சந்தைப்படுத்துதல்: அயராத உழைப்பு... சாதனை!

படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல்தான் பலர் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
சந்தைப்படுத்துதல்: அயராத உழைப்பு... சாதனை!

படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல்தான் பலர் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். செய்யும் வேலையில் எந்தவிதமான ஆர்வமோ, ஈடுபாடோ இல்லாமல் "கடனே' என்று வேறு வழியில்லாமல் இருப்பவர்களே அதிகம். படித்த படிப்புக்கு தொடர்புடைய, அதேசமயம் கடினமான வேலையை மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொண்டு இருக்கிறார் சென்னை வடபழனியில் வாழும் இளைஞர் ஒருவர்.
எம்பிஏ படித்திருக்கும் அவர், படிப்பு முடிந்ததும் வேலை தேடி எந்த ஒரு நிறுவனத்தின் கதவுகளையும் தட்டவில்லை. சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கி வருகிறார். அவர் சசிகுமார். சந்தைப்படுத்தும் துறையில் கால் பதித்துள்ள அவர், அத்துறையில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக என்ன ஆலோசனைகளைத் சொல்ல விரும்புகிறார் என்று கேட்டோம்.
""என் சொந்த ஊர் மாயவரத்துக்கு அருகில் உள்ள úக்ஷத்திரபாலபுரம் என்கிற சிற்றூர். என் குடும்பத்தில் நான் ஒருவன் மட்டுமே பட்டதாரி. பிசிஏ முடித்த நான் எம்பிஏ படித்தேன். பிற இளைஞர்களைப் போல வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஏதாவது சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்படிச் செய்யும் தொழிலும் கூட மக்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
நம்நாட்டில் ஏராளமான வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் அதிகமாகிவிட்டன. அவற்றில் இருந்து வெளிவரும் புகை சுற்றுச்சூழலைப் பாதிக்கிறது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத இருசக்கர வாகனங்களை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்த்தால்தான் இந்தச் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும். எனவே, பேட்டரியால் இயங்கக்கூடிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
பேட்டரியில் இயங்கக் கூடிய ஸ்கூட்டரின் விலை குறைந்தது 1.25 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. பல இணையதளங்களில் தேடிப் பார்த்தேன். ரூ.1 லட்சத்துக்கும் மேல் விலை இருந்தால் சாதாரண மக்கள் எப்படி வாங்குவார்கள்?
அதிக அளவில் மக்களைச் சென்று அடைய இரு சக்கர வாகனங்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.
அப்படித் தேடிப் பார்க்கும்போது, பேட்டரியில் இயங்கக் கூடிய சைக்கிள்களின் விலை குறைவாக இருந்தது.
மின்சார சைக்கிள்களின் விலை குறைந்தது ரூ.28 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரை இருக்கிறது. இதை ஏழை மக்கள் வாங்காவிட்டாலும் நடுத்தர வகுப்பு மக்கள் வாங்குவார்கள் என்பதால், மின்சார சைக்கிள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
பல பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார சைக்கிளைத் தயாரிக்கும் பணியில் ஏற்கெனவே இறங்கியிருந்தார்கள். அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தேன். அவற்றில் ஏதாவது குறைகள்
இருக்கத்தான் செய்தன. எந்த மின்சார சைக்கிளை விற்பனை செய்வது என்று தலையைப் பிய்த்துக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், கடைசியாக கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோவோல்ட் நிறுவனத்தின் மின்சார சைக்கிள்கள் சிறந்ததாக கண்ணில்
பட்டது.
2020 - ஆம் ஆண்டு அக்டோபரில் எனது நிறுவனத்தைத் தொடங்கினேன். என்றாலும் கரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு மேலும் முன்னேறிச் செல்லவிடாமல் தடுத்தது. பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த மோட்டோவால்ட் மின்சார சைக்கிளை சாதாரண சைக்கிள் போல பெடலை மிதித்தும் ஓட்டிச் செல்லலாம். பேட்டரியின் மின்சக்தியாலும் இயங்கச் செய்யலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் மின்சக்தியால் மட்டும் 45 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். பெடலை மிதித்தும், மின்சக்தியாலும் இயக்கினால்
65 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். பைக்கில் உள்ள சைலன்ஸர் மட்டும் இந்த மின்சார சைக்கிளில் இல்லை. மற்ற வசதிகள் எல்லாம் உள்ளன.
அதுமட்டுமல்ல, இந்த மின்சார சைக்கிளை செல்லிடப்பேசியில் உள்ள செயலியில் இணைத்து விடலாம். மின்சார சைக்கிள் எங்கே உள்ளது என்பதை கண்டறிய இந்தச் செயலி உதவும். மின்சார சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது, செல்லும் இடத்தை வரைபடத்தில் காணலாம்.

முதலில் மின்சார சைக்கிளின் நான்குவிதமான மாடல்களை எனது நிறுவனத்தில் வாங்கி வைத்தேன். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவரையும் அழைத்துக் காட்டினேன். பார்த்தவர்கள் எல்லாரும் நன்றாக இருக்கிறது என்றார்கள். ஆனால் ஒருவர் கூட வாங்கவில்லை. எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
ஆனாலும் சோர்ந்துவிடவில்லை. விற்பனை செய்யும் பொருளின் சிறப்புகளை எப்படி விளம்பரப்படுத்துவது? என்று யோசனை செய்தேன். யூ ட்யூப்பில் மின்சார சைக்கிள் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்து. சென்னையில் மட்டுமல்ல, வெளியூர்களில் உள்ளவர்களெல்லாம் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, மின்சார சைக்கிள் எங்கே கிடைக்கும் என்று கேட்கத் தொடங்கினார்கள். நான் விற்பனை செய்த முதல் மின்சார சைக்கிளை வாங்கியவர் தேனியைச் சேர்ந்த சிவகுரு என்பவர்தான். விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியது. கடந்த 13 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட மின்சார சைக்கிள்கள் விற்பனையாகிவிட்டன.
ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்வது தற்போது அதிகரித்து உள்ளது. நேரடி விற்பனை நிலையங்களின் மதிப்பு குறையத் தொடங்கிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மின்சார சைக்கிளின் விற்பனை எப்படி இருக்குமோ என்று முதலில் கவலைப்பட்டேன்.
ஆனால் பிற பொருள்களைப் போல அல்ல, வாகனங்கள். மின்சார சைக்கிளில் பழுது ஏற்பட்டால் அதைச் சரி செய்ய வேண்டும். தேவையான உதிரி பாகங்களை வாங்க வேண்டும். இவையெல்லாம் ஆன்லைன் மூலம் வாங்கினால் சாத்தியமாகாது. மேலும் மின்சார சைக்கிளை நேரில் பார்த்துதான் மக்கள் வாங்க விரும்புகிறார்கள். எனது யூ ட்யூப் வீடியோவைப் பார்த்த வெளியூரைச் சேர்ந்தவர்கள் கூட பல மைல் தூரம் பயணம் செய்து நேரில் சென்னைக்கு வந்து நேரில் பார்த்துதான் வாங்குகிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான மின்சார சைக்கிள்கள் விற்பனையாகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் நாம் தடுக்கிறோம் என்ற எண்ணம்தான் என்னை இதுவரை இயக்கி வந்திருக்கிறது.
எந்த ஒரு தொழில் செய்ய நினைத்தாலும், தனிப்பட்ட லாபத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், மக்களின் நலன் என்கிற அடிப்படையில் இளைஞர்கள் சிந்தித்து, அயராமல் உழைத்தால் நிச்சயம் சாதனை படைக்க முடியும்'' என்றார்.

படங்கள்: ப.ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com