புதிய வேலைவாய்ப்புகள்!

கரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி வருவதால், உடல்நலன் சார்ந்த அக்கறையும், அதற்கான முன்முயற்சிகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.
புதிய வேலைவாய்ப்புகள்!

கரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி வருவதால், உடல்நலன் சார்ந்த அக்கறையும், அதற்கான முன்முயற்சிகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன.   கரோனா உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டவிடாமல் செய்வதற்கு உடல் நோய் எதிர்ப்புசக்தியை ஊக்கப்படுத்துவதுதான் ஒரே வழி என்பது உலகின் முன்னணி மருத்துவ அறிஞர்களின் கருத்து.   உலக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்திக் கொள்வதற்கு உடற்பயிற்சியை நாடி செல்வது அதிகரிக்கத்  தொடங்கியுள்ளது.  

உடற்பயிற்சியின் முழுப் பயனை அடைவதற்கு முறையான பயிற்சி அவசியம். முறையான பயிற்சியை வழங்குவதற்கு முறைப்படி பயிற்சி பெற்றவர்களால் தானே முடியும்? 
ஒருபக்கம் உடற்பயிற்சியைக் கற்க ஆர்வம் கொண்டுள்ள கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. மறுபக்கம், உடற்பயிற்சியைக் கற்றுத் தருவதற்கான பயிற்சியைப் பெற ஆர்வம் மிக்க இளைஞர் கூட்டம் பயிற்றுநர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதனால் "உடற்பயிற்சி' பெரும் தொழிலாக மாறிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் உடற்பயிற்சி அளிக்கும் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே முளைக்க தொடங்கிவிட்டன. இதனால், உடற்பயிற்சி தொழில்சார்ந்த வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. 

உடற்பயிற்சியைக் கற்றுத் தருவதற்கான தொழிலில் ஈடுபடுவதற்கு என்னென்ன கல்வித்தகுதிகள் தேவை? எந்தவகையான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன? இனி பார்ப்போம்:

கல்வித்தகுதி:
உடற்பயிற்சித்தொழிலில் ஈடுபட விரும்பும் நபர் முதலில் மனித உடற்கூறுகளின் அடிப்படை, உடற்திறன் பயிற்சி, தோற்றப்பாங்கு, இருதய அமைப்பு பயிற்சி, உடல் வகைகள், சரியான கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவை, புரிதலை கொண்டிருப்பது அவசியமாகும். உடற்பயிற்சியில் ஈடுபடுவோரின் வயது, வாழ்க்கைமுறை, உடல்சார்ந்த பிரச்னைகளின் அடிப்படையில் உடற்பயிற்சிமுறையை வகுத்துக்கொள்வதற்கு அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. இது தொடர்பான பயிற்சியை அளிக்க பல்வேறு கல்விமையங்கள், சான்றிதழ் பயிற்சிகளை அளித்து
வருகின்றன. இப்பயிற்சிகளில் சேர குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு அல்லது இளநிலை பட்டப்படிப்பு படித்திருப்பது அவசியம். பயிற்றுநர் பயிற்சிக்குப் பிறகு ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம்.

சிறப்புத் திறன்கள்:
உடற்பயிற்சி தொழிலில் ஈடுபடுவோர் கடின உழைப்பாளியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு தனது வாடிக்கையாளரை ஊக்குவிக்கும் திறனுள்ளவராகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளரோடு உரையாடலோடு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டுமென்பதால், தோழமையாகப் பழகும் இயல்புள்ளவராக இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் உடல்கோளாறுகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு உடற்பயிற்சிகளை வழங்கும் உணர்திறன் கொண்டவராக இருக்க வேண்டும். சரியான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டும். மேலும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் வாடிக்கையாளரை அணுகும்போது பொறுமை, சகிப்புத்தன்மை அவசியமாகும். எதையும் இன்முகத்தோடு கற்றுத்தரும் பாங்குடையவராக இருக்க வேண்டும்.

உடற்பயிற்சி பயிற்றுநர்:
உடல் எடையைக் குறைப்பது, தசை மற்றும் உடல்வலிமைக்கு பயிற்சி அளிப்பது, உடல்திறன்சார்ந்த இலக்குகளை அடைய தேவையான பயிற்சிகளில் ஈடுபட வாடிக்கையாளரை ஊக்குவிப்பது போன்ற பணிகளில் உடற்பயிற்சி பயிற்றுநர் ஈடுபட வேண்டியதிருக்கும். ஜிம் பயிற்றுநராகவும், குழுவினர் அல்லது தனிநபருக்கு பயிற்றுநராகவும், வாடிக்கையாளரின் உடல் திறனைக் கண்காணித்து, சீரான உணவை பரிந்துரைத்து, பயிற்சி அளிப்பவராகவும் வேலை செய்ய இயலும். இணையமயமாக்கப்பட்ட உலகில், இணையவழியாகவே உடற்பயிற்சியை வழங்கும் பயிற்றுநராகவும் பணியாற்றலாம். இதற்கு இணையதொழில்நுட்பத்தை அறிந்திருப்பது அவசியமாகும்.

