மகிழ்ச்சியா... மனநிறைவா? எது தேவை?

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மகிழ்ச்சியா... மனநிறைவா? எது தேவை?

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலையே. அதைக் கற்றுக்கொண்டால் துன்பத்திலும் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

- அரவிந்தர்

""நீங்கள் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்றீங்க? அதை கைவிடுங்க'' என்று யாராவது சொன்னால், அவரை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?  

நாம் முதல் வரியில் வாசித்த அந்த உசுப்பேற்றும் கருத்துக்கு சொந்தக்காரர் இரா.குமரன்.  காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறை  துணைப் பேராசிரியராகப் பணிபுரியும் நண்பர். மாணவர்கள்,

இளைஞர்களிடையே நல்லதொரு நட்புறவைப் பேணும் உற்சாகமான மனிதர்.
எங்களது உரையாடலில், அவர் கூறிய கருத்துகளின் சாராம்சம் இதுதான்: 

""இரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் உள்ள பல கடைகளில் நான் பார்த்திருக்கிறேன், ஒருவர்  எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?  என்பது குறித்தான தலைப்பில்தான் அதிகமான புத்தகங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியை அளவீடாகக் கொண்டு உலக நாடுகளை வரிசைப்படுத்துகிற நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. கூகுளில் "மகிழ்ச்சியோடு இருப்பது எப்படி?' என்று நான் தேடியபோது ஏழு கோடி விடைகள் கிடைத்தன. "மனநிறைவோடு இருப்பது எப்படி?' என்று நான் தேடியபோது 18 லட்சம் விடைகள் மட்டுமே கிடைத்தன. மொத்தத்தில் உலகெங்கும்  மகிழ்ச்சிக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை மனநிறைவுக்கு கொடுப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது'.

சரி,  மகிழ்ச்சி என்றால் என்ன? மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் என்ன வேறுபாடு?

ஒருவர் தனிநபராகக் கூட மகிழ்ச்சி என்கிற நிலையை அடைந்துவிட முடியும். உதாரணமாக,  மற்றவர்களின் துயரத்தில்  கூட மகிழ்ச்சி அடைகின்ற மனிதர்கள் இருக்கிறார்கள். ஓர் அறையில் தனியாக கதவை மூடிக்கொண்டு கூட நாம் மகிழ்ச்சியாக இருந்துவிடலாம். நமக்கு கிடைத்த "ஆப்பிள்' போனுக்காக, நமக்கு கிடைத்த விலை உயர்ந்த காருக்காக அல்லது அந்த காரை அகன்ற சாலையில்  ஓட்டிச் செல்லும்போதும், தன்னைச் சுற்றிலும் துயரம், சோகம் எல்லாம் இருந்தபோது கூட காரை ஓட்டிச் செல்லும் அந்த நபர் மகிழ்ச்சியாக இருந்து விட முடியும். ஆனால் இது பலருக்குமான அமைதியைத் தருகிற, நிம்மதியை தருகிற மனநிறைவாக இருக்குமா? 

மகிழ்ச்சி என்பது ஒருவிதமான உடலியல் சார்ந்த, உடலில் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடிய உணர்வுகளின் தொகுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு வகையில் நிரந்தரமற்றதும் கூட. நல்ல மலர்களை, பிடித்த மனிதர்களை, கோடைக் காலத்து  மழையைப் பார்க்கும்போது அல்லது நாம் நீண்ட நாள் ஆசைப்பட்ட ஒரு பொருள் நமக்கு கிடைக்கும்போது நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் இந்த மகிழ்ச்சி என்பது அந்த நொடியில் நாம் உணரக் கூடிய உணர்வுகளின் உடலியல் சார்ந்த உணர்வுகளின் பிரதிபலிப்பு / வெளிப்பாடு. அந்த மகிழ்ச்சி சிறிது நேரத்திலோ, காலத்திலோ மறைந்து போவதும் உண்டு. அதனால் தான் சில சிந்தனையாளர்கள், "மகிழ்ச்சி என்பது மிகவும் விலை உயர்ந்த பொருளாக இருக்கிறது', "மகிழ்ச்சி என்பது நேரத்தை 
குடிக்கும் ஓர் உணர்வாகவும் இருக்கின்றது' என்றும் கூறுகிறார்கள்.

