நிலவு பயணத்துக்கு முன்னோட்டம்!
By -எஸ்.ராஜாராம் | Published On : 02nd November 2021 06:00 AM | Last Updated : 02nd November 2021 06:00 AM | அ+அ அ- |

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு மனிதர்களை 2024-ஆம் ஆண்டு அனுப்ப திட்டமிட்டுள்ளது. "ஆர்ட்டெமிஸ்' என இந்த விண்வெளித் திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக நிலவைச் சுற்றி வருவதற்காக "ஓரியன்' என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது நாசா. "ஆர்ட்டெமிஸ்-1' எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்துக்காக ஓரியன் விண்கலம், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிலவுக்கு அனுப்பப்படவுள்ளது. இந்தச் சோதனையானது ராக்கெட் மற்றும் விண்கலத்தை முதல்முறையாக ஓர் ஒருங்கிணைந்த அமைப்பாக மதிப்பிட உதவும்.
"ஆர்ட்டெமிஸ் 2' திட்டத்தில் மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னோட்டமாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தின் பயணம் அமையும் என நாசா தெரிவித்துள்ளது.
நிகழாண்டே இந்த ஓரியன் விண்கலம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில மாதங்கள் தள்ளிப் போயுள்ளது.
இதற்காக எஸ்எல்எஸ் ராக்கெட்டில் ஓரியன் விண்கலத்தைப் பொருத்தும் பணி ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பல சோதனைகள் நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிலவுக்கு ஓரியன் விண்கலம் அனுப்பப்பட்டு நிலவைச் சுற்றி வரும்.
2024-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பவும், 2030-இல் பொதுமக்களை நிலவுக்கு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ள நாசாவுக்கு இந்த ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் முதல்கட்ட சவாலாக இருக்கும்.
நிலவில் முதல்முறையாக மனிதர்களின் கால்தடத்தை அமெரிக்கா பதியச் செய்தது. அப்பல்லோ 11 விண்கலம் மூலம் 1969-ஆம் ஆண்டு நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும் நிலவில் காலடித் தடம் பதித்தனர். நிலவில் பதிந்த தனது முதல் காலடித் தடத்தை "மனிதனுக்கு ஒரு சிறிய படி; மனித குலத்துக்கு ஒரு மாபெரும்பாய்ச்சல்' எனக் குறிப்பிட்டார் ஆர்ம்ஸ்ட்ராங்.
நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் மற்றொரு மாபெரும் பாய்ச்சலுக்கு காத்திருக்கிறது உலகம்.