தஞ்சை மாணவர் சாதனை...! விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள்!

​தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் எம்.ஏ. சம்சுதீன்-எஸ். ஜகர்ஜான் பேகத்தின் மகன் ரியாஸ்தீன். 18வயதான இவர் பள்ளிப் படிப்பை சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளியில் முடித்தார்.
தஞ்சை மாணவர் சாதனை...! விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள்!


தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்தவர் எம்.ஏ. சம்சுதீன்-எஸ். ஜகர்ஜான் பேகத்தின் மகன் ரியாஸ்தீன். 18வயதான இவர் பள்ளிப் படிப்பை சென்னை ஆதம்பாக்கம் டி.ஏ.வி.பள்ளியில் முடித்தார். இதையடுத்து, தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

"க்யூப்ஸ் இன் ஸ்பேஸ்' என்ற உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் ரியாஸ்தீன். இப்போட்டிக்காக இவர் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள்கள் நாசா ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பப்படவுள்ளன.

33 கிராம் எடையும், 37 மி.மீ. உயரமும் கொண்ட இச் செயற்கைக்கோள்களே உலகில் மிகவும் எடை குறைந்த பெம்டோ செயற்கைக்கோள்களாக இருக்கின்றன.

இச்சாதனை புரிந்த ரியாஸ்தீன் நம்மிடம் தெரிவித்தது...

""பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் ஆர்வம் இருந்தது. பத்தாம் வகுப்புப் படிக்கும்போது சென்னையில் எஸ்.பி. ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து ரோபோ தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டேன். இத்துடன் நிறுத்திவிடாமல் ஆய்வுத் திட்டங்களிலும் ஈடுபட்டேன்.

இதைத் தொடர்ந்து உள்ளூரிலும், தேசிய அளவிலும் நடைபெற்ற பல்வேறு ஆய்வுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றேன். இந்நிலையில், 2018, ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற பன்னாட்டு ரோபோடிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றேன்.

இதன் பின்னர், 11 - ஆம் வகுப்புப் படிக்கும்போது வேதியியல், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.என்.ஆர்.ஓ. ஆய்வகத்தில் இணைந்து ஆய்வுத் திட்டப் பணிகளில் ஈடுபட்டேன். இதனிடையே, சிறிய வகை செயற்கைக்கோளை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் என் மனதில் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐ.என்.ஆர்.ஓ. ஆய்வகம் எனக்கு பல உதவிகளைச் செய்தது. அப்போது, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசாவுடன் இணைந்து அமெரிக்காவை சார்ந்த "ஐ டூடுள் லேர்னிங்' நிறுவனம், க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருவது தெரிய வந்தது. இதில், 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்றேன்.

இப்போட்டியில் 73 நாடுகளிலிருந்து பல ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக மிகவும் எடை குறைவான இரு பெம்டோ செயற்கைக்கோள்களை வடிவமைத்தேன்.

இந்தச் செயற்கைக்கோள்களுக்கு விஷன் சேட் - வி1 மற்றும் வி 2 எனப் பெயரிடப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் ஒவ்வொன்றும் 37 மி.மீ. உயரமும், 33 கிராம் எடையும் கொண்டவை. உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் இவைதான். இந்த இரு செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த நாசா தேர்வு செய்துள்ளது.

இதற்கு முன்பு 64 கிராம் எடையில் செய்யப்பட்ட செயற்கைக்கோள்தான் சாதனையாக இருந்தது. இதுவும் தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டது.

இப்போது நான் வடிவமைத்துள்ள இரு செயற்கைக்கோள்களும் சப் ஆர்பிட்டல் பெம்டோ செயற்கைக்கோள்கள். இவை பாலியெதரிமைடு அல்டம் எனக் கூறப்
படும் தெர்மோ பிளாஸ்டிக் மூலம் 3 - டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

இவற்றில் விஷன் சேட் வி 1என்ற செயற்கைக்கோள் பாலியெதரி இமைடு அல்டம்9085 - ஆல் செய்யப்பட்டது. இந்த வி 1 செயற்கைக்கோள் 2021 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிலுள்ள வெர்ஜீனியாவிலிருந்து நாசாவின்
எஸ்.ஆர். - 7 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

விஷன் சேட் வி 2 என்ற செயற்கைக்கோள் பாலியெதிரி இமைடு அல்டம் 1010 தரத்தால் செய்யப்பட்டது. இதுவும் நாசாவின் ஆர்.பி. - 6 பலூன் ராக்கெட் திட்டத்தின் மூலம் 2021, ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இவை இரண்டும் தொழில்நுட்பச் சோதனைச் செயற்கைக்கோள்கள்.

வளி மண்டலம், விண்வெளி ஆய்வுகள், நுண் ஈர்ப்பு (மைக்ரோ கிராவிட்டி) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதே இச்செயற்கைக்கோள்கள் உரு வாக்கப்பட்டதன் நோக்கம். இதற்காக இச்செயற்கைக்கோள்களில் 11 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 17 அளவுருக்களைக் (பாராமீட்டர்களை) கண்டறிய முடியும். இந்தச் செயற்கைக்கோள்களையும், ஆய்வுகளையும் செய்து முடிக்க ஏறத்தாழ 2 ஆண்டுகளானது.

எதிர்காலத் திட்டங்கள்: சப் ஆர்பிட்டல் பெம்டோ வகை செயற்கைக்கோள்களான இவை சுற்றுப்பாதையில் சுற்றாது. மேலே போய்விட்டு கீழே வந்துவிடும். எனவே, அடுத்து சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் ஆர்பிட்டல் செயற்கைக்கோள் வடிவமைக்கும் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இதற்கான பணியை விரைவில் தொடங்கவுள்ளேன்.

தற்போது, பெற்ற வெற்றி மூலம் ஐ.என்.ஆர்.ஓ. ஆய்வகத்தில் எனக்கு இளநிலை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறைய ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளேன்.

எதிர்காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும், ரோபோடிக்ஸ், ஆட்டோமேஷன், விண்வெளி தொழில்நுட்ப ஆய்வு ஆகியவை தொடர்பாக மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் ரியாஸ்தீன்.

படம்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com