Enable Javscript for better performance
முந்தி இருப்பச் செயல்- Dinamani

சுடச்சுட

  

  முந்தி இருப்பச் செயல்

  By DIN  |   Published on : 04th May 2021 06:00 AM  |   அ+அ அ-   |    |  

  SUBA_1043752

   

  மனித மனத்தை ஒரு குரங்காகத்தான் பலரும் பார்க்கிறார்கள். வீ. சீதாராமன் ஒரு திரைப்படப் பாடலே எழுதியிருக்கிறார்: மனம் ஒரு குரங்கு; மனித மனம் ஒரு குரங்கு - அதைத் தாவ விட்டால், தப்பி ஓட விட்டால், நம்மைப்பாபத்தில் ஏற்றி விடும்; அது பாசத்தில் தள்ளி விடும்.

  அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது. இன்றைய நவீன வாழ்வில் மனித மனத்தை, குறிப்பாக இளையோர் மனங்களை, ஒரு பறவையாகப் பார்க்க வேண்டிய  தேவை எழுந்திருக்கிறது. உங்களுக்குள்ளே இருக்கும் சுதந்திரமான அந்தப் பறவைகளைப் பிடித்து, அவற்றின் சிறகுகளை உடைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பலர் அலைந்து திரிகின்றனர். 

  இந்தக் கொடுஞ்செயலுக்கு அவர்கள் சாதிவெறி, மதவெறி, இனவெறி, கட்சி வெறி என ஏராளமான வலைகளைத் தாராளமாக விரித்து வைத்திருக்கிறார்கள். இந்த வெறியாட்டச் சதிகளிலிலிருந்து நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. 

  நமது அன்றாட வாழ்வில் முக்கியமான  பேசு பொருள்கள் அரசியல், சினிமா, காலநிலை போன்றவைதான். அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் நமக்கு ஒருவித காதல்}மோதல் உறவுதான் இருக்கிறது. பல 
  அரசியல்வாதிகள் கொள்கையற்றவர்கள், உண்மையற்றவர்கள், ஊழல் பேர்வழிகள் என்றெல்லாம் கரித்துக் கொட்டுகிறோம். 

  ஆனால் அதே நேரம், அரசியல்வாதிகளைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்கிறோம்; பேசுகிறோம். அவர்கள் இல்லாமல் ஒரு சமூகத்தைக் கட்டிக்காக்கவும், வழிநடத்தவும் முடியாது என்பதுதான் உண்மை. சரியான அரசியல் தலைமை இல்லாமல், சோமாலியா, ஈராக், லிபியா, சிரியா, லெபனான் என ஏராளமான நாடுகள் சிதிலமடைவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

  கிரேக்கக் கதை ஒன்று சொல்வார்கள். ஓர் ஊரிலிருந்த பெரிய குளம் ஒன்றில் கொஞ்சம் தவளைகள் கூட்டமாக வாழ்ந்ததாம். அந்தத் தவளைகளுக்கு தங்களை ஆளத்தெரியாத நிலையில், கிரேக்கக் கடவுளான அப்பல்லோவிடம் சென்று, எங்களுக்கு ஒரு தலைவரை அனுப்பித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். 

  தவளைகளின் அறியாமையைக் கண்டு அதிருப்தி அடைந்த அப்பல்லோ, ஓர் உயரமான, பெரிய மரத்தை வெட்டி மலையிலிருந்து உருட்டிவிட்டார். பெரும் ஆர்ப்பரிப்போடு, ஆரவாரத்தோடு, அதிரடியாக வந்திறங்கினார் தவளைகளின் புதிய தலைவர். பிரமாண்டமான தங்களின் தலைவரின் சண்டமாருத வருகையால் தவளைகள் பூரித்துப் போனார்கள். நாட்கள் செல்லச் செல்ல தவளைகளுக்கு ஒருவித விரக்தி ஏற்படத் துவங்கியது. யார் என்ன சொன்னாலும், செய்தாலும், புதிய ஆட்சியாளர் கண்டுகொள்வதே இல்லை. வம்பு வழக்குகள் வந்தாலும், அவர் அலட்டிக்கொள்வதில்லை. வெட்டிப் போட்ட மரம் மாதிரி வீழ்ந்து  கிடக்கிறார் என்று வேதனைப்பட்டார்கள்.

