வீட்டிலிருந்து வேலை... மனஅழுத்தத்துக்கு மாற்று!

"நான் வீட்டில் இருந்துதான் வேலை செய்கிறேன்'' என்று சொல்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டனர்.  உலகம் முழுவதும் கரோனாவின் விளைவால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது.  
வீட்டிலிருந்து வேலை... மனஅழுத்தத்துக்கு மாற்று!

"நான் வீட்டில் இருந்துதான் வேலை செய்கிறேன்'' என்று சொல்பவர்கள் இப்போது அதிகமாகிவிட்டனர்.  உலகம் முழுவதும் கரோனாவின் விளைவால் இந்நிலை ஏற்பட்டுவிட்டது.  

குறிப்பாக, நகரங்களில் குடும்பத்தில் ஒருவரேனும் வீட்டில் இருந்துதான் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே மாதத்தில் அலுவலகம் வழங்கிய மடிக்கணினிகள் உள்ளிட்ட 
உபகரணங்களுடன் வீடுகளில் ஓர் அறைக்குள் நுழைந்து அலுவலக பணிகளைத் தொடங்கியவர்கள், இன்று வரை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

 இன்னும் இதற்கு முடிவு தெரிந்த பாடில்லை. இந்த நிலை வரும் என்று யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. முன்பெல்லாம் அலுவலகத்தை விட்டு எப்போது வீட்டுக்குச் செல்வோம் என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போது அலுவலகம் செல்வோம் என்று யோசிப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.  

வீட்டுக்குள் முடங்கி மின்னணு சாதனங்களுடன் பொழுதைக் கழித்து நேரம் காலம் பாராது இணையம் வழியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, நிறுவன அதிகாரிகள் கூறும் நிபந்தனைகளைச் சரியாக 
உள்வாங்கி,  அதை இணையவழியில் குழு உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து, ஆலோசித்து ஒரு முடிவினை எட்டுவது என்பது மிகவும்
சிரமமான நிலையாக இன்று மாறிவிட்டது. 

அலுவலகத்தில் பணியாற்றும்போது குறிப்பிட்ட நேரத்தில் பணி செய்ய முடிந்ததுடன், சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு உடனடியாக அந்த கேபினுக்குள் உள்ளே அமர்ந்து குழு உறுப்பினர்களிடம் பேசி 
உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடிந்தது. ஆனால், இன்று அது போல செயல்பட முடிவதில்லை. குழு உறுப்பினர்களிடம் இணையவெளியில் தொடர்பு கொள்வதில் உள்ள பிரச்னைகள் மட்டுமின்றி,  அதன்பின் நிறுவன அதிகாரிகள் எழுப்பும் கேள்விகளுக்கான அல்லது சந்தேகங்களுக்கான விடைகளை குழு உறுப்பினர்களிடமிருந்து பெறுவதற்கு தேவையற்ற கால தாமதமும் ஏற்பட்டுவிடுகிறது. 

"நிறுவனத்தின் மேலாளர்கள்  எதிர்பார்க்கும் அனைத்தையும் நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அலுவலகத்திலிருந்து செய்வதற்கு குறிப்பிட்ட கால நேரம் இருந்தது; இன்றோ கால நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது'' என்பதே பெரும்பாலான வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின்  கருத்தாக  உள்ளது. 

ஆரம்ப கட்டத்தில் அதீத மகிழ்ச்சியுடன் வீட்டில் இருந்து வேலை செய்து வந்தவர்களில் பலர், இன்று மிக அதிக மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். 
அதுவும் கூட "ஓவர் டோஸ்' என்று சொல்வார்களே... அத்தகைய மன அழுத்தத்திற்கு பெரும்பாலானவர்கள் ஆட்பட்டு விட்டார்கள் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
"வீட்டில் இருந்து வேலை' ... "வீட்டில் இருந்து கல்வி'  என்பன போன்ற நிலைகளால் தினசரி நிகழ்வுகள் கூட மாறிவிட்டன. சமூக நிகழ்வுகள் கூட மாற்றம் பெற்று ஏற்கெனவே இருந்த தங்கள் இயல்பு நிலையைத் தொலைத்து நிற்கின்றன. 

