தகவல் பாதுகாப்பு... வித்தியாசமான படிப்பு!

தகவல் பாதுகாப்பு... வித்தியாசமான படிப்பு!

எல்லாரும் செய்வதை விட வித்தியாசமாக எதையாவது செய்பவர்கள் எளிதில் மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள்.


எல்லாரும் செய்வதை விட வித்தியாசமாக எதையாவது செய்பவர்கள் எளிதில் மற்றவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். அதேபோன்று வழக்கமான படிப்புகளைப் படித்து வேலைக்காகக் காத்திருப்பதை விட வித்தியாசமான படிப்புகளைப் படித்து வேலை வாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.

இன்று உலகமே இணைய யுகமாக மாறிவிட்டது. அதற்கேற்ப இணைய வழிக் குற்றங்களும் பெருகி விட்டன. கணினித் தொழில்நுட்பம் நொடிதோறும் வளர்ந்து வருகிறது. கடந்த நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் கூட பழைய  விஷயங்களாக மாறி வருகின்றன. இணைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக கணினி மென்பொருளை ஊடுருவி அழிக்கும் தொழில்நுட்பங்களும் பெருகி வருகின்றன.  கடவுச்சொற்களை தவறான வழிகளில் பயன்படுத்தி தரவுகளைத் தெரிந்து கொள்ளுதல், அடிப்படைத் தரவுகளில் மாற்றங்களைச் செய்தல், பணப் பரிமாற்றத்தில் குளறுபடிகள்செய்தல், வைரஸ் புரோகிராம்களை உருவாக்கி கணினிசெயல்பாட்டை அடியோடு சீர்குலைத்தல் போன்ற குற்றச் செயல்களும்வளர்ந்து வருகிறன.

இப்படி இணையச் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் நடந்தேறி வருகின்றன. அத்தகைய பாதிப்புகளை  செய்ய விடாமல்தடுப்பதற்கான பணிக்கு அறிவு சார் மனிதவளம் குறைவாகவே உள்ளது. இப்படி இணைய வழிக் குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு பாதுகாப்பு பகுப்பாய்வாளர்கள் (செக்யூரிட்டி அனலிஸ்ட் ) பெருமளவு தேவைப்படுகிறார்கள். ஆண்டுதோறும் 80,000 பணி வாய்ப்புகள் இதில் உள்ளதாக வேலைவாய்ப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவல்களைத் திருடுபவர்கள் பெருகியுள்ள இக்காலத்தில் , தரவுகளைத் திருடாமல் பாதுகாப்பதுதான் இத்தகைய எத்திக்கல் ஹேக்கர்ஸ் மற்றும் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களின் முக்கிய பணியாகும். கணினி மென்பொருளில் தீய வைரஸ் புரோகிராம் மூலம் ஏற்படும் மாற்றங்களைத் தடுத்தல்,  அப்படி ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களைச் சரி செய்தல், தரவுகளின்உண்மைத் தன்மையைப் பாதுகாத்தல், சாப்ட்வேர் பயன்பாடுகளின் திருட்டைத்தவிர்த்தல், இழந்த தகவல்களை மீட்டல், இணையவழி குற்றச் செயல்பாடுகளில் தடயவியல் நிபுணராகப் பணியாற்றுதல் போன்ற பணிகளைச் செய்வதற்கு இத்தகைய செக்யூரிட்டி அனலிஸ்டுகளின் பணி முக்கியமானது.

கணினியில் சேகரித்து வைத்திருக்கக் கூடிய தகவல்களையும், தரவுகளையும் பாதுகாப்பது என்பது அதன் செயல்பாட்டினை மதிப்பீடு செய்வதற்கு உதவுகிறது. இதில் அதிக அளவில் பணி வாய்ப்புகள் உள்ளன.

ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் நெட்வொர்க் செக்யூரிட்டி (எஃப்என்எஸ்), ஃபண்டமெண்டல்ஸ்  ஆஃப் இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி (எஃப்ஐஎஸ்), ஃபண்டமெண்டல்ஸ்  ஆஃப் கம்ப்யூட்டர் ஃபோரென்சிக் (எஃப்சி எஃப்) பயின்றவர்கள் தகவல் பாதுகாப்பு தொடர்பான அனலிஸ்டுகளாகப் பணிபுரிய முடியும்.

அது போன்று  செயலி பயன்பாடு பாதுகாப்புப் பிரிவிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. கணினியின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு செயலி உதவுகிறது. அச்செயலிகளில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். அதைத்  தடுப்பதும்  ஊடுருவுகிறவர்களால் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்வதுமே செயலி பயன்பாடு பாதுகாப்பு பணியாளரின் பணிகளாகும். சர்டிஃபைடு செக்யூர் புரோகிராமிங் கோர்ஸ்  படித்தவர்கள் இப்பணியில் சேர்ந்து பணியாற்ற முடியும்.

கணினி பாடப் பிரிவில் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை அறிவியல் அல்லது பொறியியல் பட்டப் படிப்பில், கணினி பாடப் பிரிவை முதன்மைப் பாடமாகக் கொண்டு படித்தவர்கள், இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் சர்ட்டிஃபைடு எத்திகல் ஹேக்கெர்,  கம்ப்யூட்டர் ஹேக்கிங் ஃபோரென்சிக்,  இன்வெஸ்டிகேட்டர் சர்ட்டிஃபைடு செக்யூரிட்டி அனலிஸ்ட் போன்ற படிப்புகளைப் படித்தால் பணி வாய்பைப் பெற முடியும்.  இசி - கவுன்சில் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தியாவில்  நெறி ஊடுருவாளர் பணியிடத்துக்கான பல வகையான சான்றிதழ் படிப்புகளைக் கற்றுத் தருகின்றன.
பலதரப்பட்ட இயக்க முறைமை குறித்த அறிவு, பல்வேறு கணினி மொழிகள் குறித்த தெளிவு, வலை  பயன்பாடு குறித்த புலமை போன்றவை இருந்தால் மிக எளிதில் இத்துறையில் மிக உயர்ந்த இடத்தை எட்ட முடியும்.
தற்போது பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், மென்பொருள் வடிவில் தகவல்களைச்  சேகரித்து வைத்து பராமரிக்கும் அரசு,  தனியார்நிறுவனங்கள், தானியங்கி சேவைகளைத் தரும் அமைப்புகள், ராணுவம், போக்குவரத்து போன்ற எண்ணற்ற துறைகளில் நெறி ஊடுருவாளர் மற்றும் பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களுக்கான  வேலைவாய்ப்புகள் பெருகி  வருகின்றன. அரசு துறையைப் பொருத்த வரை இணைய வழி குற்றச் செயல்களைக் கண்டறியும் தடயவியல் நிபுணராகும் வாய்ப்புகளும் உள்ளன.
அதுபோன்று,   செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட், இன்சிடென்ட் ஹேண்ட்லர், செக்யூரிட்டி அதிகாரி, செக்யூர் கணினி பயனாளர், செக்யூரிட்டி என்ஜினியர், செக்யூரிட்டி கன்சல்டண்ட், இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ஜினியர் , ஃபோரென்ஷிக் இன்வெஸ்டிகேட்டர் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன. 
அதையும் தாண்டி தனியாக ஒப்பந்த அடிப்படையில் சைபர் துறையில் குற்றச் செயல்களைக் கண்டறியும் பணி வாய்ப்புகளும் உள்ளன. 
எனவே, மற்றவர்களை விட வித்தியாசமாகச் சிந்தித்து இத்தகைய கல்வியைத் தேர்வு செய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com