விரட்டுங்கள்... மன அழுத்தத்தை!

உலக நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதமும் (39.1%) அதிகமாகவே இருக்கிறது.
விரட்டுங்கள்... மன அழுத்தத்தை!

உலக நாடுகளை ஒப்பிடுகையில், மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியாவில் வேலை பார்ப்போர் விகிதமும் (39.1%) அதிகமாகவே இருக்கிறது. பொருளாதார நிலையைச் சமாளிக்க, தகுதிக்கான வேலை கிடைக்காவிட்டாலும் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு செய்யும் பலரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்நிலையில், ஏதோ ஒரு வேலை கிடைத்து பணிச்சூழல் சரியாக அமையவில்லை என்றால், அங்கே பல்வேறு மனரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும் பணியாளர்களின் செயல்திறனுக்கும் இடையே காணப்படும் இடைவெளிதான் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலையை உருவாக்குகிறது. இதனால், வேலை, ஊதியம் தாண்டி மன அமைதியுடன் வேலை செய்வதற்கான ஒரு நல்ல சூழ்நிலை எல்லோருக்கும் தேவைப்படுகிறது. 

பணியிடத்தில் மன அழுத்தம் 

பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாத சூழ்நிலையே இப்போது உள்ளது. ஒரு நிறுவனத்தில் ஒருவருக்கு கீழே வேலை செய்யும்போது, நாம் எதிர்பார்க்கும் அனைத்தும்  கிடைத்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை.  

குடும்பச் சூழல், வேலைப்பளு, கட்டமைப்பு வசதிகள், அலுவலகச் சூழ்நிலை, சக பணியாளர்கள் நடந்துகொள்ளும்விதம், மேலதிகாரியின் நடவடிக்கை, நேரமின்மை, வேலையில் தெரியாமல் செய்யும் தவறுகள் என அலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட பலவித காரணங்கள் இருக்கின்றன. 

இவையெல்லாம் எப்போதாவது ஏற்பட்டால் பெரிதாகக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால், அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு எதிராகத் திரும்பும்போது உடனடித் தீர்வு காண வேண்டியது அவசியம். 

சிலர் அலுவலகத்தில் உள்ள டென்ஷனை - கோபத்தை - வீட்டில் உள்ளவர்கள் மீது காட்டுவார்கள். அவர்களிடம் பொறுமை இருக்காது. தூக்கமின்மையால் அவதிப்படுவர். அதிகப்படியான எரிச்சல் இருக்கும். இவையெல்லாம் மன அழுத்தம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி.

வெளிப்படைத்தன்மை இல்லை:

பணியாளர்களின் மனஅழுத்தம் குறித்து கவலைப்படாத கண்டு கொள்ளாத நிறுவனங்கள் பல.   பணியிடங்களில்  ஊழியர்கள் பலரும் தங்கள் மனநலப் பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். இதற்கு தைரியமின்மை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது. 

மாறாக, வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம், எதிர்கால வாழ்க்கை கருதியும் பணியாளர்கள் தங்களுடைய மனஅழுத்தம் தொடர்பாக வெளியே பேசுவதில்லை. அவ்வாறு பேசினால் பிறர் தம்மை இழிவாக நினைக்கக் கூடும் என்பதாலும் பலர் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தம் பற்றி வெளியே சொல்வதில்லை.  சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கமும் சிலரை வெளிப்படையாகப் பேசவிடாமல் தடுக்கிறது.   

இந்தியாவில் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களில் கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் பணியிடத்தில் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல, 2017 - ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, உலகளவில் மனச்சோர்வு அடைபவர்களில் 18% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்
பட்டுள்ளது. 

ஏன், வேலைப்பளுவால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் 
அதிகரித்து வருகிறது. 

மன அழுத்தத்தால் ஏற்படும்  பிரச்னைகள் மனநலப் பிரச்னைகள் பணியாளர்களிடையே உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் பக்கவாதம், மாரடைப்பு, உடல் பருமன், எடை குறைவு என பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். மனநலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம்.  தற்கொலை செய்து கொள்வதற்கும்  மனஅழுத்தம் காரணமாகிறது. 
பணியாளர் ஒருவரின் மனநலம் பாதிக்கப்பட்டால் அது நிறுவனத்துக்கு இழப்பு என்றே கூறலாம். ஒருவரின் மனநலன்- உடல்நலன் பாதிப்பு நிறுவனத்தின் செயல்திறனைப் பாதிக்கும். பணியாளர்களின் மனநலனை மேம்படுத்துவது அந்த பணியாளருக்கு மட்டுமின்றி நிறுவனத்திற்கும் இச்சமூகத்திற்கும் தேவையான ஒன்று. 

