மக்களை ஈர்க்கும் மினியேச்சர் கலை!

மினியேச்சர் கலை என்பது பரவலாக அறியப்படாத ஒரு கலையாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் மினியேச்சர் கலைஞர்கள் உள்ளார்கள்.
மக்களை ஈர்க்கும் மினியேச்சர் கலை!

மினியேச்சர் கலை என்பது பரவலாக அறியப்படாத ஒரு கலையாக இருக்கிறது. கேரள மாநிலத்தில் அதிக அளவில் மினியேச்சர் கலைஞர்கள் உள்ளார்கள். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட ஊர்களில் மினியேச்சர் கலைஞர்கள் உள்ளார்கள்.

 நுட்பமான திறமை உள்ளவர்கள் இக்கலையில் சிறந்து விளங்கலாம்.  

கற்பனை, கலைநுட்பத்திறமை ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருள்களைத் 
தயாரிப்பதே இக்கலையின் முக்கிய அம்சமாகும்.

சமகாலத்தில் அறிவியல் இன்றி ஓரணுவும் அசையாது என்பதால், இக்கலையின் ஒரு பகுதியாக  அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவையும் இணைந்துவிட்டது என்று கூறலாம்.    ஆனால் எந்த கலையானாலும் அதற்குரிய கலைத்தன்மை இருக்க வேண்டும். 

அழகியல் பார்வை கொண்ட ஒருவர் கலைத்திறனுடன் ஒரு படைப்பை உருவாக்கும் செயல்திறன் பெற்றிருந்தால் அந்த குறிப்பிட்ட கலைசார்ந்த பொருள்களை உருவாக்க முடியும்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த  இளைஞர் ஒருவர் மினியேச்சர் கலையின் அடிப்படையில் பேருந்து, லாரி, டிப்பர்லாரி, வீடு உள்ளிட்டவற்றைச் செய்து வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தி வருகிறார்.  அவர் எஸ். திலீப்குமார்.

அவரிடம் மினியேச்சர் கலை குறித்து நாம் பேசியதிலிருந்து...

""கேரள மாநிலம் வயநாடு சென்றிருந்தபோது, இந்த மினியேச்சர் கலையில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை பார்த்தேன். அவற்றில் ஒரு சில பொருள்களை வாங்கினேன். பின்னர் அவற்றைப் போல நாமும் தயாரித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.  இணையதளங்களில் மினியேச்சர் கலை குறித்து தெரிந்து கொள்ளத்  தேடினேன்.

மினியேச்சர் கலைஞர்கள் ஒரு கட்செவி அஞ்சல் குழு அமைத்துள்ளார்கள். அக்குழுவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

பின்னர் பெங்களூர், சென்னை ஆகிய ஊர்களிலிருந்து ஆன்லைன் மூலம் மூலப்பொருள்களை வாங்கி, தொடக்கத்தில் ஒரு பேருந்து தயாரித்தேன். முதன்முதலாகத் தயாரிக்கும்போது அது ஒரு  சவாலாக இருந்தது. ஏனென்றல் மினியேச்சர் கலை என்பது பெரிய உருவத்தை சிறிய உருவமாகத் தயாரிப்பது, சிறிய உருவமாக ஒரு பொருளைத் தயாரித்தாலும், பெரிய உருவத்தில் எவையெல்லாம் உள்ளதோ, அவை சிறிய உருவத்திலும் அமைக்க வேண்டும். உதாரணாக ஒரு பேருந்தினை, அதன் உருவம், தன்மை மாறாமல் உருவாக்கி, கையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு தயாரிக்க வேண்டும். அந்த தயாரிப்பில் பேருந்தில் உள்ள ஓட்டுநர் இருக்கை, பயணிகள் இருக்கை, ரேடியோ, மின்விளக்கு, படிகள், கைப்பிடிகள், சக்கரங்கள் என அனைத்தும் தத்ரூபமாக இருக்க வேண்டும். பேருந்து, லாரி ஆகியவற்றின் உள்கட்டமைப்பை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். 

