கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!: மூளையே  மூலதனம்! - 1

எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம். தலைக்கு மூளை மூலதனம். மூளையில் சிந்தனை, எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன.
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!: மூளையே  மூலதனம்! - 1

எண்சாண் உடம்பிற்கு தலையே பிரதானம். தலைக்கு மூளை மூலதனம். மூளையில் சிந்தனை, எண்ணங்கள் ஊற்றெடுக்கின்றன. தோளில் வீரம், வலிமை பிறக்கிறது. "என்னே என் தோள்வலி' என்று இறுமாப்படைகிறோம். தொடையில் நடை; நடையால் மனிதத் தொடர்பு உண்டாகிறது. பாதம் உடலைச் சுமக்கிறது; பயணம் தொடர்கிறது. சமுதாயத்தில் இது காலம் காலமாகத் தொடர்கிறது. இதை அந்த காலத்தில் "சதுர்வர்ணம்' என்றார்கள்.  

மூளை  உணர்ச்சிகளின் கணினி. மூளை  நினைவுகளின் சேமிப்புக் கிடங்கு. ஐம்புலங்களின் அனுபவ நீரை தேக்கிவைத்துக் கொண்டு,  அதை இணைத்து மேம்படுத்தி,  உடலின் உள்ளுறுப்புகள் வெளியுறுப்புகளுக்கு அனுப்பி வைத்து இயக்குகிறது, பட்டு நூல் வளர்ப்புபோல்!  

மனிதன் மூளையை உபயோகித்து விஞ்ஞான உலகில் பல சாதனைகள் படைத்துள்ளான். ஆனாலும் மூளை எவ்வாறு தனது பணியைச் செய்கிறது? மற்ற உடல் உறுப்புகளை இயக்குவதில் அதன் திறன் என்ன? எப்படி  எளிதாக செய்யக்கூடிய பணிகளில் சில நேரங்களில் தடங்கல் ஏன் ஏற்படுகிறது? ஏன் மூளை வேலை செய்ய மறுக்கிறது  போன்றவை இன்னும் புதிராகவே இருக்கின்றன. மூளை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி - நியூரோ சையன்ஸ் இன்னும் ஆரம்ப நிலையிலே இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி   வி.எஸ். ராமசந்திரன்.

"மமல்ஸ்' எனப்படும் பாலூட்டி உயிரினங்களில் மனிதனின் மூளை தான் பெரியது. அதனால் தான் மற்ற ஜீவராசிகளை விட மனிதன் தனது மூளையின் வலிமையை வைத்து  பல புதுமைகளைப் படைக்க முடிகிறது. 

மூளையின் பாகங்கள் பற்றி பள்ளியில் நாம் படித்திருப்போம். மூளை இடது, வலது என்று இரு பாகங்கள் கொண்டது. இடது புறம் நமது செயல் திறன், திட்டமிடும் பாங்கு, படிப்படியாக பணி நிறைவேற்றம், போன்ற ஆளுமை இயல்புகளை நிர்ணயிக்கிறது. வலது புறம் ஒருவரின் கலைத்திறன், ஓவியம், இசை, நாட்டியம் என்று  பல்கலைகளில் உள்ள  ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. உணர்ச்சிப்பூர்வமான செயல்கள் வலதுபுற மூளையினால் வருபவை. பெரும்பாலான பெண்கள் வலதுபுற மூளையில் வலிமையும், பொதுவாக ஆண்கள் இடதுபுற மூளையில் வலிமையும் பெற்றுள்ளனர். இதில் விதிவிலக்குகள் அதிகம்.  

எந்த ஒரு குறிக்கோளையும் அடைவதற்கு அயராத முயற்சி தேவை. முயற்சிக்கு ஆதாரம் தேவையான  மூலதனங்கள். மூலதனம் என்றவுடன்  முதலில் நமக்குத் தோன்றுவது நிதி ஆதாரம். தொழிற்சாலைக்கு நிலம், வியாபார நிறுவனத்திற்கு ஏதுவான கட்டமைப்பு, உள்ளாட்சி அமைப்பிலிருந்து தேவையான உரிமங்கள் என்று மூலதனங்களைப் பெற திட்டமிடப்படுகிறது. ஆனால்  முயற்சியை முடுக்கிவிட மூளை தான் பிரதான மூலதனம். அடுத்த மூலதனம் காலக்கெடு. இவ்விரண்டும் தான் முயற்சியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது.  

நல்ல உழைப்பாளிகள்; சாதுர்யமாக மூளையை உபயோகித்து பணி செய்யக்கூடியவர்கள் தாம் ஒரு நிறுவனத்தை முதுகெலும்பாக இருந்து நிமிர்த்திப் பிடிக்கின்றனர். காவல்துறைக்கு அடித்தளமாக விளங்குபவர்கள் புலன் விசாரணையில் தேர்ந்த காவல் அதிகாரிகள். கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் இரு அமரிக்கர்கள். மூளைதான் அவர்களது மூலதனம்! இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் மூளைதான் வெற்றியை நிர்ணயிக்கிறது. 

