அடக்கமா படிக்கிறோம்!: ஆர்ப்பாட்டமா ஜெயிக்கிறோம்!

""ஒரு மாவட்ட ஆட்சியருக்கு என்ன மரியாதை கொடுப்பீங்களோ, அதே மரியாதையோடுதான் இவங்களையும் நடத்தணும்'' இப்படி இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்விற்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் அடிக்கடி
அடக்கமா படிக்கிறோம்!: ஆர்ப்பாட்டமா ஜெயிக்கிறோம்!

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

(குறள்: 123)

""ஒரு மாவட்ட ஆட்சியருக்கு என்ன மரியாதை கொடுப்பீங்களோ, அதே மரியாதையோடுதான் இவங்களையும் நடத்தணும்'' இப்படி இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்விற்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் அடிக்கடி கூறுவார் எனது ஆசிரியர் இரா. கனகசபாபதி. ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் அந்தப் பதவிக்குத் தகுதியான நபராக தங்களைப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

அப்படியேதான் அங்குள்ள ஆசிரியர்களும் அந்த மாணவர்களை நடத்த வேண்டும் என்பதே எனது ஆசிரியரின் விருப்பம். அதுவே வெற்றிக்கான யுக்தியுமாக இருந்தது. ஆனால், இதை மாணவப்பருவத்தில் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போட்டித் தேர்வாளர்கள் பலரது உடல் மொழியும், பேச்சும் சற்று அதிகமாகவே திமிறிக் கொண்டிருக்கும்.

பாலசரவணன் - இந்த வகையான மாணவர்களில் ஒருவர். உலக அளவில் முன்னணியாக விளங்கும் ஏதாவதொரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்பதே அவரது இலக்கு. ஆனால், ஏனோ அவரது முயற்சிகள் எதுவுமே பலிக்காமலே போனது. ஒவ்வொரு முறையும் நேர்காணலுக்குச் செல்வதும், அதில் வெற்றி பெறாமல் திரும்புவதுமாகவுமே இருந்தார். முதுகலை கணினி பொறியியலில் முதல் மாணவராகத் தேர்ச்சி. ஏற்கெனவே, சில நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம். ஒவ்வொருமுறை வேலைக்கு விண்ணப்பிக்கும்போதும் தன்னுடைய "பயோ-டேட்டா'வை மிகவும் சிறப்பாக வடிவமைத்து, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயார் செய்வதில் கில்லாடி, நம் பாலசரவணன். எழுத்துத் தேர்வில், உம்... பலே பலே. குரூப் டிஸ்கஷனில், ஆஹா... ஓஹோ...பேஷ் பேஷ் ரகம் தான். அப்புறம் ஏன் நாம் நிராகரிக்கப்படுகிறோம்? என்பது மட்டும் அவருக்கு பிடிபடவேயில்லை.

இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் யாராவது நல்லாசிரியர் அல்லது நண்பர்கள் வடிவில்தான் யாருக்கும் தீர்வு கிடைக்கும். இங்கு பாலசரவணனின் நிலையைப் புரிந்த அவரது ஆசிரியர் ஒருவர், ஒரு பிரபல நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து பாலாவை அங்கு நேர்முகத்தேர்விற்கு அனுப்பி வைத்தார். வழக்கமான சடங்குகள் பாலாவிற்கு நடந்தேறி, வழக்கமான முடிவோடு, சுவரில் எறிந்த பந்தாக திரும்பி வந்து அந்த ஆசிரியரின் முன் நின்றார்.

அவரைத் தேற்றி வீட்டிற்கு அனுப்பிவைத்த ஆசிரியர், அவரது நண்பரான சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் பாலா பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

""உங்களுடைய மாணவர் ரொம்பத் திமிர் பிடித்தவரோ... அதிகாரிகளின் முன்னால், நேர்முகத்தேர்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது கூட தெரியவில்லையே?'' என்று பாலாவைப் பற்றி அந்த அதிகாரி ஆசிரியரிடம் சொல்ல, ஏற்கெனவே பாலாவின் குறையை ஓரளவு கணித்து வைத்திருந்த ஆசிரியருக்கு பாலாவின் உடல்மொழி மனதில் நிழலாடியது. நேர்முகத்தேர்வினை நடத்திய அதிகாரியை விட ஓர் ஆசிரியருக்கு அவரது மாணவனைப் பற்றி அதிகம் தெரியுமல்லவா?

