தேவைக்கேற்ற கல்வி!

நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் கல்வி கற்க வேண்டும் என்று பெருமளவில் விருப்பப்படுகிறோம்.
தேவைக்கேற்ற கல்வி!


நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களும் கல்வி கற்க வேண்டும் என்று பெருமளவில் விருப்பப்படுகிறோம். பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடை நிற்றலைக் குறைப்பதற்காக மதிய உணவுத் திட்டம், இலவசப் பாடப் புத்தகங்கள், சைக்கிள், இலவசப் பை எனப் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. என்றாலும், பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் பலர் பட்டப் படிப்பைத் தொடர்வதில்லை. 

கல்லூரியில் சேரும் மாணவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. அந்த விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பட்டப் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும். 

நாட்டின் தற்போதைய பெரும் பிரச்னை வேலையின்மையும் வேலையிழப்பும். கரோனா தொற்று பரவல் காரணமாக வேலையிழப்பு அதிகரித்துள்ளது. பட்டப் படிப்பை நிறைவு செய்த இளைஞர்களில் பலர் போதிய வேலைவாய்ப்பின்றி உள்ளனர். 

அதிலும், கிராமப் பகுதிகளை விட  நகரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களே அதிக அளவில் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். 

நகரப் பகுதிகளில் 20 வயது முதல் 24 வயதுக்குள்பட்ட இளைஞர்களில் சுமார் 38 சதவீதத்தினர் வேலையின்றி இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை விட  பெண்களிடையே வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. 

வேலையின்மைப் பிரச்னைக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இளைஞர்கள் பட்டப் படிப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், பணியிடத்துக்குச் செல்லும்போது கல்வியறிவுடன் சேர்த்து மற்ற கூடுதல் திறன்களும் தேவைப்படுகின்றன. பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திறன், சக பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் திறன், குழுவுடன் ஒத்துழைத்து செயல்படுதல் உள்ளிட்டவையும் இளைஞர்களுக்குக் கட்டாயம் தேவைப்படுகின்றன. 

அத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்வதில் இளைஞர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும்போது கல்வி கற்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். 

பட்டப் படிப்பை முடித்தாலும், துறைசார்ந்த நுண்ணறிவு இளைஞர்களிடம் காணப்படாததால் அவர்களைப் பணிக்கு அமர்த்துவதில்லை என்று நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குறைபாட்டைப் போக்குவதற்கு, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிப் பாடங்களுக்கான பாடத்திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். 

கல்லூரிகளில் எந்த மாதிரியான பாடங்கள், தொழில்நுட்பங்கள் இளைஞர்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, பாடத்திட்டங்களை அரசு உருவாக்கலாம். இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் பாடத்திட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கல்வி கற்பிக்கும் முறைகளில் மிகப் பெரிய மாற்றங்கள் புகுத்தப்பட வேண்டும். பள்ளி ஆசிரியர்களும் கல்லூரி பேராசிரியர்களும் மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்கள் அறிவைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்து பாடங்களைக் கற்பிப்பதில் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

பட்டப் படிப்பின்போதே மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்லூரிகளும் அரசும் மேற்கொள்ளலாம். கல்வியின் தரத்தை அரசு அதிகரிக்க வேண்டும். மனப்பாடம் செய்யும் முறையைத் தவிர்த்து நடைமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமாக போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் திறம்படச் செயல்பட்டு வேலையைப் பெற முடியும். 

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

முக்கியமாக, இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அவற்றில் இணைந்து இளைஞர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம். 

வாழ்வாதாரத்தின் மையமாக வேலை உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே வாழ்க்கையைக் கட்டமைக்க முடியும். உரிய வேலையைப் பெறுவதற்குத் தேவையான செயல்பாடுகளை இளைஞர்களும், அவர்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகளை அரசுகளும் பல்கலைக்கழகங்களும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com