உங்களுக்காக... நீங்களே!

இன்றைய உலகில் என்னதான் உழைப்பைக் கொட்டி பொருளை உருவாக்கினாலும் சந்தைப்படுத்துதல் இல்லாவிட்டால் அப்பொருள் விற்பனையாகாமல் தேங்கிவிடும்.
உங்களுக்காக... நீங்களே!

இன்றைய உலகில் என்னதான் உழைப்பைக் கொட்டி பொருளை உருவாக்கினாலும் சந்தைப்படுத்துதல் இல்லாவிட்டால் அப்பொருள் விற்பனையாகாமல் தேங்கிவிடும்.

அதுபோல் தான், நாம் எவ்வளவுதான் திறமையானவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாகவும், நுண்ணறிவு மிக்கவர்களாகவும் இருந்தாலும் கூட, நம்மை நாமே சந்தைப்படுத்திக் கொள்வது என்பது மிக அவசியமான ஒன்றாக இந்த காலகட்டத்தில் மாறிவிட்டது.  பணியிடச் சூழலில் பெரும்பாலானோருக்கு இது போன்ற தம்மைத் தாமே சந்தைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. 

ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் சிறப்பாக செய்தாலும் கூட, அது அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கோ, அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கோ தெரிவது இல்லை. காரணம், 

அந்நிறுவனத்தின் டீம் லீடர் அல்லது மேலாளர்  ஒரு குறிப்பிட்ட நபரின் செயலாற்றலை தங்களின் மூத்த அதிகாரிகளிடம் தெரிவிப்பதில்லை. அப்படி தெரிவித்தால் அது தொடர்பான பாராட்டும்,  அங்கீகாரமும்  சம்பந்தப்பட்ட பணியாளருக்குச் சென்றுவிடும் என்று அவர்கள் கருதி அது போன்ற விவரங்களைத் தெரிவிப்பதில்லை. இதனால் பல பணியாளர்கள் தகுதி இருந்தும் கூட உயர்நிலையை எட்ட முடிவதில்லை. இத்தகைய சூழலில் செல்ஃப் புரோமோஷன் எனப்படும் தன் தகுதி குறித்து அல்லது தன் ஆற்றல் குறித்து தாங்களே வெளிப்படுத்தக்கூடிய அவசியம் இந்த காலகட்டத்தில் ஏற்பட்டு வருகிறது.

பொதுவாக பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்தாம் அந்தப் பொருளை புரமோட் செய்வதற்காக சந்தைப்படுத்துவதற்கு பெரும் கவனம் செலுத்தும். பெரும் பொருளைச் செலவழிக்கும். அதுபோல ஒரு பணியாளர்  தான் செய்த வேலையின் மதிப்பு என்ன என்பதை கண்டிப்பாக வெளிப்படுத்தினால் தான் அவரின் திறமை மற்றவர்களுக்குத் தெரிய வரும்.  

நாம் நம்முடைய திறமையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினால் தான் நம்மால் உரிய நிலையை எட்ட முடியும். மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதுக்குக் கூட  ஆசிரியர்கள் தாங்கள் எவ்வளவு தகுதியுடையவர்கள் திறமை உடையவர்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விருதுகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "ஐயோ நம்மை நாமே புகழ்ந்து எழுத வேண்டுமா? அல்லது நம் தகுதியை, திறமையை, நாம் தான் கூற வேண்டுமா?' என்று நினைத்தால் அந்த விருது பெறும் வாய்ப்பினை அவர்கள் இழந்து விடுவார்கள். 

சிலர் தங்களின் திறமைகளை மற்றவரிடம் சரளமாக வெளிப்படுத்துவதற்கான திறன் உடையவர்களாக இருப்பார்கள்.

சிலரது வீட்டில் அவர்களின் மகன்கள், மகள்கள் செய்த சிறப்புகள், அவர்களின் பெருமைகள், புகுந்த வீட்டில் அவர்கள் நடந்து கொள்ளக்கூடிய விதம் அனைத்தையும் பெருமையாகப் பேசி தங்களின் மகன் அல்லது மகளினுடைய பெருமைகளை வெளி உலகத்திற்கு சரளமாகச் சொல்வார்கள். ஆனால் வேறு சிலரோ தங்கள் மகன் அல்லது மகள் மிகச் சிறப்பாக செயல்பட்டால் கூட அவர்களின் பெருமைகளை மற்றவர்களுக்கு சொல்வதற்குத் தயக்கம் காட்டுவார்கள். அதுமட்டுமல்ல,  அவர்களின் குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி பிறரிடம் கூறுவார்கள்.