நடனம் மற்றும் தற்காப்புக்கலை:
உடலை வனப்பாகவும், அழகான வடிவத்திலும் வைத்திருப்பதற்கு  கிக் பாக்ஸிங் போல நடனமும், தற்காப்புக்கலைகளும் பரவலாக பயன்பாட்டில் உள்ளன. அக்வா ஏரோபிக்ஸ், கிக்பாக்ஸிங், மியாய் தாய் போன்ற உடற்பயிற்சி வகைகளையும் கற்றறியலாம். சல்சா, ஜும்பா போன்ற நடனவகைகள், பாலிவுட் பயிற்சி முறைகளையும் கற்றுத்தேரலாம். நடனம் மற்றும் தற்காப்புக்கலையுடன் கூடிய உடற்பயிற்சியை அளிப்பதற்கு அதுதொடர்பான பயிற்சியை தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. 

யோகா பயிற்றுநர்:
தற்போதைய சூழலில் யோகா கலையைக் கற்றவர்கள் பயிற்றுநர்களாக வேலை செய்வதற்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பயிற்சி மையத்திற்குச் சென்று யோகா பயிற்சியை பெறுவதற்கு பலரும் முன்வருவதால், யோகாசனப் பயிற்சிகளை அளிக்கலாம். ஒரு சிலர் பயிற்சி மையத்திற்கு வந்து யோகாசனத்தைக் கற்பார்கள். வேறுசிலர், வீடுகளுக்கு பயிற்றுநரை வரவழைத்து யோகா பயிற்சியை மேற்கொள்வார்கள். பயிற்றுநராக தகுதிப்படுத்திக்கொள்வதற்காக ஏராளமான யோகா பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த பயிற்சி 3 மாதங்கள் முதல் ஓராண்டுவரை 
இருக்கின்றன.

உணவு நிபுணர்:
உணவு மற்றும் உடல்நலனைப் பேணுவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு உணவு நிபுணராக பணி சிறந்த தொழிலாக அமையும். தனிநபருக்குத் தேவையான உடல்நலன்சார்ந்த உணவு, வகை, அளவு ஆகியவை குறித்து பரிந்துரைகளை வழங்கும் ஆலோசகராகப் பணியாற்றலாம். இதுதவிர, மருத்துவமனைகள், வளர்சிதை மாற்ற நோய்சார் மையங்கள், ஜிம்கள், உடல்திறன் மையங்கள், உணவுத்
தொழிலகங்கள், ஊட்டச்சத்து மையங்கள், உடல் எடை குறைப்பு மையங்கள், விளையாட்டு நிறுவனங்கள், உடல்பேணல் மையங்கள் உள்ளிட்ட ஏராளமான மையங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். 

அறிவியலை ஒரு பாடமாக எடுத்து பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒருவர், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து அல்லது உணவியல் சார்ந்த இளங்கலைப் பட்டப் படிப்பை படிக்கலாம். அதன் பிறகு ஊட்டச்சத்து முதுநிலை பட்டப் படிப்பையும் படிப்பது அவசியமாகும். முதுநிலை பட்டப் படிப்புக்குப் பிறகு முனைவர் பட்டமும் படிக்கலாம். உணவு மற்றும் ஊட்டச்சத்தில் ஆராய்ச்சியும் செய்யலாம். 

விளையாட்டு  ஊட்டச்சத்து:
விளையாட்டுவீரர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற எந்தவகையான உணவை தினமும் எடுத்துக்கொள்வது என்பதை பரிந்துரைத்து, கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவது தான் விளையாட்டு ஊட்டச்சத்தியல் நிபுணரின் வேலையாகும். விளையாட்டு வீரரின் உணவு,  ஊட்டச்சத்து நிறைந்ததா? உடலில் போதுமான அளவில் தண்ணீர் இருக்கிறதா? 
என்பதைக் கண்காணிப்பதோடு,  விளையாட்டு ஆற்றலை மேம்படுத்தும் வளர்சிதை மாற்றத் திறனை ஊக்குவிப்பது போன்றவற்றையும் கண்காணிக்க வேண்டும். விளையாட்டு பயிற்றுநர்களுடன் இணைந்து, விளையாட்டுவீரர்களுக்கு காயங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.  

வேலைவாய்ப்புகள்:
ஜிம், உடல்திறன் பயிற்சி மையங்கள், உடல்நலம் பேணல் மையங்கள், கேளிக்கைவிடுதிகள், விளையாட்டுஅணிகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றலாம். முறையாக கற்ற பயிற்றுநருடன் உதவியாளராகப் பணியாற்றி, படிப்படியாக முறையான பயிற்சிகளைப் பெற்று சொந்தமாக உடற்பயிற்சிக்
கூடங்களையும் அமைக்கலாம். நிலையான கற்றலும், நிலையான திறன்மேம்பாடும் இருந்துவிட்டால், உடற்பயிற்சி தொழிலில் சாதிக்க தடையேதுமில்லை.
-ந.முத்துமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com