வீட்டிலிருந்து பணி... தேவை... தரவு பாதுகாப்பு!

கரோனா பெருந்தொற்று காரணமாக, வீடுகளில் இருந்து ஆன்லைனில்  அலுவலகப் பணிகளை ஆற்றி வருகிறார்கள்.
வீட்டிலிருந்து பணி... தேவை... தரவு பாதுகாப்பு!

கரோனா பெருந்தொற்று காரணமாக, வீடுகளில் இருந்து ஆன்லைனில் அலுவலகப் பணிகளை ஆற்றி வருகிறார்கள். வீடுகளில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை இணையவழியாகச் செய்வதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அதே சமயம், வீட்டில் இருந்து பணியாற்றும்போது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் பாதிப்புக்கு உள்ளாகிவிடுவதை மறுப்பதற்கில்லை.
அண்மையில் எச்.பி. நிறுவனம் நடத்திய ஆய்வில், வீட்டில் இருந்து பணியாற்றும்போது, பணிக்கு இடையே அலுவலகக் கருவிகளில் (மடிக்கணினி, இணையதொடர்பு உள்ளிட்டவை) சொந்த வேலைகளைச் செய்வதாக  70 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.  அலுவலகப் பணிகளை சொந்த கருவிகளில் செய்து வருவதாக 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். தனியுரிமை மற்றும் பாதுகாப்புசார்ந்த ஆபத்து நிறைந்திருப்பது இந்த  ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.  
அலுவலகங்களில் பணியாற்றும்போது, நாம் பயன்படுத்தும் கருவிகளில் தரமான பாதுகாப்பு மென் பொருள்கள், சிஸ்டங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். வீடுகளில் அது போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருக்காது என்பதுதான் கவலை தரக்கூடிய விஷயமாகும். தரவு பாதுகாப்புக்கான கவசங்கள் இல்லாத சூழலில்,  லாகின், பாஸ்வேர்டு போன்றவை திருடப்பட வாய்ப்புகள் உள்ளன.  
ஆபத்து: 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு உலக அளவில் சைபர் தாக்குதல்கள் 238 சதவீதம் அதிகரித்துவிட்டதாகவும் எச்.பி. நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு தெரிவிக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு   சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாது, அவை நவீனமயமாகியுள்ளன என்பது கவலை அளிக்கக் கூடியதாகும். இந்தப் பின்னணியில், கார்ப்பரேட் தரவுகளைப் பாதுகாப்பதற்கு வழக்கமான பாதுகாப்பு அணுகுமுறைகளை மட்டும் கடைப்பிடிப்பது பயன் தராது.  
மேலும் நிறுவன ஊழியர், வாடிக்கையாளரின் தரவுகள் மட்டுமல்லாது, நிறுவனத்தின் தனியுரிமையையும்  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, 
நிறுவனத்திற்கு மட்டுமல்ல,  வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும் இருக்கிறது. 
அப்படியானால், வீட்டில் இருந்து பணியாற்றும்போது எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களைச் சமாளிப்பது எப்படி?
அதிநவீன பாதுகாப்புத் திறன்கள்: வீட்டில் இருந்து பணியாற்றும்போது கனெக்டிவிட்டி மற்றும் கொலாப்ரேஷன் டூல்கள் மிகவும் அவசியமாகும். பணியாளரின் கருவி மற்றும் நிறுவனத்தின் தரவுகளைப் பாதுகாக்க அதிநவீன பாதுகாப்புத்திறன்கள் அல்லது கருவிகளைப் பயன்படுத்துவதும் அவசியம். கிளவ்ட் அடிப்படையிலான தரவுப் பரிமாற்ற முறை ரகசிய குறியீட்டு முறையுடன் வருகின்றன. லாக்மெல்ன்ஸ் கோ டூ மீட்டிங் வீடியோ கான்பிரன்ஸிங் டூல் டி.எல்.எஸ். என்கிரிப்ஷனோடு வருவதால், சாட், செஷன், கண்ட்ரோல் டேட்டா உள்ளிட்டவை பாதுகாக்கப்படும். நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான தகவல்களைப் பாதுகாக்க இது உதவும்.
ரோபஸ்ட் பாஸ்வேர்டு மேலாண்மை:
வீட்டில் இருந்து பணியாற்றும்போது பல்வேறு மென்பொருள்கள், இணையதளங்கள் பயன் படுத்தப்படுவது வழக்கம். இவற்றைப் பயன்படுத்த பல்வேறு கணக்குகளைப் பயன்படுத்த நேரிடும். இத்தனை கணக்குகளையும் தினமும் பயன் படுத்தும்போது எளிதில் நினைவில் வைக்கத்தக்க பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  
ஒரே பாஸ்வேர்டைப்  பல கணக்குகளிலும் பயன்படுத்தும்போது, தரவு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்க "லாக்மெல்ன்ஸ் லாஸ்ட்பாஸ்' என்ற பாஸ்வேர்டு மேலாண்மை டூலைப் பயன்படுத்தலாம். ஒரே ஒரு வலுவான பாஸ்வேர்டு வைத்துக் கொள்வதன் மூலம் எல்லாக் கணக்குகளையும் எளிதில் பராமரிக்க இயலும்.

