கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!  - 21: நல் வழக்கமே ஒழுக்கம்!

"மக்களே போல்வர் கயவர்' என்றார் வள்ளுவர் ஒரு பொருமலுடன்! கெட்டவர் யார்?
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே!  - 21: நல் வழக்கமே ஒழுக்கம்!

"மக்களே போல்வர் கயவர்' என்றார் வள்ளுவர் ஒரு பொருமலுடன்! கெட்டவர் யார்? நல்லவர் யார்? என்று எவ்வாறு இனம் கொள்வது? எல்லாரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கிறார்களே? என்று விரக்தியுடன் முடிக்கிறார். 

குணாதிசயங்களால் ஒவ்வொரு மனிதரும் வேறுபடுகின்றனர். குணங்கள் அமைவது, வளர்ப்பு முறையிலும் சுற்றுப்புறச் சூழலையும் பொறுத்தது. வெளியுலகம், நல்லது கெட்டது என எல்லாம் நிறைந்தது. தீயவை  தீ போல் விரைவாகப் பரவி விடுகின்றன. 

நல்லனவற்றின் தாக்கம் ஏற்படுவதற்கு நேரமாகிறது.  

"கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நான்' 

என்று கலியுகத்தில் மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் காலமிது! 

அன்றாடப் பழக்க, வழக்கங்களை சிறிது ஆராய்ந்து மாற்றம் செய்தால் நல்லொழுக்கங்கள் நிலைத்து நாம் எதிர்பார்க்கும் நன்மை விளையும். நல்ல வழக்கங்களைப் பழக்கப்படுத்திக்  கொள்ள வேண்டும். அதைச் செய்ய தவறி விடுகிறோம். அதன் விளைவு, இருந்த இடத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறோம்... ஒரு முன்னேற்றமும் இல்லாமல்!  

வெற்றிக்குத் தடையாக இருக்கும்  பழக்கங்கள் இருவகைப்படும். புகைப்பிடிப்பது , போதைப் பொருளுக்கு அடிமையாவது, மது அருந்துவது போன்ற கெட்ட பழக்கங்கள் ஒருவகை; இன்னொருவகை சோம்பியிருப்பது, தாமதிப்பது, நேரத்தை விரயமாக்குவது போன்ற தவறான பழக்கங்கள். இரண்டையும் சரி செய்யலாம், அதற்கு தேவை வைராக்கியம்!  

"நல்ல பழக்கங்களை வழக்கமாக்குவது ஒரே நாளில் சாத்தியமில்லை. சிறுகச் சிறுக தவறுகளைத்  திருத்திக் கொண்டால் நிரந்தரமான பலன் கிடைக்கும்' என்கிறார் "அடாமிக் ஹாபிட்ஸ்' என்ற அதிக விற்பனையாகும் புத்தகத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் க்ளியர். காலையில் ஐந்து நிமிடம் முன் எழுவது, ஒரு பக்கமாவது படிப்பது போன்ற சிறு  மாற்றங்கள்! 

ஜேம்ஸ் க்ளியர் பள்ளிப் பருவத்தில் பேஸ்பால் விளையாடும்போது கோரமான முறையில் விபத்துக்குள்ளாகி சாவின் விளிம்பிலிருந்து மீண்டு படிப்படியாகத் தன்னை தயார்செய்து கொண்டு கல்லூரியில் படிப்பிலும் விளையாட்டிலும் பரிசுகள் பெற்று பல்கலைக்கழக பேஸ்பால் அணியில் இடம் பெற்று சாதனை படைத்தார். 

"தனது வெற்றிக்கு முக்கிய காரணம் நல்ல பழக்கங்களை வளர்த்து கொண்டு அதை வழுவாது கடைப்பிடித்ததுதான்' என்கிறார் ஜேம்ஸ் க்ளியர். பழக்க, வழக்கங்களே ஒருவர் வெற்றியாளரா அல்லது வெறும் பார்வையாளரா என்பதை நிர்ணயிக்கிறது.  சிலர் வெகு விரைவில் முன்னேறிவிடுகிறார்கள் என்று வியக்கிறோம்.  ஆனால் அந்த முன்னேற்றம் நிலைக்க வேண்டும் என்றால் வெற்றியை அருளிய நல்லொழுக்கங்களை தொடர வேண்டும்; இல்லாவிடில் வெற்றி வெளுத்துவிடும்! 

நல்ல பழக்கங்களை வளர்த்து கொள்ள ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அதே வேளையில் அதனை அடைய இடைவிடாத முயற்சி எடுக்க வேண்டும். இலக்கை அடைவதற்கான செயல்முறையைத் தெளிவாக, தொய்வின்றி நடைமுறைப்படுத்துவது அவசியம். 

