எங்கேயும்...எப்போதும்!

இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது பொம்பெயி நகரம். கி.பி.79- இல் நிகழ்ந்த எரிமலை வெடிப்பின் காரணமாக, இந்நகரம் புதையுண்டு போனது.
எங்கேயும்...எப்போதும்!

ரோமப் பேரரசு காலத்தில் துரித உணவகங்கள்!

இத்தாலி நாட்டின் நேபிள்ஸ் நகரத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது பொம்பெயி நகரம். கி.பி.79- இல் நிகழ்ந்த எரிமலை வெடிப்பின் காரணமாக, இந்நகரம் புதையுண்டு போனது. பழங்கால ரோமானிய நாகரிகத்தைத் தெரிந்து கொள்வதற்கான பல சான்றுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்து வருகின்றன.

சென்ற மாதம் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் உலக அளவில் உள்ள வரலாற்றாளர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.

ஈரமான சுண்ணாம்புக் கல் மீது வரையப்படும் ஃபிரெஸ்கோ வகை ஓவியங்கள் இங்கு கிடைத்துள்ளன.

இந்த ஓவியங்களில் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட உணவு வகைகளின் படங்கள் உள்ளன.

ரோமானிய நாகரிக காலத்தின் மக்களின் உணவுப் பழக்கங்களைத் தெரியப்படுத்துவதாகவும், இக்காலத்தில் உள்ள துரித உணவகங்களை அவை நினைவுபடுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இது தவிர, ரோமானியப் பேரரசு காலத்தில் வாழ்ந்த மக்களின் உடல்கள் எரிமலைச் சாம்பலில் புதைந்து கிடப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

நடனமாடும் ரோபோக்கள்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் 1992 - இல் தொடங்கப்பட்ட நிறுவனம் "பாஸ்டன் டைமிக்ஸ்'. இந்நிறுவனம் ரோபோக்களை வடிவமைக்கும் பணியைச் செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தைப் புகழ்பெற்ற ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வித்தியாசமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மனிதர்கள் செய்வதற்கு மிகச் சிரமமாக இருக்கும் செயல்களைச் செய்வதற்காக ரோபோக்களை உருவாக்கிய காலம் போய், வேலைத்தளங்களில் ஆட்குறைப்பு செய்வதற்காகவும் ரோபோக்களை உருவாக்குவது தற்போது நிகழ்ந்து வருகிறது. இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் காலத்தில் இடிபாடுகளுக்கடியில் சிக்கி உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்காகவும், மீட்புப் பணியில் உதவுவதற்காகவும் பாஸ்டன் டைமிக்ஸ் நிறுவனம் அட்லாஸ் என்ற ரோபோவை உருவாக்கியது.

நாய் போன்ற தோற்றத்திலிருக்கும் "ஸ்பாட்' என்ற ரோபோ இந்நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பு. அது மறைந்துள்ள பொருள்களைக் கண்டுபிடிக்கும் திறனுடையது. தூரத்தில் இருந்தே இந்த ரோபோவை இயக்க முடியும்.

இந்நிறுவனம் உருவாக்கியுள்ள இன்னொரு ரோபோவின் பெயர் "ஹேண்டில்'. மிக அதிக எடை உள்ள பெட்டிகளைத் தூக்கிச் செல்வதற்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டது.

ஆனால் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது இந்த மூன்று வகை ரோபோக்களும் வித்தியாசமான முறையில் இயங்கி, எல்லாரையும் மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியிருக்கின்றன.

இந்த ரோபோக்கள் இசைக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் குதித்தும் பல்வேறு பாவனைகள் செய்தும் நடனமாடிய விடியோவை அந்நிறுவனம் யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரீ சார்ஜ் செய்யப்படும் அயர்ன் பாக்ஸ்!

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு காங்கோ. இங்குள்ள கோமா என்ற நகரில் இலி சஃபாரி பாராக்கா என்ற 23 வயது இளைஞர், "பேன்ùஸலா' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் வீட்டுக்குத் தேவையான பல பொருள்களைத் தயாரித்து வருகிறார்.

