நனவாக்குங்கள்... கனவை!

வாழ்க்கையை வாழ நினைக்கும், வாழ்க்கையில் வெற்றியை ருசிக்கத் துடிக்கும் ஒவ்வொரு வருக்குமானது கனவு. இரவு தூங்கும்போது வரக்கூடிய கனவல்ல இது. எதிர்காலத்தை நோக்கிய கனவு. 
நனவாக்குங்கள்... கனவை!


வாழ்க்கையை வாழ நினைக்கும், வாழ்க்கையில் வெற்றியை ருசிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்குமானது கனவு. இரவு தூங்கும்போது வரக்
கூடிய கனவல்ல இது. எதிர்காலத்தை நோக்கிய கனவு.

நீங்கள் விழித்திருக்கும் நேரத்தில் நிதானத்துடன் வரக்கூடியது. பகலில் காணும் கனவு பலிக்காது என்று கூறுவார்கள். ஆனால், இந்த இலட்சிய பகல் கனவு செயலாக்கம் பெறுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளில் மட்டுமே இருக்கிறது. 

கனவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலாக ஒரு நிகழ்வினால் பாதிக்கப்படும்போதோ தனிமையில் எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையில் இருக்கும்போதோ கனவு வரலாம். 

'நாம் இன்னவற்றை எல்லாம் செய்ய வேண்டும். இன்னவாக ஆக வேண்டும்' என்று ஒவ்வொருவரின் மனதில் தோன்றுவதே கனவு. அந்தக் கனவை நோக்கிய நீண்ட நெடிய பயணத்தில் நீங்கள் எப்படிச் செல்கிறீர்கள் என்பதில்தான் கனவின் வெற்றி அடங்கியிருக்கிறது. 

இப்போதைய சாதனையாளர்கள் அனைவருமே தங்கள் கனவுகளை நனவாக்க பல தடைகளைத் தாண்டி உழைத்திருக்கிறார்கள் என்பது இங்கு நினைவுபடுத்த வேண்டியது. உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே கனவை நனவாக்க முடியும். 

திட்டமிடல்:

உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும், நீங்கள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த கனவைத் தேடுங்கள். 

உங்கள் திறமையை அடிப்படையாக வைத்தும் கனவை நிர்ணயிக்கலாம். அதை செயல்படுத்தும் முதல்படி திட்டமிடல். 

உதாரணமாக நீங்கள் ஓர் எழுத்தாளராக விரும்பினால் எடுத்தவுடன் எழுத்தாளர் ஆகிவிட முடியாது அல்லவா? புத்தகங்கள் படித்தல், எழுதுதல், சமூகக் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல், அறிஞர்களின் பேச்சைக் கேட்டல் என அதுதொடர்பான அடிப்படைச் செயல்களில் முதலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள  வேண்டும். 

புதிய பயிற்சி எதையாவது கற்றுக் கொள்ள விரும்பினால் சிறந்த பயிற்சி நிறுவனத்தைத் தேர்வு செய்து அதுகுறித்த அடிப்படை அறிவையும் தெரிந்து கொண்டு சேர வேண்டும். தினமும் எவ்வளவு நேரம் இதற்காக உழைக்க வேண்டும்; எவ்வளவு நாள்களில் முடிக்க வேண்டும்; பயிற்சி முடித்தபின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்ட
மிட்டுக்கொள்ள வேண்டும். 

தன்னம்பிக்கை: 

'நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்பது பொன்மொழி. நீங்கள் எதிர்பாராத அளவை விட அதிக  வலிமை எண்ணங்களுக்கு உண்டு. உங்களால் முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லை எனில் உங்களை ஒரு சாதனையாளனாக மற்றவர்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்? இந்த கனவை நனவாக்கி விடுவேன் என்ற தன்னம்பிக்கை விதையை உங்கள் மனதில் விதைத்து அதை மரமாக வளரச் செய்யுங்கள். 

கடின உழைப்பு: 

வெற்றிக் கனியை அனைவரும் எளிதில் ருசித்து விடுவதில்லை. தடைகளை எல்லாம் கடந்து செல்ல வேண்டும். மனதில் உறுதி இருந்தால் எத்தகைய தடை
களையும் தகர்த்துவிடலாம். 

