நோ காம்ப்ரமைஸ்!

வாழ்க்கைப் பயணம் மிக அற்புதமானது. அலாதி இன்பம் நிறைந்தது. ஆனால், தனி ஒருவராக வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள இயலாது.
நோ காம்ப்ரமைஸ்!


வாழ்க்கைப் பயணம் மிக அற்புதமானது. அலாதி இன்பம் நிறைந்தது. ஆனால், தனி ஒருவராக வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள இயலாது. சமூகத்துடன் இணைந்தே பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர், நண்பர்கள், சக பணியாளர்கள் என பல்வேறு நபர்களுடன் அன்றாடப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அத்தகைய பயணத்தை சுமுகமாக எடுத்துச் செல்வதற்கு முக்கியத் தேவையாக இருப்பது சமரசமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும். இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். வாழ்க்கையை இனிமையாக வாழ வேண்டுமெனில் சில விஷயங்களில் நாம் சமரசம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். எல்லா விஷயங்களும் நினைத்தபடிதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கக் கூடாது. அத்தகைய மனநிலை பல்வேறு தருணங்களில் மகிழ்ச்சியைச் சீர்குலைத்துவிடும்.

சில நேரங்களில் மற்றவர்களுடன் சமரசம் செய்து கொள்வதுதான் மகிழ்ச்சியைத் தரும். இக்கொள்கை வாழ்க்கைக்கான அடிப்படையாக இருப்பினும், சில விஷயங்களில் எக்காரணத்தைக் கொண்டும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

நாம் எவற்றில் எல்லாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது?

1. சுயமரியாதை
2. வாழ்க்கை இலக்குகளின் மீதான ஆர்வம்
3. தனிப்பட்ட நம்பிக்கைகள்

சுயமரியாதை:

மகிழ்ச்சியும் மரியாதையும் நிலைக்க வேண்டுமெனில் சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. சுயமரியாதையே நம் ஆளுமையை நிர்ணயிக்கிறது. அதற்கு ஒரு போதும் அதற்கு களங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே, சுய மரியாதையை எப்போதும் கைவிடக் கூடாது.

நம்மை மற்றவர்கள் மதிப்பீடு செய்ய சுய மரியாதையே உதவும். அதுவே நம் மனதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும். சமூகத்துக்கு நாம் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை சுயமரியாதையே வெளிப்படுத்தும். சுயமரியாதையைக் காப்பதற்கு முன்பாக நம்மைப் பற்றி நாமே முழுமையாக மதிப்பீடு செய்து கொள்வது மிகவும் அவசியம். சமூகம் நம்மை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் நாமே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் நம் சுயமரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஒருவேளை சுயமரியாதையைப் பற்றி கவலைப்படாமல் வாழ நேரிட்டால், நாம்
மற்றவர்கள் சொல்லுக்குக் கீழ்படிந்து நடக்கும் கைப்பாவையாக மாற நேரிடும். முடிவுகள் எடுக்கும் விஷயங்களில் நம் பேச்சுக்கு மதிப்பே இருக்காது. சமூகம் நமது தேவையை உணராதநிலை ஏற்பட்டுவிடும். அநீதியையும் தவறுகளையும் சகித்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். நம் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியாமல் போகும். அதையும் மீறி எடுத்துரைத்தாலும் அதைக் கேட்டு நடப்பதற்கு எவரும் இருக்க மாட்டார்கள்.
பிறரின் சொல்படி நடக்க நேரிடும். மற்றவர்களுக்கு அதிகபட்ச மரியாதையை அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், நமக்கு யாரும் மரியாதை அளிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, சுயமரியாதையை சமரசம் செய்து கொண்டால் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.
பிறருடன் இயல்பாக நடந்து கொள்ள முடியாது. நெருங்கிய நண்பர்களைக் கூட இழக்க நேரிடும்.
எனவே, சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
வாழ்க்கை இலக்குகளின் மீதான ஆர்வம்:
அடுத்ததாக, வாழ்க்கை இலக்குகளின் மீதான ஆர்வத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நான் இந்த வேலைக்குச் செல்வேன்; வாழ்வில் இத்தகைய உயர்ந்தநிலையை எட்டுவேன் என்று மனதில் உறுதி பூண்டுவிட்டால், அதை நோக்கித் தொடர்ந்து பயணிக்க
வேண்டும். நமது ஆர்வத்துக்கு பல்வேறு தடைக்கற்கள் முளைக்கும். உடனிருப்பவர்களே நம் ஆர்வத்துக்கு எதிராகப் பேசுவார்கள். அத்தகையோரிடமிருந்து சற்றும் சிந்திக்காமல் விலகிவிட வேண்டும். அவர்கள் நம்முடன் இருந்தால்
எதையும் சாதிக்க முடியாது.
பிறருக்காக வாழ்க்கை இலக்குகளின் மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது. நம் கனவுகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற கலங்கரை விளக்கமாக அவை விளங்குகின்றன. அத்தகைய மதிப்புமிக்க இலக்குகளை மற்றவர்
களுக்காகவும் சூழ்நிலைக்காகவும் எந்நேரத்
திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
பிறரின் கருத்துகளுக்கு வெறுமனே தலையை மட்டும் ஆட்டிவிட்டு, நம் இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேற வேண்டும்.
தனிப்பட்ட நம்பிக்கைகள்:
நமது தனிப்பட்ட நம்பிக்கைகளையும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நம் மனதின் எண்ணவோட்டங்களே செயல்களுக்கு அடிப்
படையாக அமைகின்றன. அவையே நம் நம்பிக்கைகளையும் வளர்க்கின்றன. நம் நம்பிக்கைகளை மற்றவர்களுக்காகச் சமரசம் செய்து கொண்டால், அவர்களைச் சகித்துக் கொள்ளும் சூழல் அனைத்து நேரங்களிலும் ஏற்படும்.
மற்றவர்களைப் போல நமக்கும் நம்பிக்கைகள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மற்றவர்களுடன் பல விஷயங்களில் நாம் வேறு
பட்டிருக்கலாம். அதுவே நம் தனித்துவத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. மற்றவர்களுடைய கருத்துகளில் இருந்து வேறுபடுகிறோம் என்பதற்காக, நம் தனிப்பட்ட நம்பிக்கைகளை மற்றவர்கள் இகழ்வதற்கு அனுமதிக்கக் கூடாது.
வாழ்க்கையில் பெரும்பாலான சமயங்களில் சமரசம் அவசியம் என்றாலும் கூட, சில முக்கிய விவகாரங்களில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் பயணிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com