பெரிய பெரிய தேசத் தலைவர்களும், விடுதலைப் போராட்ட வீரர்களும், உரிமைகளைப் பெற்றுத் தந்த தலைவர்களும் மகிழ்ச்சியை மட்டுமே தேடிப் போனவர்களாக இருந்திருந்தால், ஒருவேளை நாம் வாழும் இந்த உலகம் இந்த அளவிற்குக் கூட சிறந்த உலகமாக மாறி இருக்காது. பொதுநலனுக்காக, மக்களின் விடுதலைக்காகப் போராடிய எவரும், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான தருணங்கள் எவ்வளவோ இருந்திருந்தாலும், அந்த மகிழ்ச்சியான தருணங்களை எப்போதுமே தங்களுக்குச் சாதகமான மாற்றிக்கொண்டவர்கள் அல்ல. அந்த மகிழ்ச்சியைத் தக்கவைப்பது என்பது அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை. ஏனெனில் மகிழ்ச்சி என்பது குறுகிய கால, குறுகிய ஆதாரங்களில் இருந்து பெறப்படுவது. ஆனால் மனநிறைவு என்பது நாம்  நம் ஆன்மாவோடு ஆத்மார்த்தமான உறவைக் கொண்டிருக்கிறோமா இல்லையா என்பதில் இருந்து வருவது.

நாம் உலகில் மகிழ்ச்சியைத் தேடுவதும், மகிழ்ச்சியை அடைய முயற்சிப்பதும் உன்னதமான நோக்கங்களாக மாற்றப்பட்டு  நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை ஒரு மனநோயாளியைப் போல விரட்டித் திரிவதை காட்டிலும், ஏன் மனநிறைவை நோக்கி நாம் பயணம் செய்யக் கூடாது? மனநிறைவாக வாழ்தல் என்பது மகிழ்ச்சியாக வாழ்வதைக் காட்டிலும் அழகானது, அர்த்தமுள்ளது'' என்று சொல்லி முடித்தார் குமரன்.

மேற்கத்திய தத்துவ ஞானிகளில் ஒருவராகிய ஸ்கோபன்ஹாவர், "முழுவதும் மகிழ்ச்சியாக இருத்தல் என்பது சாத்தியமில்லாதது' என்று கூறுகிறார். ஆனால், திருவள்ளுவரோ, "ஈகை' எனும் தலைப்பில் இப்படி சொல்கிறார்:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

- (குறள்: 228)


"இல்லாதவர்க்குக் கொடுப்பதால் கொடுப்பவரும் பெறுபவரும் முகத்தாலும் மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். பிறர்க்குக் கொடுக்காமல் பொருளைச் சேமித்து வைத்து  பிறகு அதை இழந்துவிடும் கொடியவர்கள் அம்மகிழ்ச்சியை அறியார்களோ?' என்று சாலமன் பாப்பையா இக்குறளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.  

யாரையும் வெறுக்காத, எதைப் பற்றியும் கவலைப்படாத, குறைவாக எதிர்பார்க்கின்ற, அதிகமாக கொடுக்கின்ற, இந்த பிரபஞ்ச ஆற்றலின் மீதோ... இயற்கையின் மீதோ நம்பிக்கை இருக்கின்ற, எப்போதும் புன்னகைக்கின்ற, நிதானமாக இருக்கின்ற ஒரு வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கின்ற யாரும் மனநிறைவோடு இருக்கலாம். இந்த வகையான மனநிறைவே நீடித்த, பலருக்கும்  நன்மை பயக்கிற  மகிழ்ச்சி என்று புரிந்து கொள்வோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com