உலகில் புதுமை புரட்சி ஏற்படுத்தப்பட்டது, கடந்த ஐந்நூறு ஆண்டுகளில்தான். முதலில் தொழில் புரட்சி இங்கிலாந்தில் தொடங்கியது. கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. பின்பு விஞ்ஞான புரட்சி, மின்சக்தி கண்டுபிடிப்பிலிருந்து அணுவைத் துளைக்கும் அளவிற்கு மனிதனின் கூரிய அறிவு பல நாடுகளில் செயல்பட்டதின் விளைவாக, பிரமிக்க வைக்கும் வளர்ச்சி. கடந்த நூற்றாண்டின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு கணினியின் வானளாவிய செயல்திறன். விஞ்ஞான புரட்சியை அடுத்து பிறந்தது,  அறிவுப் புரட்சி - நாலெட்ஜ் ரெவல்யூஷன்!  

இப்போது நாலாவது புரட்சி செயற்கை நுண்ணறிவு, உலகம் வேறு கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  அறிவின் செறிவுதான் மூலதனம். 

அறிவு கூர்மையான இளைஞர்களை  எந்த நாடு தயார் செய்கிறதோ,  அந்த நாடு வல்லரசாகும். ஏழை,  பணக்கார நாடு என்ற பாகுபாடு மறைந்து அறிவில் சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்கும் நாடு,  உலக அரங்கில் வரவேற்கப்படும். அதிகமான இளையவர்களைக் கொண்ட நாடுகளில் சைனா,  இந்தியா முன்னிலையில் இருக்கின்றன.  

நமது நாட்டின் ஜனத்தொகையின் சராசரி வயது 29. சைனா ஜனத்தொகையின் வயது 36. ஜப்பான் நாட்டில் 48. உலகத்திற்கு இளம் உழைப்பாளிகளைக் கொடுக்கும் நிலையில் நமது நாடு உள்ளது. அதனால் தான் திறன் மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.  

இளம் பருவத்தில் நாம் கற்பது நிலைத்து நிற்கிறது. நாம் அயர்ந்தாலும் மூளை என்ற தலைமைச் செயலகத்திற்கு ஓய்வில்லை. அது சுழன்று கொண்டே இருக்கிறது . ஒரு குந்துமணி அளவு மூளையில் கூட  கோடிக்கணக்கான " நியூரான்' எனப்படும் நரம்பணுக்கள் பரஸ்பரம் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. நாம் பார்ப்பது, எண்ணுவது எல்லாம் பதிவாகிறது, தேவையான தருணத்தில் அது நமக்கு ஞாபக அலைகள் மூலம் பளிச்சிடுகிறது.  

இறைவன் படைப்பில் உயிரினங்களின் உடல் அமைப்பு அற்புதமானது. சோம்பி இருந்தால் உடலில் தேய்மானம் ஏற்படுகிறது. எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறோமோ,  அந்த அளவுக்கு உடலின் மரபணுக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. உடல் உறுப்புகள் புத்தாக்கம் பெறுகின்றன. இதனால் தான் உடல் பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது. மூளைக்கும் இது பொருந்தும். அதிகம் மூளைக்கு வேலை கொடுத்தால், நல்ல எண்ணங்களை உள்வாங்கினால் அதுவே நம் நல் செயல்கள் மூலம் பிரதிபலிக்கும்.  

எந்த ஒரு முயற்சியிலும் மூன்று கட்டங்கள் உள்ளன. முதலில் ஐயமறப் படித்தல், பின்பு அதை உள்வாங்கி ஆழமாக சிந்தித்தல், இந்த சிந்தனைதான் தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும். முன்றாவதாக, செயலாக்கத்தில் கவனம் செலுத்துவது. தடைகள் வரும்; அதை கடந்து தளராது எடுத்த செயலை துல்லியமாக நிறைவேற்றுவதின் மூலம் குறிக்கோளை அடைய முடியும்.  

உலகில் அதிசயத்தக்க சாதனைகள் மனிதனின் மூளையை மூலதனமாக வைத்து படைக்கப்பட்டவை. மூளையின் சக்திக்கு எல்லையே இல்லை. விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன்அவர்களின் அற்புதமான கண்டுபிடிப்புகள், பிரபஞ்சத்தின் நேரம், காலம், விண்வெளியிடம். இவற்றின் இயக்கங்களை ஆராய்ந்தவர் அதிகபட்சம் தனது மூளையின் முப்பது சதவிகித சக்தியைத் தான் உபயோகித்தார் என்று கூறப்படுகிறது. இதிலிருந்து மூளை ஆற்றலின் வலிமையை உணரலாம். 

