சுற்றுச்சூழல் பாதுகாப்பு... இளைஞர்களின் பங்களிப்பு!

நாம் வாழும் பூமியை பருவநிலை மாற்றம் அதிக அளவில் மாற்றி வருகிறது. அதீத கனமழை, நீடித்த பருவமழைக் காலம், அதிகரிக்கும் புயல்களின் எண்ணிக்கை, பனிப்பாறை உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரித்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு... இளைஞர்களின் பங்களிப்பு!

நாம் வாழும் பூமியை பருவநிலை மாற்றம் அதிக அளவில் மாற்றி வருகிறது. அதீத கனமழை, நீடித்த பருவமழைக் காலம், அதிகரிக்கும் புயல்களின் எண்ணிக்கை, பனிப்பாறை உருகுதல், கடல்நீர் மட்டம் அதிகரித்தல் உள்ளிட்டவை பருவநிலை மாற்றத்தின் முக்கிய விளைவுகளாக உள்ளன. 

கடந்த தலைமுறையினரால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்புரட்சி நடவடிக்கைகளும் தற்காலத் தலைமுறையினர் மேற்கொண்டு வரும் கேடு விளைவிக்கும் நடைமுறைகளும் பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. ஆனால், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளப் போவது எதிர்கால  தலைமுறையினரே. 

முக்கியமாக, இளைஞர்கள் மத்தியில் பருவகால மாற்றம் தொடர்பான அச்சம் அதிக அளவில் காணப்படுகிறது. சாலைகளில் அதிகரிக்கும் வாகனங்களின்  எண்ணிக்கை, நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் கட்டுமானங்கள், வனப்பரப்பு குறைதல், நிலம், நீர், காற்று உள்ளிட்டவற்றின் மாசுபாடு அதிகரிப்பது உள்ளிட்டவை இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. 

வழக்கமான பருவமழைக் காலம் தீவிரமாகி வருவதையும், அதீத மழைப்பொழிவு காரணமாக நகரங்கள், கிராமங்கள் என பல பகுதிகள் வெள்ளக்காடாகி வருவதையும் இளைஞர்கள் காண்கின்றனர். இவையனைத்தும் பருவநிலை மாறுபாடு காரணமாகவே நிகழ்கின்றன என்பது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. 

உலகில் தொழில் புரட்சி தொடங்கிய காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது புவியின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வை நடப்பு நூற்றாண்டுக்குள் 2 டிகிரி செல்சியஸூக்குக் கட்டுப்படுத்த கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் பருவநிலை மாநாட்டில் சர்வதேச நாடுகள் முடிவெடுத்தன.

அதையடுத்து ஒவ்வோர் ஆண்டிலும் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வெற்று வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வருகின்றனர்; உலகின் எந்த நாடும் பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவில்லை என பல இளைஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

அண்மையில் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நிறைவடைந்தது. அதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். பருவநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள தீவு நாடுகள், கடலோரத்தில் உள்ள நாடுகள் உள்ளிட்டவை பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தின. அதற்கு வளர்ந்த நாடுகளிடம் இருந்து நிதியுதவி அவசியம் எனவும் அந்நாடுகள் தெரிவித்தன. 

கிளாஸ்கோ மாநாடு நடைபெற்ற போதே பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். எதிர்காலத்தைக் காப்பதற்காகத் தற்கால தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், 

பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

பருவநிலை மாற்ற விவகாரத்தில் அரசுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் அதே வேளையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கான சில நடவடிக்கைகளை இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டும். நெகிழிப் பொருள்களின் (பிளாஸ்டிக்) பயன்பாட்டை நாம் முற்றிலுமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீட்டில் குப்பைகள் முறையாகத் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி ஊழியர்களிடம் சேர்க்கப்படுவதை இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் அவற்றை முறையாக மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வருவதால், மின்னணுக் கழிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 

ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருள்களை அடிக்கடி மாற்றி புதியதை வாங்குவதை இளைஞர்கள் தவிர்க்க 
வேண்டும். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுபோக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். 

ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடுவது தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிக்க வைக்கும். அது நாம் உருவாக்கும் குப்பைகளின் எண்ணிக்கையை அதிகரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும். எனவே, எளிமையான வாழ்வைக் கைக்கொள்ள இளைஞர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.  

சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை நாமும் தொடர்ந்து மேற்கொள்வதோடு நம்மைச் சுற்றியுள்ளோரையும் அதைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்றவர்கள் மீது மட்டும் குற்றஞ்சாட்டாமல், நாமும் துரிதமாக செயல்படுவோம்; சுற்றுச்சூழலைக் காப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com