மின்தடை அதிகமாக உள்ள நாடு காங்கோ. அந்நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் அவர் ரீசார்ஜ் செய்து கொள்ளக் கூடிய அயர்ன் பாக்ஸைத் தயாரித்திருக்கிறார். இந்த அயர்ன் பாக்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால், குறைந்தது மூன்று மணி நேரங்கள் வரை பயன்படுத்தலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் இந்த அயர்ன் பாக்ஸை எடுத்துச் சென்றால் அங்கே மின்சாரம் இல்லாவிட்டாலும் துணிகளை அயர்ன் செய்து கொள்ளலாம்.

கடந்த எட்டு மாதங்களாக பல்வேறு சோதனகள், முயற்சிகள் செய்து இந்த அயர்ன் பாக்ஸை அவர் தயாரித்திருக்கிறார். இந்த அயர்ன் பாக்ஸை மட்டுமல்ல, ரீ சார்ஜ் செய்து கொள்ளும் மின்சார அடுப்பையும் இவர் தயாரித்திருக்கிறார்.

அவருக்குள்ள ஒரே பிரச்னை, இந்தத் தயாரிப்புகளுக்கான மூலப்பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதுதான். அதுவும் கரோனா காலத்தில் பல நாடுகளில் ஊரடங்கு பிரகடனப்படுத்தப்பட்டதால், தொடர்ந்து செயல்பட முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் , இலி சஃபாரி பாராக்கா. இவர் தயாரித்துள்ள அயர்ன் பாக்ஸின் விலை 25 அமெரிக்க டாலராகும்.

மின்தடை இருந்தால் மூளை இப்படியெல்லாம் சிறப்பாக வேலை செய்யும் போலும்!

புதிய செயற்கை உணவு!

இயற்கையான முறையில் கிடைக்கும் உணவுப் பொருள்களை உண்டு வாழ்ந்த காலம் மலையேறிவிடும் போல் இருக்கிறது.

பசுவின் இயற்கையான பால் இப்போது கிராமங்களில் வேண்டுமானால் ஒருவேளை கிடைக்கலாம். பல்வேறு நிறுவனங்கள் "தயாரிக்கும்' பாக்கெட் பால்கள்தாம் இப்போது அதிகம் கிடைக்கின்றன. இயற்கையான வேளாண்மையில் அறுவடைக்குப் பிறகு விதை தானாகவே கிடைக்கும். இப்போது விதையைத் தயாரிக்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.

அதுபோன்று நாம் உண்ணும் முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. உலக அளவில் அசைவ உணவுகளை ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கும் முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன. ஓர் உயிரைக் கொன்று அதை உணவாக உண்ணும் அசைவ உணவுப் பழக்கத்துக்கு இது முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்றே தோன்றுகிறது.

சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு அமைப்பு (ஜிஎஃப்ஐ)யின் அறிக்கையின்படி கடந்த 2019 ஆண்டின் இறுதியில் உலக அளவில் 55 நிறுவனங்கள் செயற்கை அசைவ உணவுகளைத் தயாரிப்பதில் இறங்கியிருக்கின்றனவாம். இஸ்ரேல், துருக்கி, நெதர்லாந்த், பிரான்ஸ், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் உள்ள நிறுவனங்கள் செயற்கை அசைவ உணவுத் தயாரிப்பில் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்த இரண்டாண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில் அமெரிக்காவின் சான் ஃபிரான்ஸிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான "ஈட்' முதல் செயற்கை அசைவ உணவை சிங்கப்பூரில் விற்பனை செய்ய உள்ளது. இதற்கான அனுமதியை சிங்கப்பூரின் ஃபுட் ஏஜென்சி வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் நகரின் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத் தேவையான உணவு தயாரிக்கும் திறனைத்தான் சிங்கப்பூர் பெற்றிருக்கிறது. எனவே இதுபோன்ற செயற்கை உணவுத் தயாரிப்புகளுக்கு அது ஊக்கமளிக்கிறது. என்றாலும், தயாரிக்கப்படும் செயற்கை உணவுகளின் தரத்தைப் பல கட்டச்
சோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திய பிறகே அனுமதி அளிக்கிறது.

"ஈட்' நிறுவனம் விலங்குகளின் செல்களில் இருந்து, ஆய்வுக் கூடத்தில் செயற்கை அசைவ உணவைத் தயாரித்திருக்கிறது. ""அமெரிக்காவில்தான் இந்த உணவு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் என்று நினைத்திருந்தேன். ஆனால் சிங்கப்பூர் முந்திக் கொண்டுவிட்டது'' என்கிறார் ஈட் நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஸ் டெட்ரிக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com