புத்தாண்டில் பல சூளுரைகள் எடுக்கப்படும். "அதைச் சாதிக்க வேண்டும்; இதை முடிக்க வேண்டும் புது  வருடத்தில்' என்ற  தீர்மானங்கள்! ஆனால் புது வருடம் பிறந்து ஏழே நாட்களில் முப்பது சதவிகித மனிதர்கள் சூளுரையைக் கிடப்பில் போட்டு விடுகிறார்கள் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உதாரணமாக,   தவறாது காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ய  வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடிக்க, செயல்படுத்த, முதலில் முனைப்பாக முயற்சி செய்வார்கள். அதற்கான பலனை  உடனே எதிர்பார்ப்பார்கள். அடிக்கடி எடை குறைந்து விட்டதா என்று பார்த்து சோர்ந்து உடல் பயிற்சியைத் தொடர்ந்து செய்யாமல்  படிப்படியாக விட்டு விடுவார்கள்.    

காக்கை ஆற்றை கடக்க முயற்சித்ததாம். பாதி ஆறு கடந்தவுடன் அக்கரை தூரமாக உள்ளது என்று திரும்பி இக்கரைக்கு வந்துவிடுமாம். மொத்தத்தில் முழு ஆற்றைக் கடக்க வேண்டிய தூரத்தைப் பாதியில் கைவிட்டதால் எடுத்த முயற்சி விரயமாகிறது. இந்த காக்கை புத்தி பலரிடம் உள்ளது. நன்றாகத் தொடங்கியதை பாதியில் விட்டு விடுவார்கள். 

அன்றாடம் தேவையான வாகன சாவி,  அலமாரி சாவி போன்றவற்றை ஓரிடத்தில் வைப்பதில்லை. எப்போதும் தேடல் தான்!

"அவசரம்னா அருக்கஞ்சட்டியில்  கூட கை நுழையாது' என்பார்கள்! வேலை முடிந்தவுடன் அந்தந்தப் பொருட்களை அவற்றுக்கென  ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தால் பொழுது ஆனந்தமாக கழியும். சில அதிகாரிகள் கோப்புகளை முடிப்பதில் தாமதிப்பார்கள். அவைமூலையில் துவண்டு கேட்பாரற்று கிடக்கும் விமோசனம் இல்லாமல்!

புதிய பழக்கத்திற்கு முயற்சிகள் எடுப்பது சிறு சேமிப்பு போல, உடனே அது பெரிதாகத் தெரியாது. நாளடைவில் வட்டி முதலோடு சேர்ந்து பெருந்தொகை சேரும். அதற்கு அவகாசம் தேவை. தொடர்ந்து ஒரு பழக்கத்தை வழக்கமாக்கினால் நல்ல பழக்கம் நம்மோடு ஒன்றி விடும். நேரம் நம்மோடு உறவாடும். அதே வேளையில் கெட்ட பழக்கங்கள் மூலம் நேரம்  பலனின்றி நம்மை தட்டாமாலை சுற்ற வைத்து விடும்!

இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் முக்கியமாக, பிரான்ஸ் நாட்டில் இளைஞர்கள் வேகமாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் அதிகமாக  கலந்து கொள்வார்கள். ஒலிம்பிக்ஸ் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட பதக்கங்களை சைக்கிள் போட்டிகளில் மட்டும் வெல்ல வாய்ப்புள்ளது. இந்தப் போட்டிகளில் பின் தங்கியிருந்த இங்கிலாந்தை முன்னிலைக்குக் கொண்டு வர பயிற்சியாளர் டேவ் ப்ரேய்ல்ஸ்போர்ட் என்பவருக்கு  பொறுப்பு அளிக்கப்பட்டது. சர்வதேச விளையாட்டு வீரர்கள் எல்லாரும் உயர்ந்த நிலையை எட்டியவர்கள்.  கடைசி நேரத்தில் முழு சக்தியை எந்த வீரர்  வெளிப்படுத்துகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார். பதக்கம் வெல்வதற்கான வெற்றியை நிர்ணயிப்பது அதுவே.

