குறிப்பு எடுப்பதும் ஒரு கலை!

எழுத்தாளர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலர் எப்போதும் கையில் ஒரு டைரியும் பேனாவும் வைத்திருப்பதைப் பார்த்திருக்க முடியும். முக்கிய பிரபலங்களின் உதவியாளர்கள் பலரும் கையில் ஒரு குறிப்பேட்டை
குறிப்பு எடுப்பதும் ஒரு கலை!


எழுத்தாளர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் பலர் எப்போதும் கையில் ஒரு டைரியும் பேனாவும் வைத்திருப்பதைப் பார்த்திருக்க முடியும். முக்கிய பிரபலங்களின் உதவியாளர்கள் பலரும் கையில் ஒரு குறிப்பேட்டை வைத்திருப்பார்கள். திட்டமிட்டபடி வேலைகளைச் செயல்படுத்தவும், முக்கியமானவற்றை நினைவுபடுத்திக் கொள்ளவுமே அவை பயன்படுகின்றன. 

நாள் முழுவதும் பிஸியாக இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை நினைவில் வைத்துக்கொள்ள குறிப்புகள் உதவுகின்றன.

படித்தவற்றைக் குறிப்பு எடுப்பது என்பதே ஒரு தனிக்கலைதான். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு உதவக் கூடிய ஒரு தனித்திறனாக இது இருக்கலாம். படித்த புத்தகத்திலிருந்து எடுப்பவை மட்டுமல்ல, குறிப்புகள். மாறாக, முக்கிய தகவல்கள், நீங்கள் செய்யவேண்டிய வேலைகள், எதிர்காலத் திட்டங்களுக்கான யோசனைகள், மற்றவர்களின் கருத்துகள் இவற்றை எழுதி வைப்பதும் குறிப்புகள்தான். 

மனித மனம் விசித்திரமானது. யோசிக்கும் நேரத்தில் வராத சில ஐடியாக்கள், ஏதோ ஒரு நிகழ்வைப் பார்க்கும் போது, "இதை இப்படிச் செய்யலாமே' என்று உங்களுக்குத் தோன்றலாம். அந்த நேரத்தில் உடனடியாக அதை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. 

குறிப்பு எடுக்கும் திறன் ஏன் முக்கியமானது, குறிப்புகளை எடுப்பது எப்படி, எப்போது எடுக்க வேண்டும் என்பது பற்றிப் பார்க்கலாம். 

குறிப்பு எடுப்பது ஏன் முக்கியம்?

குறிப்பு எடுத்துக் கொள்வதன் மூலமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உங்கள் குடும்பம் சார்ந்தும் சரி, பணி சார்ந்தும் சரி இந்தக் குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யும் இந்தச் சூழலில் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து  முடிக்க உதவும். 

உதாரணமாக, உங்கள் பணி சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் குறித்த எண்ணங்கள் அதைப் பற்றி மற்றவர்களின் யோசனைகள், கருத்துகள் குறித்து எழுதி வைக்கலாம். 

குறிப்பு எடுப்பது உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்க  உதவும். திட்டமிட்டபடி வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவும். 

ஓரிரு முறை குறிப்புகளை பார்த்துவிட்டால் அது நிரந்தரமாக உங்கள் மூளையில் பதிவாகிவிடும். இதனால் மூளைக்கும் இது சிறந்த பயிற்சி. 

ஒரு முக்கிய நபரையோ அல்லது முக்கிய வேலையையோ எதிர்கொள்வதற்கு முன், நீங்கள் நம்பிக்கையுடன் தயாராகி சிறப்பாக வெளிப்படுத்த குறிப்புகள் உதவும். 

ஒரே நேரத்தில் பல விஷயங்களை யோசிப்பது என்பது இயலாத காரியம். அப்படிச் செய்தாலும் அது முழுமையாக இருக்காது. எனவே, குறிப்புகள் இருந்தால் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கூட சரியாகச் செய்ய முடியும். 

அலுவலகத்தில் கலந்துரையாடலில் அனைவரின் கருத்துகளையும் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது ஏதோ ஒரு நேரத்தில் உதவும். 

