மரப் பொருள்களால் செயற்கைக்கோள்!

தகவல் தொடர்பு, தொலைக்காட்சி சேவைகள், பருவநிலை மாறுபாடு கண்காணிப்பு, வானிலை முன்னறிவிப்பு என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது
மரப் பொருள்களால் செயற்கைக்கோள்!


தகவல் தொடர்பு, தொலைக்காட்சி சேவைகள், பருவநிலை மாறுபாடு கண்காணிப்பு, வானிலை முன்னறிவிப்பு என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் 6 ஆயிரம் செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இவற்றில் 60 சதவீதம் செயல் இழந்தவை. செயல் இழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளிக் குப்பைகள் என அழைக்கப்படுகின்றன.

வரும் 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 1000 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் 2028-இல் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுமார் 15 ஆயிரம் செயற்கைக்கோள்கள் சுற்றி வரும். ஏற்கெனவே விண்வெளியில் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இது மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

விண்வெளிக் குப்பைகள் மணிக்கு 22,300 மைல் வேகத்தில் சுற்றி வருகின்றன. அவற்றின் சிறிய பகுதி செயல்பாட்டில் உள்ள ஒரு செயற்கைக்கோள் மீது மோதினால் கூட பேராபத்து ஏற்படும். விண்வெளிக் குப்பைகளைச் சுத்தப்படுத்துவது எப்படி, குறைப்பது எப்படி என்று உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். செயலிழந்த செயற்கைக்கோள்கள் பூமிக்குத் திரும்பும்போது எரிந்து வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பல்வேறு பொருள்களை வெளியிடுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண புதுமையான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது ஜப்பானை சேர்ந்த "சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி' என்ற நிறுவனம். விண்கலம் மற்றும் செயற்கைக்கோளை மரப் பொருள்களால் உருவாக்குவதுதான் அந்தப் புதுமையான வழிமுறை. இதற்காக அந்த நிறுவனமும், கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வைத் தொடங்கியுள்ளன. 2023-ஆம் ஆண்டுக்குள் மரப் பொருள்களாலான செயற்கைக்கோளை உருவாக்குவதே இந்த ஆய்வின் இலக்கு.

இதுகுறித்து கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியரும், விண்வெளி வீரருமான டகாவோ டோய் கூறியது: 

""பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் செயற்கைக்கோள்கள் எரிந்து சிறிய அலுமினிய துகள்களை உருவாக்கி வளிமண்டலத்தில் மிதந்து மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், விண்வெளிக் குப்பை மாசுபாடானது பூமியின் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையைத் தவிர்ப்பதற்காக மரப் பொருள்களாலான செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம். மரத்திலிருந்து எடுக்கப்படும் இழைம கட்டமைப்பு திசு வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை வெளியிடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்கைக்கோள் விண்வெளிக் குப்பை மாசுபாட்டை குறைக்க இயலும்'' என்றார்.

ஏற்கெனவே சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ள டகாவோ டோயின் கணிப்புப்படி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அடையாளம் காணக்கூடிய 23 ஆயிரம் விண்வெளிக் குப்பைகள் விண்வெளியில் சுற்றி வருகின்றன. அவற்றை அழிக்க முடியாது. செயலிழந்த ராக்கெட்டுகளின் நட்டுகள், போல்ட்டுகள் கூட விண்வெளியில் சுற்றி வருகின்றன.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இந்த உலகம் அடைந்த பயனுக்கு சமமானது, அதனால் ஏற்பட்ட தீங்குகளும். அந்தத் தீங்குகளைக் களையவும் அதே விஞ்ஞானம் கைகொடுத்தால் நலம்தானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com