உலகெங்கும் தமிழ் இணைய வானொலிகள்!

உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வந்த பின்பு  வானொலிகளின் பயன்பாடு பெருமளவில் குறைந்து போய்விட்டது என்றாலும், பண்பலை வானொலிகளின் வரவுக்குப் பின்னால் அது  உயிர்ப்பித்து எழுந்தது.
உலகெங்கும் தமிழ் இணைய வானொலிகள்!


உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் வந்த பின்பு  வானொலிகளின் பயன்பாடு பெருமளவில் குறைந்து போய்விட்டது என்றாலும், பண்பலை வானொலிகளின் வரவுக்குப் பின்னால் அது  உயிர்ப்பித்து எழுந்தது. இணையம், திறன்பேசி என்று மேலும் சில புதிய தொழில்நுட்பங்களின் வரவால், வானொலி கேட்கும் ஆர்வமானது ஓரளவு குறைந்து போனாலும்,  நவீன ஊடகமான இணையத்திலும் இணைய வானொலிகள் பல இடம் பெற்றிருக்கின்றன.

உலகின் இணையப் பயன்பாட்டிலிருந்து வரும் பல்வேறு மொழிகளில் இணைய வானொலிகள் உருவாக்கப்பட்டு, ஒலிபரப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

இணையப் பயன்பாடு அதிகமுடைய அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இணைய  வானொலிப் பயன்பாடுகளும் அதிக அளவில் இருந்து வருகின்றன. மேலும், ஆங்கில மொழியிலான இணைய வானொலிகள் வருவாய் ஈட்டித்தரும் வகையிலும் அமைந்திருக்கின்றன. 

உலகின் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், எதிர்பார்த்த வருவாய் ஏதும் கிடைக்காத நிலையிலும், தங்களது தாய்மொழியான தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றால், தமிழ் இணைய வானொலிகளை இணையத்தில் நிறுவி, தமிழ் மொழியிலான நிகழ்வுகளை ஒலிபரப்பிக் கொண்டிருக்கின்றனர். 

இந்தத் தமிழ் இணைய வானொலிகள் குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி, தமிழ் வானொலிகள் தளம் (Tamil Radios.com) எனும் பெயரில் ஆங்கில மொழியிலான ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் முகப்புப் பக்கத்தில் தமிழ் வானொலிகள் செய்தித்திரட்டு (தமிழ் ரேடியோ டைரக்டரி)  எனும் பெயரில் தமிழ் வானொலிகளின் இலச்சினைகள் பட்டிய லிடப்பட்டிருக்கின்றன. 

இத்தளத்தின் இடதுபுறம் மேலான வானொலிகள்,  வகைமைப்படுத்தப்பட்ட தேடல், இருப்பிடத் தேடல்  என்று மூன்று முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலான வானொலிகள் எனும் தலைப்பில் தமிழ் மொழியில் முன்னிலையிலிருக்கும் 43 இணைய வானொலிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

வகைமைப்படுத்தப்பட்ட தேடல் எனும் தலைப்பில் ஆசியன், கலைஞர்கள், நாடு, பக்தி. நேரடி ஒலிபரப்பு என்று 16 தலைப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இருப்பிடத் தேடல் எனும் தலைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா, மலேசியா, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், இலங்கை, சுவிட்சர்லாந்து, தமிழ்நாடு, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய ராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று 15 இடப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

இப்பட்டியலிலுள்ள தலைப்புகளைச் சொடுக்கினால், வலதுபுறம் அந்தப் பிரிவுக்கேற்ற இணைய வானொலிகளின் இலச்சினைகள் கிடைக்கின்றன. இந்த இலச்சினைகளின் மேல் சொடுக்கினால், அந்தத் தமிழ் இணைய வானொலி குறித்த சிறு குறிப்புகளுடன் அந்த வானொலியினை இத்தளத்திலேயே  கேட்பதற்கான வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. 

வானொலி கேட்பதில் ஆர்வமுடையவர்கள், இணைய வசதி கொண்ட கணினி அல்லது திறன்பேசிகளின் வழியாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஒலிபரப்பப்பட்டு வரும் தமிழ் இணைய வானொலிகளின் நிகழ்வுகளைக் கேட்டு மகிழ்ந்திட https://www.tamilradios.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com