தங்கள் குடும்பத்தின் பெருமையை சந்தைப்படுத்துபவர்களால் சமூகத்தில் நல்ல பெயரை விரைவாகச் சம்பாதிக்க முடியும்.  ஒருவரின் தொழில் வெற்றிக்கு அவரின் திறன் எனப்படும் பர்ஃபாமன்ஸ் 10 சதவீத வெற்றியையும், அவரின் இமேஜ்  30 சதவீத வெற்றியையும், அவர் குறித்து மற்றவர்கள் தெரிந்து வைத்து இருக்கின்ற விஷயங்கள் மீதி இருக்கின்ற விஷயங்கள் 60 சதவீத வெற்றியையும் தீர்மானிப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஒரு படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில் என்னைத் தெரிகிறதா? என்று ஒருவர் கேட்பார். நல்லா தெரியுது என சிலர் கூறுவார்கள். இன்னொரு நகைச்சுவை நடிகரோ, யார் என்று தெரியவில்லை எனச் சொல்வார். "ஐயோ இதற்காக நான் எவ்வளவு செலவழித்து இருக்கிறேன். நான் கேட்டவர்கள் எல்லாரும் நல்லா தெரிகிறது என்று சொன்னார்கள். நீ மட்டும் தெரியவில்லை என்று சொல்கிறாயே?' என்று கேட்பார். இது ஒரு நகைச்சுவை காட்சி என்றாலும் கூட இதன் மூலம் ஒருவர் தன்னை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காக எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதை உணர முடியும். 

சிலர் இத்தகைய செல்ஃப் புரோமோஷன் எனப்படும் "சுயபுராணம்' பாடுதலை விரும்ப மாட்டார்கள் என்றாலும் கூட செல்ஃப் புரோமோஷனுக்காக நேரம் ஒதுக்கி செயல்படுபவர்களால் மட்டுமே பெரும் நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவியை எட்டிப் பிடிக்க முடியும் என்பதில் இப்போது மாற்றுக் கருத்தில்லை.

பெரு நிறுவனங்களில் மிக உயர்ந்த பதவியை எட்டிப் பிடிக்க நினைப்பவர்கள் "தான் உண்டு... தன் வேலை உண்டு' என்று இருந்தால் அதை அடைய முடியாது. அதற்கு மாறாக தான் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் நிறுவனத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். இதைத்தான் செல்ஃப் புரோமோஷன் என தற்போது அழைக்கிறார்கள். அப்படிச் செய்யவில்லை என்றால் திறன் இல்லாதவர்கள் கூட அந்த வேலையை தாங்கள் தான் செய்தோம் என்று பெருநிறுவனங்களின் அதிகாரிகளிடம் வெளிப்படுத்தி உயர்ந்த நிலையை எட்டி விடுவார்கள்.

முன்பெல்லாம் ஓர் அலுவலகத்தில் 10 பேர் 20 பேர் வேலை செய்வார்கள். ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நேரடியாகவே கவனிப்பார். அதன் மூலம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை அவர் வழங்குவார். ஆனால், இன்று அப்படியல்ல. ஒரு பெரும் நிறுவனத்தில் லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு பணியாளரையும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் கவனிப்பது என்பது இயலாத காரியம். எனவே, நாம் நம் திறமைகளை அவரின் பார்வைக்குக் கொண்டு செல்வது என்பது சுயதம்பட்டமோ, தற்பெருமையோ ஆகாது. அது நமது உயர்வுக்கு வழி வகுக்கக் கூடிய பாதையாக நாம் கருத வேண்டும்.

ஆனாலும், அத்தகைய செல்ஃப் புரோமோஷன் என்பது மிகவும் உண்மையாகவும், சரியான விகிதத்திலும் இருக்க வேண்டும். உழைப்பைக் குறைவாகவும், செல்ஃப் புரமோஷனை அதிகமாகவும் செயல்படுத்த ஆரம்பித்தால் நிச்சயம் அது நமக்கு உயர்வைத் தராது என்பது நிதர்சனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com