எப்போது குறிப்பு எடுக்க வேண்டும்? 

பணிக்கான நேர்காணலுக்கு முன்னதாக உங்கள் பணி மற்றும் துறை சார்ந்து பொதுவான கேள்விகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக தொலைபேசி, ஆன்லைன் வழி நேர்காணலுக்கு பயன்படும். 

அதுபோல நேர்காணலின்போதும் உங்களை நேர்காணல் செய்யும் நபர் கேட்கும் கேள்விகளையும், உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் அவர் பேசும்போது சுருக்கமாக குறித்து வைத்துக்கொண்டு பணியில் சேர்ந்தவுடன் அதனைச் செயல்படுத்தலாம். ஏன், இந்த நேர்காணலில் நீங்கள் தோல்வியுற்றால் கூட அடுத்த நேர்காணலுக்கு இந்த அனுபவம் பயன்படும். 

அலுவலகக் கூட்டங்களில் கலந்துரையாடலின்போது உங்கள் வேலையை முடிக்க வேண்டிய நாள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், முக்கிய தேதிகள், அடுத்தடுத்த வேலைகள் என எழுதி வைப்பது நல்லது. 

அலுவலகப் பணிகளில் ஏதேனும் சிக்கல் வரும்போது திடீரென உங்கள் மனதில் தோன்றும் யோசனைகளை உடனடியாகச் செல்போனிலாவது டைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

உரையாடல்களின்போது உங்களுடைய வாடிக்கையாளர் அல்லது சக ஊழியருடன் பேசியதை அவர்கள் கூறும் முக்கிய விஷயங்களை, நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை குறித்துக் கொள்ளுங்கள். 

குறிப்பு எடுக்க சிறந்த வழிகள் 

ஒவ்வொருவரின் திறன் மற்றும் செளகரியத்தைப் பொருத்து குறிப்பு எடுப்பது வேறுபடலாம். 

முன்னதாக நோட்டுகளில் எழுதி குறிப்பு எடுக்கும் பழக்கமே அதிகம் இருந்தது. ஆனால் இப்போது கணினி, மொபைல் என நவீனமயமாகிவிட்டது. 

கணினியில் நோட்பேடில் ஆவணமாகவோ அல்லது  ஸ்டிக்கி நோட்ஸிலோ அல்லது மென்பொருள் செயலியிலோ வைத்துக் கொள்ளலாம். ஆனால், இவை அழிந்து விடக் கூடிய  வாய்ப்புகள் உள்ளதால், சிறிய கையடக்க டைரி ஒன்றை எப்போதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள். 

குறிப்பு எடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை 

குறிப்பு எடுக்கும்போது தலைப்பு மற்றும் தேதி அவசியம். எந்த சூழ்நிலையில் குறிப்பு எடுக்கிறீர்களோ அந்த சூழ்நிலையையோ அல்லது நோக்கத்தையோ தலைப்பாக எழுதிக் கொள்ளுங்கள். அத்துடன் தேதி மற்றும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்ளலாம். 

முக்கிய தகவல்களுக்கு புல்லட் பாயிண்ட்ஸ், எண்கள் அல்லது வித்தியாசமான குறிகளைப் பயன்படுத்துங்கள். திருப்பிப்  பார்க்கும்போது அவை குறிப்பிட்ட கவனம் பெறும்.  முழு வாக்கியங்களையும் எழுதுவதற்குப் பதிலாக, சுருக்கமாக உங்களுக்குத் தேவையான தகவல்களை மட்டும் எழுதுங்கள். அதிலும் முக்கியமானவற்றை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ளுங்கள். 
அலுவலக உரையாடல் குறிப்புகளை வேறு யாரேனும் உங்களுக்கு அனுப்பினாலும் அதில் உங்களுக்குத் தேவையானவற்றை சுருக்கி எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 

காலை எழுந்தவுடன் இன்று செய்ய வேண்டிய வேலைகள் குறித்த குறிப்புகளை ஒரு பார்வையிட்டு செல்போனில் வேண்டுமானால் ரீ மைண்டர் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் திட்டமிட்ட வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com