கற்றுக் கொள்ளுங்கள்...  விரைவாக!

போட்டி நிறைந்த உலகில் நம் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒவ்வொரு நாளும் நம்முடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வது இன்றிமையாதது.
கற்றுக் கொள்ளுங்கள்...  விரைவாக!


போட்டி நிறைந்த உலகில் நம் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒவ்வொரு நாளும் நம்முடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வது இன்றிமையாதது. படிப்பிலும் சரி, வேலையிலும் சரி, நமக்கு வளர்ச்சி இருக்க வேண்டுமெனில், வரலாற்றில் நம் சாதனை பதிவு செய்யப்பட வேண்டுமெனில் காலமாற்றத்திற்கேற்ப நமது அறிவை நாம் வளர்த்துக் கொள்வது அவசியமே.

மேலும், தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக உருவெடுத்து வருகின்றன. புதிய கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. நாளுக்குநாள் போட்டிகளும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து உருவெடுத்து மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப நம்மையும் அறிவுரீதியாக தயார்ப்படுத்திக் கொள்வது அவசியமாகிவிட்டது.

அதிலும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதனை குறிப்பிட்ட நேரத்துக்குள் வேகமாக கற்றுக் கொள்ளத் திட்டமிட்டு, செயலாற்றுவது சிறந்த பயனைத் தரும். மேலும் அதே தொழில்நுட்பத்தில் ஏதேனும் புதிய வளர்ச்சி வரும்பட்சத்தில் அதனை உடனடியாகத் தொடர்ந்து கற்றுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத்தில் நீங்கள் புதிய கண்டுபிடிப்புகளைக் கூட நிகழ்த்த முடியும்.

மேலும் இன்று இருக்கும் தொழில்நுட்பம் அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றமடையலாம். கடந்த 5 ஆண்டுகளில் மொபைல் போனின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே புதிதாக கற்றுக் கொண்டால் மட்டுமே இப்போது மட்டுமல்ல, வருங்காலத்திலும் நாம் உயிர்த்திருக்க முடியும்.

புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கற்றுக்கொள்வது எப்படி? சில குறிப்புகள் இதோ:

அடிப்படை அறிவு:

இக்காலத்தில் ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாள வேண்டிய சூழ்நிலை (மல்ட்டி டாஸ்க்கிங்) உள்ளது. அன்றாட வேலைகளைத் தாண்டி ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் இருந்தாலும் நேரமின்மையே கற்றுக் கொள்ளத் தடையாக உள்ளது என்று பலரும் கூறுகின்றனர். முறையான நேர மேலாண்மை மூலமே, புதியன கற்பதற்கான நேரத்தை நாம் ஒதுக்க முடியும்.

நீங்கள் கற்றுக்கொள்வதைவிட குறிப்பிட்ட, திட்டமிட்ட நேரத்தில் அப்படிக் கற்றுக் கொள்வதை முடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் கற்றுக்கொள்ளும் புதிய தொழில்நுட்பம் குறித்த வலுவான அடிப்படை அறிவைப் பெறுவது அவசியம். அது நேரம் விரயமாவதைக் குறைக்கும். திட்டமிட்ட நேரத்தில் கற்றுக் கொள்வதற்கும் உதவும்.

உதாரணமாக, நீங்கள் ஒரு வெப்சைட் டெவலப்பராக விரும்பினால் "எம்.டி.என். ஆவணங்கள்' ஒரு சிறந்த குறிப்பு ஆவணமாக உள்ளது. அதில், எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவாஸ்கிரிப்ட், எச்டிடிபி / டிஓஎம் என தொழில்நுட்பங்கள் குறித்து விரிவான குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

இந்த அடிப்படைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் சிரமமாக இருந்தாலும், இவற்றின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை நீங்கள் விரைவாகக் கற்றுக் கொள்ளலாம்.

வேகமாகக் கற்றல்:

புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இன்று பலரும் செல்வது பயிற்சி மையங்களைத் தேடித்தான். பயிற்சி மையங்களுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால், சரியான பயிற்சி மையங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொள்ளும் திறன் வேறுபடும். சிலர் அடிப்படைகளை பொறுமையாகக் கற்றுக்கொண்டு அதன் பின்னர் வேகமாகக் கற்பார்கள். சிலர் ஆரம்பம் முதலே வேகமாக செயல்படுவர். இதில் நீங்கள் எப்படி என சுய பரிசோதனை செய்து கொண்டு அதன்படி கற்றுக்கொண்டால் உங்கள் கற்றலை வேகமாக்க முடியும்.