""அந்தப் பையனது உடல்வாகே அப்படித்தான் சார். பார்ப்பவர் கண்களுக்கு அப்படித் தோற்றமளித்திருக்கலாம். வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை அவனை உங்களை வந்து பார்க்கச் சொல்கிறேன்'' என்று பணிவுடன் விண்ணப்பித்தார். அடுத்து நடந்ததெல்லாம் மிகச் சரியாகவே நடந்து, நம் பாலாவிற்கு அதே நிறுவனத்தில் பணி நியமன ஆணையும் கிடைத்தது.

"இருக்கு... ஆனா இல்லை' என்கிற கதையாக நமது தோற்றமும், உடல் மொழியும் இருந்துவிடக்கூடாது.

அந்தப் பையனின் தோற்றமும், பேச்சும் மரியாதையில்லாதவன் மாதிரி தெரியும். ""ஆனா, அப்படியில்லீங்க'' என்று முட்டுக் கொடுத்துக் கொண்டே ஒருவரை யாரும் தொடர்ந்து கரை சேர்த்து விட்டுக் கொண்டே இருக்க முடியாது. இன்றும் பல இளைஞர்களுக்கு தன்னம்பிக்கைக்கும் திமிருக்கும் இடையே இருக்கும் மெல்லிய இடைவெளியைக் கண்டுணரும் தெளிவும் இருப்பதில்லை.

சரி, நம் பாலாவின் உடல் மொழியில் அப்படி என்னதான் குறையிருந்தது என்கிறீர்களா? பாலவே சொல்கிறார்:

""நெடுங்காலமாகவே, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டும், இடுப்பில் கை வைத்துக் கொண்டும், வயிற்றுக்கு முட்டுக் கொடுப்பது போல நின்றுகொண்டுதான் நான் யாரிடமும் பேசுகிறேன். இது தன்னம்பிக்கையின், ஆற்றலின் வெளிப்பாடு என்று கருதியிருக்கிறேன். எனது தொடர் தோல்விக்குப் பிறகு, எனது ஆசிரியரின் அறிவுரைக்குப் பிறகு... முழு நிலைக் கண்ணாடியின் முன் நின்று ஒரு பரிசோதனை உரையாடலை நிகழ்த்தி, நானே என்னைப் பார்த்தபோதுதான் எனது உடல்மொழியின் அபத்தமும், விபரீதமும் எனக்குப் புரிந்தது. வேறு யாரேனும் என் முன்னால் இப்படி நின்று பேசினால், அவர்களைக் கண்டிப்பாக நாகரிகம் தெரியாத ஆளாகத்தான் நான் கருதுவேன்'' என்கிறார்.

எல்லாம் தெரிந்தவர் என்றும், எதுவுமே தெரியாதவர் என்றும் இங்கு யாருமேயில்லை. போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், அறிய வேண்டியதோ, அவசியமானதோ ஓரளவுக்கோ அல்லது சற்று அதிகமாகவோ ஒருவருக்கு தெரிந்திருக்குமேயானால், அவருக்கு வரவேண்டியது உள்ளார்ந்த தன்னம்பிக்கைதானே தவிர, உடல் மொழியில்... வெளித் தோற்றத்தில் கண்ணை உறுத்துகின்ற கொக்கரிக்கும் ஆணவமல்ல. ஓர் உரையாடலில் அல்லது நேர்காணலில் கேள்வி கேட்பவர்களை முட்டாள்களாகப் பார்க்கும் பார்வையும், பாவனையும், உடல் மொழியும் எப்படித் தகுதியாகும்?

உழைப்பதால், படிப்பதால் ஒருவருக்கு பெருகும் ஆற்றல் என்பது ஒருவரை அடக்கத்தோடு பயணிக்கச் செய்ய வேண்டும். அதேவேளை, வெற்றி என்பது தரமானதாக, தகுதி படைத்ததாக, வளமாக இருக்க வேண்டும் என்பதையே ஆர்ப்பாட்டமாக ஜெயிக்கின்றோம் என்று நாம் சொல்கிறோம். அந்த வகையில், படித்து நல்லதொரு பணியில் அமரும் எவருக்கும் இருக்க வேண்டியது சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பும் தான். எனவே, அடக்கத்தோடு படித்து, ஆர்ப்பாட்டமாக ஜெயித்து, அர்பணிப்போடு பணிசெய்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com