மன உறுதியுடன் கடின உழைப்பு கொடுத்தாலும் தோல்வி கிடைத்தால் துவண்டுவிடுவது நல்ல பண்பல்ல. ஒரு நிமிடம் தோல்விக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, மீண்டும் வேலையைத் தொடங்க வேண்டும். கனவு நனவாகும்வரை எத்தனை தோல்வி வந்தாலும் கடின உழைப்பு தொடர வேண்டும். 

தியாகம் செய்யுங்கள்!

வாழ்க்கை அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்லவேண்டுமெனில் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். இதுவரை நண்பர்களுடன் அரட்டை அடித்தல், சமூக ஊடகங்களில் மூழ்கியிருத்தல்,  தேவையில்லாமல் ஊர்சுற்றுதல்   என்று நீங்கள் இருந்திருக்கலாம். ஆனால், கனவை நனவாக்க முயற்சி எடுத்துவிட்டால், அதற்கு நேரம் செலவழித்து உங்களுக்கான நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு கனவை நனவாக்க நேரத்தை ஒதுக்குகிறீர்களோ அந்த அளவுக்கு விரைவில் வெற்றி கிட்டும். 

பிடித்தவற்றைச் செய்யுங்கள்: 

கனவுக்கு நேரம் காலமெல்லாம் தெரியாது. ஏதேனும் ஒரு சூழ்நிலையில் மனதில் ஒரு சிறுபொறி பற்றிவிடும். அவ்வளவு தான். அந்தவகையில், சிலருக்கு பிடித்தது வேறாகவும், கனவு வேறாகவும் இருக்கலாம். இரண்டையும் ஒன்றாக்கிவிடுங்கள். 

உதாரணமாக நீங்கள் மருத்துவராக இருந்து ஐஏஎஸ் ஆக விரும்பலாம். அப்படி இருப்பின் மருத்துவர் தொழிலை விட்டுவிட்டு ஐஏஎஸ் கனவை நோக்கிச் செல்வதில் தவறில்லை. இந்த முடிவு உங்களை மட்டுமே சார்ந்தது. விருப்பம் இருக்கும் ஒன்றில் மட்டுமே, ஈடுபாடு இருக்கும். ஈடுபாடு இருந்தால் மட்டுமே நேரம், காலமின்றி அதற்கான உழைப்பை உங்களால் வழங்க முடியும். 

தோல்வி பயம் வேண்டாம்:

ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது பயம், பதற்றம், சந்தேகம், தோல்வி பயம் எல்லாம் வரலாம்; வரும். ஆனால், யோசித்துக்கொண்டு மட்டும் இருந்தால் எந்த சாதனையும் உங்களை அண்டாது. சுயமாக முடிவெடுத்து நீங்கள் தோல்வியைத் தழுவினால் கூட அது உங்களின் வாழ்க்கையில் சிறந்த அனுபவமாக இருக்கும். 

நேர்மறை, எதிர்மறை கலந்ததே வாழ்க்கை. அதில் கிடைக்கும் அனுபவமே மனிதனை பக்குவமடையச் செய்கின்றன. தோல்வியின் அனுபவங்கள் இன்றி வெற்றி கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் தோல்வியின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களே வெற்றிக்கு வித்திடுகின்றன. வாழ்க்கைப் பாடங்களைப் படிக்கவும் தோல்வி வேண்டும். அதே நேரத்தில் முதல் தோல்வியில் ஏற்பட்ட தவறை உடனடியாகத்  திருத்திக் கொள்ளவும் வேண்டும். அதே தவறை திரும்பச் செய்யக்கூடாது. 

வாய்ப்புகளை உருவாக்குங்கள்!

உலகம் முழுவதும் பல வாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. வாய்ப்புகள் வரும்போது கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அதுவாக வரும் என்று காத்திருக்காமல், அதனை உருவாக்கிக் கொள்ள வேண்டும். வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தாததால் கனவுகள் உருவாகாமல் போய்விடுகின்றன. கனவை உருவாக்கிய பிறகு வாய்ப்புகளைத் தேடினால் கண்டிப்பாகக் கிடைக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com