கடல்போல விரியும் வேலைவாய்ப்புகள்!

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் உலக அளவில் பொருளாதாரத்தின் போக்கு தலைகீழாக மாற்றம் கண்டிருக்கிறது.  வேகமான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.
கடல்போல விரியும் வேலைவாய்ப்புகள்!

உலகமயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் உலக அளவில் பொருளாதாரத்தின் போக்கு தலைகீழாக மாற்றம் கண்டிருக்கிறது.  வேகமான வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. உலக அளவிலான வணிக நடவடிக்கைகளில் கப்பல் போக்குவரத்தின் பங்களிப்பு அதன் அளவு மற்றும் மதிப்பில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் 95 சத வணிக நடவடிக்கைகள் வணிகக் கப்பலை சார்ந்தே நடந்து வருகின்றன. இது மேலும் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இந்திய அரசு கொண்டு வந்துள்ள சாகர்மாலாவுக்கான தேசிய முன்னோக்குத் திட்டம் (நேஷனல் பெர்ஸ்பெக்டிவ் பிளான் ஃபார் சாகர்மாலா) வணிகக் கப்பலுக்கான தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கவிருக்கிறது. வெளிநாட்டுக்கு மட்டுமல்லாது உள்நாட்டு வணிக கப்பல் போக்கு வரத்துக்கும் முக்கியத்துவம் அதிகரித்துவருவதால், இதற்கான தொழில் வாய்ப்புகள் பெருகுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

வணிகக் கப்பல்:

நவீன வணிகக் கப்பல்கள், விமானங்களை விட பிரமாண்டமான அளவில் இருக்கின்றன. கடல் அலைகள், சீற்றங்களைத் தாங்கிக்கொண்டு நெடுந்தூரம் பயணிக்கும் கப்பல்கள், செயற்கையான தீவுகளைப் போல காட்சி அளிக்கின்றன.  அந்த அளவுக்கு பெரிய கப்பல்கள்,  கண்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் திறன்படைத்தவையாக இருக்கின்றன.

வேலைவாய்ப்புகள்:

வணிக கப்பல்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை மூன்றுவகைகளாகப் பிரிக்கலாம்: கப்பல் தளம் துறை, பொறியியல் துறை, விருந்தோம்பல் துறை. கப்பல்தளத்துறையில் பணியாற்றுவோர் கப்பலின் முழு செயல்பாட்டுக்கும் பொறுப்பாளர்களாக இருப்பார்கள். கப்பலின் மாலுமி, அதிகாரிகள், கப்பல் ஓட்டம், தகவல்தொடர்பு உள்ளிட்ட கப்பலின் முழுமையான செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.

கப்பல் தளம் அல்லது பொறியியல் துறையில் பணியாற்ற விரும்புவோர், 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதப்பாடங்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய கடல்வழி பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு, கடல் 
அறிவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இத்துடன் கடல்சார் முன்பயிற்சித் திட்டத்திலும் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.

கப்பல் பணியில் ஈடுபட்டிருக்கும்பொறியாளர்கள், கப்பலின் உந்துவிசை அமைப்பு மற்றும் துணை இயந்திரங்களின் இயக்கம், பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் போன்ற பணிகளைக் கவனிக்கவேண்டும்.

எவ்வித சிக்கலும் இல்லாமல் கப்பல் இயக்கப்படுவதற்கு பல்வகை பொறியாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள். இவர்களில் இயந்திரவியல், மின்சாரம், மின்னணு, அமைப்பியல் பொறியாளர்கள் அடக்கம். கடல்சார் பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம்பெற்று கடல் பொறியாளர்கள் ஆகலாம். இந்த கல்வியைப் பெற இந்திய கடல்வழி பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இதை படிக்க இயலாதவர்கள், இயந்திரவியல், கட்டுமானவியல், மின்சாரவியல், மின்னணுவியல் பாடங்களில்பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பொது கப்பலியல் இயக்குநரகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடல்சார் முன்பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெற்ற பிறகு, வணிகக் கப்பல்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம்.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் அமைந்திருக்கும் துறைமுக நகரங்களில் விறுவிறுப்பாக நடந்துவரும் கப்பல் தொழில் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காணக் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் அமைந்துள்ள கடல்வழி கப்பல் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

உணவக மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு, வணிகக் கப்பல்கள், சரக்கு கலன்கள் (கண்டெய்னர்கள்), பயணியர் கப்பல்களில் விருந்தோம்பல் துறையில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன.   வேகமாக வளர்ச்சியை நோக்கி விரிவடைந்து வரும் வணிக கப்பல்தொழிலில் ஏராளமான வாய்ப்புகளும், பயன்களும் உள்ளன. முறையான கல்வியை பெறுவதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புகளை பெறலாம். வரிச்சலுகையுடன் கூடிய கைநிறைய சம்பளத்துடன் நெடும்பயணங்களில் ஈடுபடும்வாய்ப்பும் கிடைக்கும். 

உலகம் முழுவதும் சுற்றி பார்க்கலாம். பல்வேறு மொழி, இன, கலாசாரப் பின்னணி கொண்ட மக்களையும் சந்திக்கலாம். கப்பல்களில் பணியாற்று வோரின் வாழ்க்கை பெரும்பாலும் கடல் பயணங்களிலேயே கழியும். கடல் பயணங்களை விரும்பும் நபராக இருந்துவிட்டால், வணிகக் கப்பலில் பணியாற்றுவதற்கு நீங்கள் பொருத்தமானவராக இருப்பீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com