புதிய முகங்கள்!

இ ந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேசமயம் 15 வயது முதல் 29 வயது உடையவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
புதிய முகங்கள்!

இந்திய மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேசமயம் 15 வயது முதல் 29 வயது உடையவர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இது ஒரு பெரிய சவாலாகும். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகப்பெரிய சொத்து தான். மிகப்பெரிய மனித வளம்தான். ஆனால் பல இடங்களில் சவாலாகவும் இந்த எண்ணிக்கை மாறிவிடுகிறது. இதன்காரணமாக லாபம் தரக்கூடிய வேலைவாய்ப்பினைக் கண்டுபிடிப்பது என்பதே இன்றைய இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.

இன்று உலகம் கடந்த காலங்களை விட மிகுந்த ஆற்றல் உடையதாக மாறிவிட்டது. இத்தகைய மாற்றங்களுக்கு இந்தியாவும் தயாராகி வருகிறது. இருப்பினும் அத்தகைய மாற்றங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்தியாவில் புதிய உற்பத்தியை உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரத்தில் உயர்வடையும் முயற்சிகளில் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் இன்றைய இளைஞர்கள் தனியார் நிறுவனங்களைத் தாண்டி சிறந்த ஊதியத்தை உறுதி செய்யும் அரசு வேலைகளை பெறுவதற்காக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் நிறைய இளைஞர்கள் அதிக கல்வித் தகுதிகளை உடையவர்களாக இருக்கின்றனர். அந்த தகுதிக்கு தகுந்தவாறு வேலை கிடைப்பதற்காகப் போராடுகின்றனர். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்துவருகின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை கல்வி முறை கூட பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காத நிலையை ஏற்படுத்தி விடுகிறது. கல்லூரி கல்வி அவர்களுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறன்களை வழங்காததால் வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது டிஜிட்டல் உலகம். நம் விரல் நுனியில் உலகமே இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது என்றாலும் கூட டிஜிட்டல் உலகின் எழுச்சிக்கு ஏற்ப வளர்ந்து விடவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய ஒவ்வொன்றிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் இணைந்தே இருப்பது இன்றைய இளைஞர்களுக்குச் சவாலான ஒன்றாகும்.

எதிர்கால இந்திய தலைமுறையின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்குக் காரணமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ள நிலையில், இந்திய இளைஞர்கள் விரும்பும் திறன்கள் மற்றும் வேலைகள் எவை? என்பதைத் தெரிந்து கொள்வதற்கும் தற்போதைய கல்விமுறை அத்தகைய திறன்களை வழங்குகிறதா? என்பதை மதிப்பிடுவதற்கும் உலகப் பொருளாதார மன்றம் மற்றும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ஓர் ஆய்வினை மேற்கொண்டது. இதில் இன்றைய இளைஞர்கள் சிறந்த லட்சியவாதிகள் ஆக இருப்பதும், அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதிக அக்கறையுடன் இருப்பதும் தெரிய வந்தது.

அதேசமயம் மாறும் திறன் தேவைகளுக்கு ஏற்ப உயர் கல்வியை பெறுவதற்கும், சிறந்த திறன் பயிற்சிகளை பெறுவதற்கும் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் கூட பல்வேறு காரணிகள் அவர்களின் முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதாகவும் , ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறுவதற்கு சில தடைகள் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. கல்வி நடவடிக்கையில் இருந்து மிக எளிதாகபொருளாதார நடவடிக்கைக்கு மாறும் வகையில் கல்வி சூழல் அமையவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இளைஞர்கள் பெரும் திரளாக கலந்து கொண்ட நிகழ்வுகளில் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது கீழ்க்காணும் விஷயங்கள் தெரிய வந்துள்ளன:

இளைஞர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, மாறிவரும் வேலைவாய்ப்பு சந்தையில் ஜொலிக்க ஆசைப்படுகிறார்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் குடும்பத்தினரின் தலையீடுகளை அவர்கள் விரும்பவில்லை.

இன்றைய இளைஞர்கள் அதிக வழிகாட்டுதலையும், தொழில் ஆலோசனையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விவரங்களையும் அதற்கான திறன்களையும் கூறுவதற்கு நிபுணர்கள் இல்லை என நினைக்கிறார்கள்.

அத்துடன் அதிக ஊதியத்தை தரக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ளவும், உயர்கல்வி கற்கவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர்.

இன்றையப் பணிச்சூழலில், கல்விச் சூழலில் ஏற்படக்கூடிய சோர்வு அழுத்தங்களில் இருந்து விடுபட வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கின்றனர்.

சுத்தமான காற்று ,நீர் போன்றவற்றை எதிர்பார்க்கும் இன்றைய தலைமுறை அதற்கு எதிராக செயல்படுபவருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறது.

பாலின வேறுபாடு இன்றி அனைவருக்கும் வேலை வாய்ப்பு சமத்துவம் வேண்டும் எனவும் , சம ஊதியம் வேண்டும் எனவும் இன்றைய தலைமுறை விரும்புகிறது.

இப்படி எண்ணற்ற விருப்பங்கள் இளைஞர்கள் மத்தியில் குவிந்து கிடக்கின்றன.

அந்த விருப்பங்களை ஒன்றிணைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.

ஒரு காலத்தில் தங்கள் முன்னோர்களின் அனுமதி இன்றி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒரு சிறு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலை இருந்தது.

ஆனால் இன்றைய டிஜிட்டல் மயமாக்கல் மூலம் சிறு குழந்தைகள் கூட தங்களைப் புதுப்பித்துக் கொள்வதுடன் பெற்றோர்களையும் புதுப்பித்து வருகின்றனர்.

இணையவழி செயல்பாடுகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெற்றி நடை போட்டு வருகின்ற நிலையில் புதிய ஸ்டார்ட் அப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை இணையவழியில் எளிதாக்கப்பட்டு விட்டன.

உலகம் கைக்குள் அடங்கி விட்டாலும் கூட உறவுகள் என்னவோ அந்நியமாகி வரும் காரணத்தால் இன்றைய இளைஞர்களுக்கு விரக்தியும் , சோர்வும் சலிப்பும் ஏற்பட்டு மன நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.

இப்படி தங்கள் திறன்களை வளர்ப்பதற்கான முயற்சிகளைக் கையிலெடுக்கும் இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன்களும் , மடிக் கணினிகளும் , இன்ன பிற மின்னணுச் சாதனங்களும் உதவுகின்றன. இத்தகைய புதிய காரணிகளால் அவர்களின் விளையாட்டு முறையும், உணவு பழக்கங்களும், சிந்தனைகளும் மாறிவிட்டன.

இளைஞர்கள் திறன் மிக்கவர்களாக மாறிவரும் அதே நேரத்தில் அவர்களில் மனமும் சோர்வடைந்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com