ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இலவசப் பயிற்சிகள்!

​உலக புகழ்பெற்றுவிளங்கும் நவீன கல்விக்கூடம் ஹார்வர்டு பல்கலைக்கழகம். 1636-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் இலவசப் பயிற்சிகள்!


உலக புகழ்பெற்றுவிளங்கும் நவீன கல்விக்கூடம் ஹார்வர்டு பல்கலைக்கழகம். 1636-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாகும். கடந்த 384 ஆண்டுகளாக கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டு வரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 சத மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அது வழங்கி வருகிறது.

படிப்பதில் ஆர்வமும், தளராத ஊக்கமும் நிறைந்த மாணவர்கள், இப்பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு நிதி  ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே இலவசக் கல்வியை வழங்கி வருகிறது.  

அந்த அளவுக்கு கல்விச் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு உலகில் எங்கு சென்றாலும் தனிமதிப்பு உள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயில்வதைக் கெளரவமாகக் கருதும் போக்கும் இன்றைக்கும்  மாணவர்கள் மனதில் உள்ளது.

கரோனாவால் நிலைகுலைந்திருக்கும் அமெரிக்காவுக்குச் சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயில்வது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்றாக இருப்பதால்,  ஹார்வர்டு பல்கலைக்கழகம், காணொலி வழியாக இலவசப் பயிற்சிகளை அளிக்க முன்வந்துள்ளது.

கணினி அறிவியல் அடிப்படைப் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதில் சி, பைதான், ஜாவாஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல்., எஸ்.க்யூ.எல். போன்ற கணினி சார்ந்த அடிப்படைக் கல்வியை வழங்குகிறது. இதை இ.டி.எக்ஸ். காணொலி தளத்தில் காணலாம்.

இந்தப் பயிற்சியை 12 வாரங்களில் முடிக்கலாம். இதைப் படிக்க விரும்பும் மாணவர்கள் வாரத்தில் 8 முதல் 18 மணி நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டும்.  
இப்பயிற்சியில் அப்ஸ்ராக்ஷன், அல்காரிதம், டாட்டா ஸ்ட்ரக்சர், என்காப்சுலேஷன், ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட், செக்யூரிட்டி, சாஃப்ட்வேர் என்ஜினியரிங், வெப் டெவலப்மென்ட் போன்ற தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. சி, பைதான், எஸ்.க்யூ.எல்., ஜாவாஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். ஆகிய புரோக்ராமிங் லாங்குவேஜ் திறன்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. 

உயிரியல்,  நிதி, தடயவியல், இணையவிளையாட்டு தளத்தில் இவற்றின் பயன்பாடுகள்குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.  ஃபைனல் புராஜெக்ட் செய்து முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியின் வழியாக கணினி அறிவியலையும் புரோக்ராமிங்கையும் புரிந்து கொள்ள   முடியும். அல்காரிதம் வழி சிந்தித்து, புரோக்ராமிங் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு பயிற்சி உதவியாக இருக்கும். எந்தவிதமான பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், இப்பயிற்சியின்வழியாக கணினி அறிவியலை எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

கணினி அறிவியல் தவிர, கணக்கியல் மற்றும் நிதி, வழக்காடுதல், எண்ம மானுடவியல், கையெழுத்துப்பிரதி முதல் அச்சாக்கம் வரை, நரம்பு அறிவியல், உடற்கூறியல், வானியல் அறிவியல், கொள்கை வடிவமைப்பு, தலைமைப்பண்பியல், தரவு அறிவியல், அமெரிக்க அரசியலமைப்புச்சட்டம், பிரமிட் அறிவியல், ஐன்ஸ்டீன் புரட்சி, கால்குலஸ், பருவநிலை மாற்றம், அடுத்த பெருந்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளுதல், பணம் மற்றும் சந்தை, புள்ளியியல், தொழில்முனைப்பாற்றல், உயிரி வேதியியல், இணையவழிவிளையாட்டுகள் மேம்பாடு உள்ளிட்ட 109 தலைப்புகளில் இலவச இணையவழி சான்றிதழ் பயிற்சிகளை ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழங்குகிறது. 

இப்பயிற்சியில் இணைய விரும்புவோர் https://online-learning.harvard.edu/catalog/free என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்வதோடு கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com