தகவல் தொழில்நுட்பத்துறையா?? வேலை நிச்சயம்!
By வி.குமாரமுருகன் | Published On : 24th August 2021 06:00 AM | Last Updated : 24th August 2021 06:00 AM | அ+அ அ- |

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக உலகமே இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. எல்லா தொழில் துறைகளும் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன.
ஆனால் ஒரே ஒரு துறை மட்டும் முந்தைய ஆண்டுகளை விட வேகமாக வளர்ந்து வருகிறது. அதுதான் ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறை. இதன் காரணமாக இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இத்துறையில் பணியாற்றத் தேவையான மனிதவளம் தற்போது கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
2020 -21 ஆண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி இதை விட அதிகரிக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும் நிகழாண்டு இத்துறையின் வணிகம் 150 பில்லியன் டாலராக இருக்கும் எனவும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 1.9 சதவீதம் அதிகமாகும்.
இதன் காரணமாக, இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் இத்துறையில் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், இத்துறையில் பணியாற்றுபவர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கிருந்தும் பணியைச் செய்ய முடியும் என்ற நிலை இருப்பதால் இத்துறையில் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக வழக்கமான பணிகளை விட கூடுதல் பணிகள் நடைபெற்றதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணியாளர்களின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்காக நிறுவனங்கள் அதிக செலவுகளைச் செய்ய நேர்ந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது வணிகம் அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல் மூன்று ஆண்டுகளுக்கு முன் 8 சதவீத டிஜிட்டல் திறன்கொண்ட ஐடி பணியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 26 சதவீதம் பேர் டிஜிட்டல் திறன் கொண்ட பணியாளர்களாக தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களைப் பயன்படுத்தி அவர்கள் வீட்டில் இருந்தே பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்பதால், அலுவலகம் உள்ளிட்ட செலவினங்கள் முற்றிலும் குறைந்து விட்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய பொருளாதாரத்தை இத்துறை தூக்கிப் பிடிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்துறையில் பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றன.
எனவே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பயில நினைப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாகப் பயின்றால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.