"இறைவன் கொடுத்தால் குறையாது, மனிதன் கொடுத்தால் நிறையாது' என்பார்கள். இறைவன் எல்லாருக்கும் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி குறையொன்றும் இல்லாமல் மூளை சக்தியைக் கொடுத்திருக்கிறான். அது குன்றாமல் குறையாமல் பயன்படுத்த வேண்டும். முனைப்பாக செயல்பட்டால் எதிலும் வல்லுநராகலாம் . 

ஹாஸ்யமாகச் சொல்வார்கள்:

சர்வதேசச் சந்தையில் இந்திய மூளைக்குதான் விலை அதிகம் - உபயோகப்படுத்தாததால்.
ஜப்பான் மூளை குறைந்த விலை -அதிகம் உபயோகப்படுத்தப்பட்டதால்! அந்த நிலை மாற வேண்டும்.    
நமது மூளையைச் சலவை செய்ய பல சமூக விரோத சக்திகள் இணையதளம், ஊடகங்கள் மூலம் முற்படுகின்றன . அவற்றிலிருந்து இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும். மூளையின் சக்தியை வெளிப்படுத்துவது நமது நினைவாற்றல். இதை கவனக கலையாகப் பயின்று சாதனை படைத்த தமிழ்நாட்டு  கவனகர்கள் செய்குத்தம்பி பாவலர்- சதாவதானி, கனகலிங்கம்- தசாவதானி, 
கனக சுப்புரத்தினம் - முப்பது கவனகர் . இப்போது கலைசெல்வன் என்ற சேலம் வாழ் இளைஞர், நூறு பொருண்மைகளை ஒரே நேரத்தில் கவனித்து பதில் சொல்ல கூடியவர்  "சதாவதானி' என்று போற்றப்படுகிறார். இதை மற்ற இளைஞர்களும் வளர்த்துக் கொள்ளலாம் . 
இப்போது டிஜிட்டல் தளம் என்பது நமது கையில் வந்துவிட்டது, செல்போன் மூலம்! ஆனால் இதன் பின்னணியில் மூன்று இந்தியர்கள்; அவர்களின் கண்டுபிடிப்பால் இது சாத்தியமானது என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? கர்நாடகா மாநிலத்தில் பிறந்து பொறியியல் பட்டம் பெற்று உயர் படிப்பு மெக்சிகோவிலும் அமரிக்காவிலும் படித்த  நாசிர் அகமது மற்றும் அவரோடு சேர்ந்து ஆராய்ச்சியில் பங்கு கொண்ட பொறியியல் வல்லுநர்கள் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற நடராஜன், கே ஆர் ராவ் ஆகியோரின்  டிஸ்க்ரீட் கோசைன் ட்ரான்ஸ்ஃப்ர் என்ற அவர்களின் ஆராய்ச்சி முடிவு 1974- ஆம் வருடம் வெளியானது. இப்போது நாம் புகைப்படங்களையும் ஏன் திரைப்படங்களையும் கையளவில் பார்க்க முடிகிறது என்றால் நமது நாட்டைச் சேர்ந்த இந்த வல்லுநர்களின் உழைப்புதான் காரணம். அவர்கள் வகுத்த கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து இப்போது உயர் சக்தி டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் படங்களை அனுப்ப முடிகிறது. உலகில் நடக்கும் நிகழ்வுகளை உலகில் எந்த மூலையில் இருந்தும் அதே நேரத்தில் பார்க்க முடிகிறது. என்ன அற்புதமான கண்டுபிடிப்பு! அவர்களின் மூளை தான் மூலதனம்.
அறுவைச் சிகிச்சை மூலம் உடல் உறுப்புகள் இதயம், சிறுநீரகம், எலும்பு ஆகியவற்றை மாற்றிப் பொருத்தலாம். ஆனால் மூளையை மாற்ற  இயலாது. மூளை அதிக ரோஷமுள்ளது . "மூளை இருக்கிறதா' என்று யாராவது திட்டினால் அவமானமாகக் கருதுகிறது!  
மண்டை ஓட்டில் அதிகமான மடிப்புகள் சிந்தனை களஞ்சிய பெட்டமாக நமக்கு உதவுகின்றன. மூளை அறிவுச் சுரங்கம், புத்தியை தீட்டி ஞான ஒளி என்ற மாணிக்க கற்கள் பெறுவோம்.  
புதிர்: மனித மூளையின் எடை என்ன? உலகிலேயே "தலைகனம்' பிடித்தவரின் மூளையின் எடை எவ்வளவு? எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? 

(விடை, அடுத்த வாரம்)

கட்டுரையாளர் : மேனாள் காவல்துறைத் தலைவர் மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com