பயிற்சியாளர்,  இங்கிலாந்து வீரர்களின் அன்றாட நடவடிக்கைகளைக்  கவனித்து ஒவ்வொன்றிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்தினார். காலையில் எழுந்ததும் என்ன செய்ய வேண்டும், எம்மாதிரியான உணவு, பயிற்சிக்கு முன் செய்ய வேண்டியவை, அவர்கள் தங்கும் அறையின் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கு நல்ல பழக்கங்களை விதிகளாக கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். மாற்றம் சிறிதானாலும்  ஒவ்வொருநாளும் தொடர்ந்து இரண்டு வருடம் நடைமுறைப்படுத்தியதில் வீரர்களிடம் அமிழ்ந்திருந்த சக்தி சரியான தருணத்தில் வெளிப்பட்டு 2008 - ஆம் ஆண்டு சீனாவில்  நடந்த ஒலிம்பிக்ஸ் சைக்கிள் போட்டி பிரிவில் 60% பதக்கங்களை இங்கிலாந்து பெற்று சாதனை படைத்தது. நல்ல பழக்கங்கள் மூலம் பெறக்கூடிய அமானுஷ்ய சக்திக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அமெரிக்க அலுமினியம் கம்பெனி "அல்கோவா'  பிரபலமான நிறுவனம். பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டது. நிறுவனத்தை அடுத்த உயர்விற்கு எடுத்து செல்ல பால் ஹென்ரி ஓ நீல் என்ற திறமையான தொழிலதிபர் நியமிக்கப்பட்டார். தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பாதுகாப்பை மேம்படுத்த நல்ல யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதுதான் அவர் பதவி ஏற்றதும் எல்லாருக்கும் அறிவுறுத்தியது. இது எல்லாருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. நிறுவனத்தின் லாபத்தை எவ்வாறு உயர்த்தலாம்; எந்த விதத்தில் விரிவாக்கம் செய்யலாம் என்பது பற்றி வழிகாட்டுதல் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பிற்கு மாறாக,  தொழில் பட்டறை பாதுகாப்பை முன்வைக்கிறாரே என்று பலர் வியந்தனர்; சிலர் எதிர்மறை விமர்சனம் செய்தனர். 

ஆனால் தொழிலாளர்கள் மத்தியில் ஓனீலின் அணுகுமுறை பெரும் வரவேற்பைப் பெற்றது.   தொழில் பட்டறைகளில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்கவும் தொழிலாளர்களுக்குப் பணியில் விபத்துகளை தவிர்க்கவும் தங்கள் கருத்துக்களை தொழிலாளர்கள்  தெரிவித்தனர். அது மட்டுமல்ல, உற்பத்தியை எவ்வாறு பெருக்கலாம் , பொருட்கள் வீணாவதைத் தவிர்த்தல், செலவினங்களைக் குறைத்தல் என்று பல உபயோகமான கருத்துகளைத் தெரிவித்தனர். களத்தில் அன்றாடம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றியும், அவற்றைச் சரி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எவை என்பது பற்றியும் மற்றவர்களைவிட தொழிலாளர்களுக்குத் தெளிவாகத் தெரியும். 

இத்தகைய கருத்துப் பரிமாற்றம் ஓனீல் விதைத்த நல்ல பழக்கத்திலிருந்து பிறந்தவை. இது "கீ  ஸ்டோன் ஹாபிட்ஸ்' என்று ஆளுமைத் திறனாக அழைக்கப்படுகிறது. ஒரு நல்ல பழக்கம், பல நல்ல பழக்கங்களுக்கு வழிவகை 
செய்வது கீ  ஸ்டோன் ஹாபிட்ஸ். 

அமெரிக்க அலுமினியம் நிறுவனம் பால் ஓ நீல் தலைமையில் அதிக லாபம் ஈட்டி சிறந்த கம்பெனி என்ற பெயர் எடுத்தது. பால் ஓ நீல் ஆளுமை பெற்ற தொழிலதிபராகப் போற்றப்பட்டார். அரசு நிர்வாகத்திலும் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. "நேர்மையானவர்கள் மதிக்கப்படுகிறார்கள்,  அவ்வளவே. ஆனால் உயர்வு பெறுவதில்லை' என்ற கூற்றை பொய்ப்பித்தார் ஓ நீல்!

தவறான புரிதல்கள் எவ்வாறு சமுதாயத்தில் வேரூன்றி  விடுகின்றன என்பதை விளக்க ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மூன்று குரங்குகள் ஒரு கூண்டில். அதில் ஓர் ஏணி உச்சியில் தொங்கவிடப்பட்ட வாழைப் பழக்குலை. 