இத்தகைய மாற்றம் பெற்று வரும் பணியிடச் சூழல்களால், சமூகத்தில் ஒருவித சமநிலையற்ற போக்கு கூட ஏற்பட்டு வருகிறது. ஒரே வீட்டில் வேலை செய்யும் நபர்களாலும், படிக்கும் நபர்களாலும் வாழ்க்கையை சீராகக் கொண்டு செல்ல முடியாத நிலை  ஏற்பட்டு வருவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். 
 பொதுவாக அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் பொழுது வாரம் முழுவதும் உழைத்த உடலுக்கும், மூளைக்கும் ஓய்வு கொடுக்க வார இறுதி நாட்கள் எப்போது வரும் என்று காத்திருப்பது உண்டு. அந்த வார இறுதி நாட்களில், மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை  பணியாளர்கள் செய்வதுண்டு. 

ஆனால், இப்போதோ ஓய்வுக்காக வார இறுதி நாட்கள் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. நிறுவனத்தை நடத்தும் மேலாளர்கள். தமது நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து தானே வேலை செய்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்து கொள்ளலாமே? என்று நினைக்கின்றனர். இதனால் வார இறுதி நாளில் ஓய்வு என்பதே இல்லாமல் போய் விட்டது என்கின்றனர்  சில நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள். இதனால் மன அழுத்தம் இரட்டிப்பாகி வருவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு உரிய பணிபாதுகாப்பும் உரிய சம்பளம் கொடுக்கப்படும் வரையில் அவர்களுக்கு எந்தவிதமான  வேலைசார்ந்த மனப்பிரச்னைகளும் ஏற்படப் போவதில்லை. இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் நிலைமை மாறிவிடுகிறது.  சில நிறுவனங்களுக்காக  வீட்டிலிருந்து  வேலை செய்பவர்கள், தாம் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்கால நிலை எப்படி இருக்கும்?  குழந்தை
களின் கல்வி எப்படி மாறப்போகிறது? தொடர்ந்து வேலைவாய்ப்புகள் நீடிக்குமா? என்பன போன்ற சிந்தனைகள் எழுந்து,   மிகுந்த கவலைக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகிவிடுகிறார்கள்.    

வீட்டிலிருந்தே பணி செய்பவர்கள்,  தங்களின் எதிர்காலம் குறித்து அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர். அந்த அச்சத்தை உடன் பணியாற்றுவோருடன் பகிர்ந்து கொள்ளுதல்,  அலுவலகம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண அவர்களுடன் கலந்தாலோசித்தல் ஆகியவை இப்போது இயலாததாகிவிட்டன.  வீட்டிலுள்ள பிறருடனும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது.  மேலும்  நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கும் பொழுது அவர்களின் மன அழுத்தம் மேலும் அதிகரிக்கிறது.   

இத்தகைய மன அழுத்தமும் கவலையும் மிகப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும். எனவே அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு தியானம், உடற்பயிற்சி, வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை செலவிடுவது,
அல்லது வாரத்தில் ஒரு நாள் ஓய்விற்காக நேரம் ஒதுக்கி நண்பர்களுடன் உரையாடுவது என்பன போன்ற செயல்களில் இறங்கினால் வீட்டிலிருந்து பணி செய்பவர்களின் மன அழுத்தம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

எதுவந்தாலும் நாம்தான் எதிர்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிட்டால்,   வேலைசார்ந்த பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும். எந்தப் பிரச்னை வந்தாலும் அவற்றைச் சமாளிப்பதற்கேற்றவிதத்தில் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் இப்போதே யோசித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்கு உதவும்.  எதிர்கால வாழ்க்கைக்கும் கூட. 
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com