில் அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும். சிறிய தீர்வு, பெரிய தீர்வு என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நபர்களும் தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்த பிறகு, அனைத்து கருத்துகளையும் பகுதி வாரியாகப் பிரிக்க வேண்டும். 

தீர்வுகளிலும் பலவகை!

பிரச்னையை சரிசெய்வதற்கான தற்காலிகத் தீர்வுகள், நிரந்தரத் தீர்வுகள் என வகுக்க வேண்டும். மேலும், நீண்ட நாள்களுக்குப் பலன் தரக்கூடிய தீர்வுகள், குறைந்த காலத்துக்கு மட்டுமே பலன் தரக் கூடியவை எனவும் பிரித்துக் கொள்ள வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமில்லாத கருத்துகளை ஒதுக்கிவிட வேண்டும். ஒவ்வொரு தீர்வையும் நடைமுறைப்படுத்தினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தீவிரமாக ஆராய வேண்டும். 

அவ்வாறு ஆராய்ந்து பிரச்னைகளுக்கான பல்வேறு தீர்வுகளைப் பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதையடுத்து, சரியான தீர்வைக் கண்டறிய வேண்டும். எந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் என்பதைத் தீர ஆராய்ந்த பிறகு அந்தத்  தீர்வை நடைமுறைப்படுத்த  வேண்டும். 

நடைமுறைப்படுத்துங்கள்!

அத்தீர்வை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது, அவர்களுக்கான பணிகள் என்ன, எப்போது அப்பணிகளை முடிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களைத் தயாரித்து சக பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொறுப்பை உரிய நபர்களிடம் ஒப்படைப்பது மட்டுமல்லாமல், அவர்களுடய வேலையை சரியாகக் கவனித்து வருகின்றனரா என்பதையும்  குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். 

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது என்பது சிக்கலான விஷயமல்ல. சரியான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக எந்தப் பிரச்னைக்கும் எளிதில் தீர்வு காண முடியும். அத்திறனை வளர்த்து வாழ்வில் வெற்றி காண்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com