  பொறுமையிழந்த தவளைகள் மீண்டும் அப்பல்லோவைச் சென்று சந்தித்தார்கள். "பிரபு, நீங்கள் அனுப்பித் தந்த ராஜா வெட்டிப் போட்ட மரம் மாதிரி விழுந்து  கிடக்கிறார். எந்த விசயத்திலும், எந்தவிதமான ஆர்வமும் காட்டுவதில்லை. இவரால் யாருக்கும் எந்தவிதப் பயனும் இல்லை. எனவே எங்களுக்கு வேறொரு தலைவரை அனுப்பியருளுங்கள்'' என்று முறையிட்டனர்.

  சிரித்துக் கொண்ட அப்பல்லோ, இம்முறை ஒரு நாரையை அனுப்பிவிட்டார். நீண்ட கால்களும், நீளமான  கழுத்தும், குறுகுறு  பார்வையும், கூரிய அலகும், உயரமும், உற்சாகமுமாய் காட்சியளித்த  புதிய தலைவரை தவளைகளுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. தலைவரின் ஆட்சிப் பரிபாலனம் ஆரம்பமாயிற்று. 

  ஒரு தகராறு என்று இரண்டு தவளைகள் அதிபரை அணுகினால், அவர் முதலில் வாதியை விழுங்கினார்; அடுத்ததாகப் பிரதிவாதியை விழுங்கினார். தகராறு முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டது. இப்படியாக தலைவர் விழுங்கி, விழுங்கி ஏப்பம் விட, குளத்தில் வாழ்ந்த தவளைகள் எல்லோரும் கூண்டோடு  கைலாசம் சென்றனர். 

  அரசியல் வாழ்வில், வழிநடத்துபவர்கள் இல்லாமல் வழி நடக்க முடியாது. முன்பெல்லாம் நம்மை வழிநடத்தியவர்கள் தொண்டு, தியாகம், துன்பம், துயரம் என்று வாழ்ந்தார்கள். நல்லொழுக்கம், உயரிய  சிந்தனை, மக்கள் சேவை, சமூக சீர்திருத்தம், போராட்ட அரசியல் என்றே இயங்கினார்கள். அவர்களின் சிந்தையில், செயலில், நாடும், நாட்டு மக்களுமே முக்கியத்துவம் பெற்றனர். தாங்கள் காண விரும்பும் மாற்றங்களைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தனர். நல்ல தேர்ந்த திறமையான ஆசிரியர்கள் போல, அரசியல் விழுமியங்களை, கருத்துகளை, நாட்டு நடப்புக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களோடு கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டு, பொறுமையாக, நிதானமாக மக்கள் ஆதரவை தங்கள் பக்கம் ஈர்த்தனர். 

  ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிக் கிடக்கிறது. தானும் ஒரு வழிகாட்டி என்று தன்னை எளிதாக, விரைவாக, பலமாக முன்னிறுத்த முனையும் பலர் சாதிவெறி, மதவெறி, இனவெறி போன்ற குறுமதி ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக் கூர்தீட்டுகிறார்கள். பணபலம், படைபலம், படாடோபம், பரபரப்பு என்றியங்குகின்றார். அவர்களின் கணக்குகளில், காய் நகர்த்தல்களில் தானும், தனக்கான பலாபலங்களும் மட்டுமே முதன்மையும், முக்கியத்துவமும் பெறுகின்றன. செவிமடுக்கும் தன்மையோ, சொல்லிக் கொடுக்கும் திறனோ, சமத்துவம், சகவாழ்வு, சனநாயகம் போன்ற விழுமியங்களோ ஏதுமற்ற இவர்கள் கருத்துத் திணிப்பில் மட்டுமே குறிப்பாய் இருக்கிறார்கள். எனவேதான்  இளையோர் அவரவர் மனப்பறவைகளை மாண்புடன் பாதுகாத்துக் கொள்வது மிக முக்கியமானதாகிறது. "இளங்கன்று பயமறியாது' என்பது போல, இளங்குஞ்சு வெறுப்பறியாது. உங்கள் நெஞ்சங்களுக்குள் குறுக்குச்சுவர்கள் கட்ட, உங்கள் பார்வையைச் சுருக்கி சுரங்கப் பார்வையாய் மாற்ற, உங்களின் சிறகுகளை உடைத்து உங்களை தங்கள் சுட்டுவிரலில் கட்டிவைத்துக் கொள்ள முனையும் வழிகாட்டிகளை விட்டொழியுங்கள். 