வலுவான சைபர் பாதுகாப்பு:

ஆய்வில் தெரிவித்த தகவலின்படி சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் 95 சதம் மனித பிழைகளால் மீறப்படுகிறது. சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் ஏற்படும் அலட்சியத்தை சைபர் கிரிமினல்கள் தங்களுடைய குற்றச்செயல்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை. இதைத் தவிர்க்க, வலுவான சைபர் பாதுகாப்பு ஒழுங்கைப் பயன்படுத்த ஊழியர்களை நிறுவனங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்டுகளை வைத்திருக்க வேண்டும். சரி பார்க்கப்படாத இணைப்புகளைச் சொடுக்கக் கூடாது. சட்டப்பூர்வமான அல்லது முன் அனுமதியுடன் கூடிய அப்ளிகேஷன்கள் மற்றும் டூல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவான வைஃபை இணைப்பைப் பயன்படுத்தக் கூடாது. சொந்தக் கருவிகளை கண்காணிக்காமல் இருக்கக் கூடாது. இதற்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான பயிற்சி, தணிக்கை செய்யப்பட்ட டூல்கள் அவசியமாகும். ஒருவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தால், அதை உடனடியாக நிறுவனங்களுக்குத் தெரிவித்து, கண்காணிப்பைப் பலப்படுத்தவேண்டும்.

முன் அனுமதி கட்டாயம்:

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை அணுகும்போது, அதற்கு கடினமான கட்டமைப்புகள் மற்றும் முன் அனுமதியைக் கட்டாயமாக்க வேண்டியது அவசியம்.  இதன்மூலம் தரவுகள் மற்றும் நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க இயலும். தகவல்களைப் பாதுகாக்க பல்லடுக்கு முன் அனுமதி அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். ஓடிபி, பயோமெட்ரிக் போன்ற பாதுகாப்பு அடுக்குகளைப் பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான கருவிகள்:

நிறுவனங்களின் தரவுகள் அல்லது தகவல் தொடர்பை உறுதிப்படுத்த செல்லிடப்பேசி அல்லது டேப்லெட்களைப் பயன்படுத்துவதை பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். குறிப்பாக, பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இவை தரவு பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்காது என்று கூறிவிட முடியாது. இதைத் தவிர்க்க, பணிக்கு பயன்படுத்தும் கருவிகளை அண்மைக்கால ஆபரேட்டிங் சிஸ்டம் (ஓ.எஸ்.), செக்யூரிட்டி மென்பொருள்களை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

அட்வான்ஸ்டு வி.பி.என்.:

வீட்டில் இருந்து வேலைசெய்வதற்கு வழக்கமான வன்பொருள் அடிப்படையிலான வி.பி.என்.களைக் கடந்து, கிளவ்ட்-அக்னாஸ்டிக் மற்றும் ஸ்கேலபிள் நெட்வொர்க் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உலகின் எந்தமூலையில் இருந்தும் ரிசோர்ஸ்கள், அப்ளிகேஷன்கள், இன்பர்மேஷன்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுக முடியும். பாதுகாப்பு ஆபத்துகளைத் தவிர்க்க, அதி நவீன பாதுகாப்புத் தீர்வுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் நிறுவனத்தின் தரவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடிவதோடு, பணியாளர்கள் நம்பகத்தன்மையுடன் பணியாற்ற இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com