நீங்கள் கற்கும் பயிற்சி மையங்களிலும் உங்களுடைய கற்றல் திறனைத் தெரியப்படுத்தி அதற்கேற்ற வேகத்தில் உங்களுக்கு கற்றுக்கொடுக்க அறிவுறுத்தலாம். இதன் மூலமாக உங்களுடைய நேரம் மிச்சமாகும்.

மேலும் எளிதாகக் கற்பதற்கு புதிய தொழில்நுட்பம் குறித்து ஏற்கெனவே கற்றவர்களின் அறிவு, அதுகுறித்த செயல்முறை விடியோக்களைப் பார்த்தல் போன்றவை கற்றுக்கொள்வதை எளிதாக்கும்.

இதில் முக்கியமானது, உங்கள் கற்றலுக்குப் பொருந்தாத வழிகளை நீங்கள் தேர்வு செய்யக் கூடாது. அதாவது எந்த வழியில் படித்தால் எளிதாக உங்களால் புரிந்து கொள்ள முடியுமோ அதனைச் செயல்படுத்துங்கள். அவ்வாறு செய்தால் வேகமான கற்றலில் பயன்பட முடியும்.

செயல்பாடு:

நீங்களே இணையத்தைப் பயன்படுத்தி சுயமாகக் கற்றுக் கொள்ளும் முயற்சியையும் மேற்கொள்ளலாம். அதேநேரத்தில் சில பயிற்சிகளுக்கு பயிற்சி
யாளர்களின் ஆலோசனை வேண்டும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். கற்றுக் கொண்டது ஏட்டறிவு என்பதாக நின்றுவிடாமல், கற்றுக் கொண்டவற்றை நடைமுறையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அப்போது புதிய சிக்கல்கள் எழும். அவற்றைத் தீர்க்க நீங்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் உங்கள் கற்றலை வலுவாக்கும். அந்த தொழில்நுட்பத்தில் நீங்கள் திறமைமிக்கவராக, வல்லுநராக ஆகி விடுவீர்கள்.

கற்றலைச் செயல்படுத்துதல், உங்கள் கற்றலை வலுப்படுத்துகிறது; முழுமைப்படுத்துகிறது. கற்றலில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவுகிறது. தொழில்நுட்பத்தைப் பற்றி மிகவும் ஆழமான மட்டத்தில் சென்று அறிய முடிகிறது.

நீங்கள் கற்றுக் கொண்ட தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தி பழகிவிட்டால், உங்களுக்குத் தகுதியான, சிறப்பான வேலை கிடைக்க அது உதவியாக இருக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்குக் கிடைத்த வேலையை எளிதாகச் செய்வதற்கும் மேலும் அதில் முன்னேறிச் செல்வதற்கும் இந்த தொழில்நுட்ப அறிவு பயன்படும்.

சரியான வேலை:

நீங்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது கண்டிப்பாக உங்களுடைய வேலை அல்லது வளர்ச்சிக்காகவே இருக்கும். எனவே, வேலைக்குச் செல்வதாக இருந்தால் தைரியமாக அந்த தொழில்நுட்பம் சார்ந்த ஒரு வேலைக்கு விண்ணப்பியுங்கள். அதிலும் அந்த தொழில்நுட்பத்தை சுதந்திரமாக, சரியாக பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல பணிச்சூழலை தேர்வு செய்யுங்கள். ஏனெனில் அப்படிப்பட்ட சூழல் இருந்தால் மட்டுமே அதன் தொடர்ச்சியான வளர்ச்சி நிலைகளை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். ஒரு தொழில்நுட்பத்தை நன்றாகத் தெரிந்துகொண்டால்தான் நேர்காணலில் அதுகுறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பயப்படாமல் பதில் சொல்ல முடியும்.

எந்த தடைகள் வந்தாலும் ஓடும் நதியைப் போல உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்வில் முன்னேறுவதற்கு - உங்களுக்கான வளர்ச்சிப்பாதையை உருவாக்குவதற்கு - புதியனவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆல் தி பெஸ்ட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com