ஏணியின் மேலே ஒரு சென்சார் மூலம் இயக்கப்படும்  தண்ணீர் தெளிப்பான். ஒரு குரங்கு ஏணி படி மேல் ஏறி வாழைப் பழத்தைப் பறிக்கும்போது சென்சார் செயலி செயல்படுத்தப்பட்டு தண்ணீர் குரங்கு மீது பீய்ச்சி அடிக்கும். குரங்கு கீழே இறங்கிவிடும். மற்ற இரண்டு குரங்குகளும் அதே வகையில் முயற்சி எடுக்கும். ஆனால் தண்ணீர் தெளிக்கப்பட்டு பின்வாங்கிவிடும். 

நாளடைவில் அவை முயற்சி செய்வதை விட்டு விடும். ஒன்றன் பின் ஒன்றாக பழைய குரங்கை வெளியில் எடுத்து புது குரங்கு கூண்டில் விடப்படும். சென்சார் நீக்கிவிடப்படும். 

புது குரங்கு வாழைப் பழத்தைப் பறிக்க எத்தனிக்கும். ஆனால் மற்ற இரண்டு பழைய குரங்குகள் தடுத்துவிடும் . சென்சார் இல்லை; தண்ணீர் தெளிப்பான் இல்லை. ஆனாலும் அவை இருப்பதாகவே நினைத்து குரங்குகள் முயற்சியைக் கைவிட்டு விடும். ஒரு நிலையில் எல்லாக் குரங்குகளும் கூண்டுக்குப் புதியவை. சென்சார் மூலம் தண்ணீர் அடிக்கப்படுவதைப் பார்த்ததில்லை. ஏணி இருக்கிறது. மேலே பழம் இருக்கிறது. ஆனால் வேரூன்றிப் போன பயம், முயற்சியைத் தடுக்கிறது. இப்படித்தான் ஒரு தவறான பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அது சமுதாயம் முழுக்கப் பரவி,  "முடியாது' என்பது நிலை நிறுத்தப்படுகிறது. "வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல், கழுத்து போயினும் கைக்கொள  வேண்டாம்' என்ற பாரதிதாசன் அறிவுரையை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா மிக வலிமையான நாடு.  ஜனநாயகம் உலக அளவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பல நாடுகளுக்கு உதவி அளித்து வருகிறது. அதன் விளைவாக பல எதிரிகள். தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்கள் உருவாகியுள்ளன. அந்த இயக்கங்கள் அமெரிக்க சொத்துகள், பயணிகள், பல நாடுகளில் உள்ள அமெரிக்க அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்படுவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதுவும் பயங்கரவாதிகள் கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து நடத்தும் திடீர் தாக்குதலை முறியடிக்க, நடைமுறையில் உள்ள வழக்கமான போர் வழிகளில் சேதாரம் தான் அதிகம். எதிர் தாக்குதல் நடத்த கொரில்லா போர் வழியில் செயல்படக் கூடிய அதி நவீன படைகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் உருவான நவீன படைகள் "மெரீன்ஸ்',  சீல் , முக்கிய நபர்கள் பாதுகாப்பு படை சீக்ரெட் சர்வீஸ் போன்ற அமைப்புகள், பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள தங்களைத் தயார்செய்து கொள்கிறார்கள்.

அந்த சாகச வீரர்களுக்கு முதலில் கற்பிக்கும் பழக்கம்,  அவர்கள் எழுந்தவுடன் படுக்கையை  மடித்து ஒழுங்காக வைப்பது! ஒரு நாளில் எதுவும் சாதிக்க முடியாவிட்டாலும் படுக்கையை ஒழுங்குபடுத்தி வைத்தது நிறைவான பணி என்று வீரர்களின் ஒவ்வொரு பழக்கத்தையும் செப்பனிட்டு, மெருகேற்றி, எதற்கும் அஞ்சாது எதிரிகளை வீழ்த்தும் திடகாத்திரத்தை பயிற்றுவிக்கிறார்கள். 

"மற்றவர்கள் அதிகம் செல்லாத பாதையில் பயணித்தேன்; சாதனை படைத்தேன்' என்ற கூற்றுக்கு நல்ல பழக்க வழக்கங்களே அடித்தளம். 

சென்ற வார கேள்விக்குப் பதில்: நூலக இயக்கத்தின் தந்தை சீர்காழி ராமாமிர்தம் ரங்கநாதன்   பிறந்த தினமான ஆகஸ்ட் 12, தேசிய நூலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்த வார கேள்வி; பால் ஓ நீல் தனியார் துறையிலிருந்து அரசு துறையில் எந்தப் பதவி வகித்தார்?

(விடை அடுத்த  வாரம்)

கட்டுரையாளர்:

மேனாள் காவல்துறைத் தலைவர்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com