நிறுவனங்கள் செய்ய வேண்டியவை: வெளிப்படையாகப் பேச அனுமதியுங்கள்:


பணியாளர்கள் தங்களுடைய பிரச்னைகளை வெளிப்படையாகக் கூற பணியாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிரச்னைகளுக்கு சரியான முறையில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையைப் பணியாளர்களிடம் ஏற்படுத்தும் வகையில் நிறுவனங்கள் நடந்துகொள்ள வேண்டும்.  

நிறுவன மேலதிகாரிகள் அவ்வப்போது பணியாளர்களின் நிறை, குறைகளைக் கேட்டறிய வேண்டும். ஒவ்வொரு பணியாளருடன் நிறுவன மேலதிகாரிகள் கலந்துரையாடும் போதுதான் ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்னைகளைத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் பணியாளர்கள் தங்களுடைய பிரச்னைகளை எந்தவித பயமுமின்றி வெளிப்படையாகக் கூற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். ஊழியர்களும் பயமின்றி தங்களுடைய பிரச்னைகளை சொல்லும் பட்சத்தில் தீர்வு எளிதாக கிடைக்கும்.  

ஒரு பணியாளரை தேர்வு செய்வது மட்டும் மனிதவள மேலாண்மை அதிகாரியின் பணி அல்ல. ஊழியர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதும்தான். 

பணியாளர்கள் தங்கள் பிரச்னைகளை எளிதில் பகிர்ந்துகொள்ள கூடிய அளவில் மனிதவள மேலாண்மை அதிகாரி இருக்க வேண்டும். 

பணியாளர்களுக்கு மரியாதை:

பதவி, வயது பாரபட்சமின்றி அனைத்துப் பணியாளர்களுக்கும் சமமான அளவில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் மன அழுத்தம் ஏற்படுகிறது. 

மேலும், பணியாளர்கள் வேலையில் தவறு செய்யும்பட்சத்தில் தவறை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும். அதை விடுத்து, அந்தத் தவறை ஒரு காரணமாக வைத்து பணியாளர்களின் சுய மரியாதை கெடும் விதத்தில் அவர்களிடம் நடந்து கொள்ளக் கூடாது. அது பணியாளர்களுடைய  மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

மனநலம் அறிய குழு:  

பணியாளர்களின் மனநலனைக் காக்க, மனிதவள மேலாண்மை அதிகாரி தலைமையில் நிறுவனங்கள் ஒரு குழுவை அமைக்கலாம். குறிப்பாக, பெண் ஊழியர்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு காண பெண் அதிகாரியும் குழுவில் இடம் பெற வேண்டும். 

மனஅழுத்தம் நீங்க பயிற்சிகள்:

மனிதர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சுற்றி நடக்கும் ஏதோ ஒரு பிரச்னையால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். ஆனால், தங்கள் நிறுவன ஊழியர் என்ற அடிப்படையில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அவ்வப்போது மனநலப் பயிற்சி அளிக்க வேண்டும். சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடச் செய்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

முக்கிய துறைகளில் பணியாற்றும் அரசு, தனியார் ஊழியர்களுக்கு அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்ய வலியுறுத்தப்படுகின்றன. இதுமாதிரியான நிகழ்வுகளை அனைத்து நிறுவனங்களும் முன்னெடுக்கலாம். 

பணியாளர்கள் செய்ய வேண்டியவை:

பிரச்னைகள் இன்றி வாழ்க்கை இல்லை; அதுபோல தீர்வுகள் இன்றி பிரச்னை இல்லை. மன அழுத்தம் ஏற்படின் அதற்கான காரணத்தை கண்டறிந்து உங்களைவிட்டு விலக்கிவிட வேண்டும். ஒருவேளை அலுவலக வேலைதான் பிரச்னை என்றால் அலுவலக மேலதிகாரிகள் மூலம் தீர்வு காணலாம். முடியாவிட்டால் வேறு நிறுவனத்தை வேலைக்காக நாடுவதில் தவறொன்றும் இல்லை. வேறு பிரச்னைகள் என்றால் மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. 

தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் இருக்க, குடும்பத்தினருடனான இடைவெளியாலும் போட்டி மிகுந்த அவசர யுகத்தில் நாமும் செல்ல வேண்டும் என்பதாலும் மன நோய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வாழ்க்கை முறையின் மாற்றங்களே இதற்கு முழுக்க காரணம். அந்தவகையில், மன ஆரோக்கியம் என்பது காலத்தின் தேவை. "இதுவும் கடந்து போகும்' என்று ஒவ்வொருவரும் அடுத்த அடியை நோக்கி நகர்த்தி அந்த சூழ்நிலையை கடந்துவிடுதலே மகிழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com