52 ஆண்டுகள்... நிலவில் தடம் பதித்து!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் விண்வெளித் திட்டத்தை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.
52 ஆண்டுகள்... நிலவில் தடம் பதித்து!

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் விண்வெளித் திட்டத்தை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. 2024-இல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அங்கிருந்து பாறை, மண் மாதிரிகளை சேகரித்து திரும்ப நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த நவீன உலகில் விஞ்ஞானத்தின் வேகம் அளவிட முடியாத பெரும் பாய்ச்சலாக உள்ளது. இந்த வேளையில் நிலவில் மனிதன் முதலில் காலடி எடுத்து வைத்த தருணம் மறக்க முடியாத நிகழ்வாக தொடர்கிறது.

நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 1969, ஜூலை 20-இல் நிலவில் காலடி எடுத்து வைத்த தருணத்தை நினைவுகூர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் முதல் காலடித் தடப் புகைப்படத்தை நாசா கடந்த வாரம் பகிர்ந்திருந்தது. 

முதல் 11 மணி நேரத்தில் அந்தப் புகைப்படத்தை 16 லட்சம் பேர் "லைக்' செய்திருந்தனர்.

"52 ஆண்டுகளுக்கு முன்பு அடியெடுத்து வைத்த ஒரு சிறிய காலடி வாழ்நாள் முழுவதுமான ஆச்சரியத்துக்கு நம்மை ஊக்குவித்து வருகிறது' என பெருமிதத்துடன் அந்நிகழ்வை விளக்கியிருந்தது நாசா.

"அப்பல்லோ 11' என்ற அந்த விண்வெளித் திட்டம் அறிவியல் உலகையே புரட்டிப் போட்டது என்றால் மிகையில்லை. அப்பல்லோ விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மிக்கேல் காலின்ஸ்  ஆகியோர் நிலவுக்குச் சென்றனர். காலின்ஸ் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருக்க, ஆம்ஸ்ட்ராங் முதலிலும், ஆல்ட்ரின் அடுத்தும் நிலவில் காலடியைப் பதித்தனர்.

அப்பல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்தை நாசாவின் லூனார் ரெகொனாய்சன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு புகைப்படங்களாகப் பதிவு செய்துள்ளது. அந்தப் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நாசா, "கூர்மையாகப் பாருங்கள், விண்வெளி வீரர்களின் தடத்தை இப்போதும் காணலாம்' என அதற்கு விளக்கமும் அளித்துள்ளது.

முதல் நிலவுத் திட்டம் தந்த உத்வேகத்தில் இப்போது முதல்முறையாக நிலவுக்கு ஒரு விண்வெளி வீராங்கனையை அனுப்ப முடிவு செய்துள்ளது நாசா. ஆம், ஆர்ட்டெமிஸ் விண்வெளித் திட்டத்தின் மூலம் விரைவில் நிலவில் கால்தடம் பதிக்கப் போகிறார் ஒரு பெண். 

நிலவில் மனிதர்கள் தடம் பதித்ததை 52 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமான விடியோ காட்சிகள் மூலம் பார்த்து ரசித்த நமக்கு, ஆர்ட்டெமிஸ் என்னென்னஆச்சரியங்களைத் தர காத்திருக்கிறதோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com