கணினிப் பொறியாளர்... சமூக அக்கறை!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்களில் படும்; முட்கள் அல்ல.
கணினிப் பொறியாளர்... சமூக அக்கறை!

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்களில் படும்; முட்கள் அல்ல.

- டிக்கின்ஸன்

நாமெல்லாம் நமது உணவுக்கான காய்கறிகளை, பழங்களை, கீரைகள் மற்றும் மூலிகைகளை கடைவீதிகளுக்கு சென்று வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிட்னி மாநகரத்தில் தான் வசிக்கும் வீட்டை ஒட்டிய குறுகலான காலி இடத்தில் தனது குடும்பத்தின் அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறிகளை வேளாண்மை செய்து பயன்படுத்துகிறார் ஒரு கணினிப் பொறியாளர். அங்கு அவர் விளைவிக்கும் அனைத்தும் நமது மண் சார்ந்த தக்காளி, கத்தரிக்காய், பீர்க்கங்காய் மற்றும் பொன்னாங்கண்ணி, வல்லாரை போன்ற கீரை வகைகளே.

முகநூலில்  சத்தமின்றி சுயசார்பு விழிப்புணர்வை தினந்தோறும் பதிவு செய்துகொண்டிருக்கிறார் இந்த சிட்னி தமிழர்.   இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மதுரை மாவட்டம்தான்.  

பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல்.  

"பல மரம் கண்ட தச்சன், ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்கிற முதுமொழியைப் பொய்யாக்கி பல்துறை வித்தகராக இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார் முத்தரசு.

1998-இல் நியூசிலாந்தின் வெல்லிங்டன் நோக்கி தொடங்கிய இவரது பணி சார்ந்த பயணம், அமெரிக்காவின்  மின்னசோட்டா மாநிலம், கனடாவின் டொரன்டோ, இடையிடையே அவ்வப்போது தமிழ்நாடு, அயர்லாந்து என்று நீண்டு, 2014- இலிருந்து - 2021- இல் இன்றுவரை கடந்த ஏழு ஆண்டுகளாக சிட்னி, ஆஸ்திரேலியா என்று தொடர்கிறது இவரது வாழ்க்கை. 

"தானுண்டு... தன் வேலையுண்டு'  என்று வேலை, வீடு என்று முடங்கிக் கிடக்காமல் சமூகப் பணி ஆற்ற வேண்டும் என்று நினைக்கிற - அதற்காகச் செயல்படுகிற இளைஞர்தான் முத்தரசு. வெளிநாட்டில் இருந்தாலும் பிறந்த மண்ணை மறக்காமல் அவர் ஆற்றிவரும்  பணிகளைப் பற்றி அவரிடம் பேசினோம்...

""நஞ்சில்லா காய்கனியை ஒவ்வொருவரும் தமது வீடுகளில் உற்பத்தி செய்ய ஊக்குவிப்பது; அதற்கான ஒன்று கூடல்களை தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் ஒருங்கிணைப்பது; ஒவ்வொரு சிற்றூரும் தமக்கான உணவு உற்பத்தியை தம்மால் இயன்றவரை பெருக்கி தன்னிறைவு அடைவது; தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி அவர்கள் மூலமாக உள்கட்டமைப்பை உருவாக்கி மரபு காய்கறி விதைகளைப் பரவலாக்குவது ஆகியவற்றுக்கான பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறேன்.

மற்றவர் துணையின்றி நாமே நமக்கான உணவை உருவாக்க இயலும் என்ற நம்பிக்கையை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்துவது எங்களுடைய அடுத்த பணி. 

ஒருவர் மற்றொருவருடன் புதிய உறவுப் பாலம் அமைக்க, இருக்கும் நட்புறவை மேம்படுத்த பண்டமாற்று வகை செய்யும். பண்டமாற்று எனும் நமது பண்டைய முறையை மீட்டெடுக்க இன்றைய தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன் அதற்கான  செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். 

புலம்பெயர் நாடுகளில் உழைக்கும் உள்ளூர் உறவுகளின் துணையோடு இதுவரை தமிழகத்தில் 22 வரத்து கால்வாய்களும்  5 கண்மாய்களும்  என்னுடைய  முயற்சியினால் புனரமைக்கப்பட்டுள்ளன.  இதற்காகவே ஊர் நலனுக்காக ஜேசிபி கனரக எந்திரம் மற்றும் டிராக்டர் இழுவை வண்டிகளையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

தரிசாகக் கிடைக்கும் நஞ்சை நிலங்கள், புஞ்சை நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி அவற்றில்  மீண்டும் பயிர் விளைவிக்க, தோட்டங்களை அமைக்க, தரிசு நிலங்களை உழவு செய்யும் பணியையும் ஊக்கப்படுத்தி வருகிறேன். 

எனது பூர்வீக ஊரான கல்லலில்   பாலர் பள்ளிக் கட்டிடத்தைச் சீரமைத்து, நூலகம் அமைக்கும் பணியை முடுக்கி அதை செயலாக்கும் முனைப்போடும் இருக்கிறேன்.  கல்லல் தேர்த் திருவிழாவின்போது, தேர் சக்கர விபத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட 2 பள்ளி மாணவர்களை அவசர ஊர்தி இல்லாததால் காப்பாற்ற முடியவில்லை.  

இந்தத்  துயர நிகழ்வுக்குப் பிறகு மீண்டும் இதுபோல் நடைபெறக் கூடாது என்பதற்காக  அவசர ஊர்தி ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.  

நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் கன்னி மற்றும் சிப்பிப்பாறை நாய்கள், எருமை மாடுகளை வாங்கி அவற்றை பெருக்கம் செய்ய ஊக்கப்படுத்தி வருகிறேன். 

நம்மைச் சுற்றி உள்ள செடி கொடிகள், மூலிகைகள், பூச்சி புழுக்கள், பறவைகள், விலங்கினங்கள் போன்றவற்றையும், காலநிலை, எளிய வேளாண் தொழில்நுட்பம் போன்றவற்றை நாம் அறிந்திருந்தால் மட்டுமே நாம் இந்த அழகிய இயற்கையுடன் இயைந்து ஒத்து வாழ இயலும். 

மனிதன் தமது வாழ்வை இயற்கையுடன் இயைந்து தம்மைத் தகவமைத்துக்கொண்டால் மட்டுமே நமது சித்தர்கள் சொன்னது போல தற்சார்புடன் நீடித்த நோயற்ற வாழ்வை வாழலாம்'' என்கிறார் முத்தரசு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com