ஃபோம்,  சிறிய அளவிலான மரக்கட்டைகள், மெல்லிய மரப் பலகைகள், சில   பிளாஸ்டிக் பொருள்கள், எனாமல் பெயிண்ட் ஆகியவையே இதற்கான மூலப்பொருள்கள் ஆகும். பேருந்து மற்றும் லாரிகளுக்கான சக்கரம் ஆகியவற்றை பெங்களூரில் ஒருவர் தயாரிக்கிறார். அந்த சக்கரத்தில் நிஜமான லாரி சக்கரம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். 

தொடக்கத்தில் ஒரு பேருந்தைத் தயாரிக்க சுமார் 30 நாளைக்கு மேல் ஆகியது. தற்போது 15 நாளில் தயாரித்து விடுகிறேன்.  ஒரு தனியார் பேருந்து நிறுவனத்திற்கு அவர்களின் பேருந்து மாடல் போலவே தயாரித்துக் கொடுத்தேன். பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் பல பேருந்து உரிமையாளர்கள், தங்களுடைய  நிறுவனத்திற்கும் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்டர்கள். தொடந்து லாரி, மணல் லாரி, டிப்பர் லாரி உள்ளிட்டவற்றை ஆர்டரின் பேரில் தயாரித்துக் கொடுத்து வருகிறேன். பேருந்து லாரி உரிமையாளர்கள் நான் தயாரித்தவற்றை தங்களது அலுவலக ஷோகேஸிஸ் வைத்துள்ளனர்.

மேலும் பயணிகள் உல்லாசப் பயணம் செய்ய, உண்மையான பேருந்தைப் பார்வையிட வேண்டாம். அலுவலகத்தில் உள்ள மினியேச்சர் கலையில் தயாரிக்கப்பட்ட பேருந்தைப் பார்த்தாலே பேருந்தில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ளலாம். 

தற்போது சேலம், கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிருந்தும் முகநூலில் பார்த்து விட்டு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். கேரளமாநிலம் இந்த மினியேச்சர் கலைக்கு நல்ல ஊக்கம் கொடுத்து வருகிறது. அந்த மாநில அரசு போக்குவரத்துக்கழகம் ஒவ்வோராண்டும் இந்த மினியேச்சர் கலையில் தயாரிக்கப்பட்ட பேருந்து, லாரி கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது. 

இதனால் கலைஞர்களுக்கு அதிகமாக ஆர்டர்கள் வருகின்றன. பொதுமக்களுக்கும் இக்கலை குறித்து அறிந்து வைத்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துத்துறையும் மினியேச்சர் கலையில் செய்யப்பட்ட பேருந்து மற்றும் லாரி கண்காட்சியை நடத்த வேண்டும். இதன் மூலம் மேலும் பல கலைஞர்கள் உருவாகும் வாய்ப்புக் கிடைக்கும்.  பொறுமை, நிதானம், திறமை, ஆர்வம்,  கற்பனை வளம் இருந்தால் இளைஞர்கள் இந்த கலையில் வெற்றி பெறலாம். 

 சென்னையில் தற்போது மினியேச்சர் கலை மூலம் திருமணம் நடக்கவிருக்கிற மணமகன் -மணமகள்  உருவங்களை, கிளே என்ற மூலப்பொருளை வைத்து, சேலை, நகை உள்ளிட்டவற்றுடன் தத்ரூபமாக வடிவமைத்து கொடுக்கிறார்கள்.

வாடிக்கையாளர்கள் இதனை வாங்கி திருமணத்தின்போது,   பரிசாக வழங்குகிறார்கள்.  நானும் இதுபோல திருமண தம்பதியை கிளே மூலம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன். படித்த இளைஞர்கள் இந்த கலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் வெற்றி பெறலாம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com