  உங்கள் மனப்பறவைகள் சிறகுகள் விரித்து உயரப் பறப்பதும், உரக்கக் கூவுவதும்தான் உண்மையான மனித வாழ்வு என்பதை எப்போதும் நினைவிற் கொள்ளுங்கள். அரசியல் இல்லாத மனித நடவடிக்கைகள் எதுவுமே இல்லை என்பதாலும், அரசியலை நாம் தவிர்க்கவே முடியாது என்பதாலும், அரசியலை ஆயிரங்காலத்துப் பயிர் என்கிறோம். அரசியல்தான் மனித வாழ்வின் அடிப்படை. 

  ஒரு முறை, ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஓர் அரசியல்வாதி ஆகியோர் உலகின் பழம்பெரும் தொழில் எதுவென்று வாதித்துக் கொண்டிருந்தார்கள். ""கடவுள் மனிதர்களைத்தான் முதலில் படைத்தார், அதில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை என எல்லா மருத்துவ அம்சங்களும் நிறைந்திருந்தன. எனவே எங்கள் தொழில்தான் மூத்தத் தொழில்'' என்றார் மருத்துவர். உடனே பொறியாளர், ""மனிதர்களைப் படைப்பதற்கு முன்னால், கடவுள் உலகத்தைப் படைத்தார். அது ஒரு பொறியாளர் செய்யும் வேலை என்பதால், எங்கள் தொழில்தான் உலகின் மூத்த தொழில்'' என்று வாதிட்டார்.
  இவற்றையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அரசியல்வாதி, ""கடவுள் உலகத்தைப் படைப்பதற்கு முன்னால், இங்கே என்ன இருந்தது?'' என்று கேட்டார். மருத்துவரும், பொறியாளரும் ஒருமித்த  குரலில், "குழப்பமும், அமைதியின்மையும் இருந்தது'' என்றார்கள்.

  "அதை யார் உருவாக்கியது என்று நினைக்கிறீர்கள்? நாங்கள்தான். எனவே அரசியல்தான் உலகின் மூத்தத் தொழில்'' என்றார் அவர். அரசியல் என்பது மனிதகுலத்தின் இரண்டாவது பெரிய தொழில் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், முதல் பெரிய தொழிலோடு அது மிகவும் ஒத்துப் போகிறது என்று குத்திக் காட்டினார். கட்டிக் கொள்ளவும் முடியாமல், விட்டுத் தள்ளவும் முடியாமல் நாம் தவிக்கும் விடயம்தான் அரசியல். நேர்மையான, உண்மையான, உறுதியான, ஒழுக்கமான அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால், நாம்தான் அவர்களை உருவாக்க வேண்டும்.
  நல்ல தலைவர்கள் பிறந்து வருவதில்லை; மாறாக சமூகத்தால் உருவாக்கப்படுகிறார்கள். அப்படியானால் "அரசியல்வாதிகள் சரியில்லை' என்று இருளையே  பழித்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, ஏற்றமிகு மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும், இன்னும் சொல்லப் போனால், ஏற்றதொரு மெழுகுவர்த்தியாக நீங்களே மாறுவதும் மிக முக்கியம்.

  கவிஞர் வாலி சொன்னது போல:
  ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
  பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு நல்
  அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு
  இன்றோடு போகட்டும் திருந்திவிடு உந்தன்
  இதயத்தை நேர்வழி திருத்தி விடு!
   (தொடரும்)
  கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
  தொடர்புக்கு: spuk2020@hotmail.com
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp