அச்சம் தவிர்ப்போம்... ஆர்வம் பெருக்குவோம்!

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமில்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
அச்சம் தவிர்ப்போம்... ஆர்வம் பெருக்குவோம்!

என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமில்லை. என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

அச்சம், ஆர்வம், இயற்கை  இதில் எது ஒருவரை இயக்குகிறதோ, அந்த வீச்சின் அடிப்படையிலேயே ஒருவர் வெற்றியாளராக ஆவதும், வெற்றியாளராக மாறி பலருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்வதும் அமைகிறது. இங்கு இயற்கை என்பதை இறையருள் என்றோ, பிரபஞ்ச ஆற்றல் அல்லது சக்தி என்றோ, உள்ளுணர்வு என்றோ அவரவருக்கான அனுபவம் மற்றும் தேவையின் அடிப்படையில் இதை புரிந்து கொள்ளலாம். 

நான் அரிதிலும் அரிதாக சந்திக்கின்ற ஐயா சதுரகிரி வைரவஞாயிறு சித்தர், ""பலரை, பல்லுயிர்களைத் தன் வாழ்க்கையோடு இணைந்து வாழ்விப்பவர் எவரோ, அவர்கள் வேண்டுமானால் அவர்தம் வாழ்க்கை ஓரளவு அறிவானதென்று சொல்லிக் கொள்ளலாம். மற்றவர்கள் உலகியல் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்திருந்தாலும், அவர்களை அறிவாளிகளாகக் கருத முடியாது'' என்பார்கள். அப்படியென்றால் மானுட சமூகத்திற்காகவும், இந்த உலகத்திற்காகவும் வாழ்ந்தவர்கள் மட்டுமே அறிவாளிகள். 

அப்படி வாழ்ந்து மறைந்த, வாழுகின்ற தனி மனிதர்கள், தேசிய உலகளாவிய தலைவர்கள், விஞ்ஞானிகள் என அனைவரையும் இயக்கியது, இயக்குவது ஆர்வமும், அவர்களது உள்ளுணர்வை பொதுவான விசயங்களுக்காக ஆக்கத்தோடும், ஊக்கத்தோடும் செயல்படுத்த உதவிய இயற்கையும்தான். இப்படிப்பட்டவர்கள் இயற்கையினிடத்துத் தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்கள்.

"வாழ வேண்டும். அதோடு, முடிந்தால் மற்ற சில உயிர்களையும் வாழ்விக்க வேண்டும்'  இந்த இலக்குகளை நோக்கிய வாழ்க்கைமுறை, பயணம் ஒருவரை அச்சத்தோடு இயங்கச் செய்கிறது என்றால், அவர் அவசரக்காரராக, ஆத்திரப்படுபவராக, குற்றம் செய்பவராகவும் இருக்கிறார். அவரிடமிருந்து மிருக இயல்புகள் வெளிப்படுகின்றன. அதேநேரம், ஒருவரை இயக்குவது ஆர்வம் என்றால் அங்கு ஆற்றல் பெருகுகிறது. காரியங்கள் நிதானமாகக் கைகூடுகின்றன. அப்படிப்பட்டவர்கள் இருக்கிற, இயங்குகிற இடம் ஓர் அமைதியாக இருக்கிறது. 

ஆர்வத்திற்கும் ஆர்வக் கோளாறுக்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்வக்கோளாறினால் ஒரு செயல் அவசரக்குடுக்கையின் செயலாக மாறி, அச்சத்தோடு செயல்படுவதால் என்னென்ன பாதிப்புகள் வருமோ அத்தனை விளைவுகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும். 

கரோனா முதல் அலையின் போது, மக்களிடையே பெருந்தொற்று பீதி உச்சத்திலிருந்த நேரமது. எனக்கு மிகவும் அறிமுகமான ஒருவரது குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவமிது. கணவன், மனைவி இருவரும் மத்திய அரசுப்பணியில் இருப்பவர்கள். அவர்களுடையே ஒரே பெண் குழந்தையை மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு வளர்த்து வந்தனர். 

ஒருநாள் அந்த குடும்பத்தின் தலைவி,  பூட்டியிருந்த அவர்களது வீட்டின் உள்புறமிருந்து அவர்கள் வாசலில் இருக்கும் "சுவிட்ச் போர்டு' மீது ஒரு வாலி தண்ணீரை எடுத்து வேகமாக வீசுகிறார். "படார்' என்று ஏதோ வெடிக்கும் சத்தத்தோடு... அங்காங்கே தீப்பொறிகள் பறக்க, வீட்டின் அனைத்து மின் இணைப்பும் துண்டிக்கப்படுகிறது.  வீட்டின் உள்ளே சற்று அயர்ந்து படுத்திருந்த அவளது கணவன், சத்தம் கேட்டுப் பதறி, அலறியடித்து ஓடிவர, ஆடைகள் எல்லாம் நனைந்துபோய் திகைத்து நிற்கிறார்கள் அவரது மனைவியும் குழந்தையும். 

 நடந்தது இதுதான். அவர்கள் பகுதியின் கூர்க்கா, மாதாந்திர சந்தா வாங்க அப்பகுதியில் உள்ள அனைத்து வீட்டிற்கும் சென்றதுபோல, இவர்களது வீட்டிற்கும் வருகிறார். பூட்டியிருக்கும் வீட்டின் உள்ளே இருப்பவர்களை அழைக்க "காலிங் பெல்'லை அழுத்துகிறார். முகக்கவசம் சானிடைசர் சகிதமாக சந்தா கைமாறுகிறது. கூர்க்கா சென்ற பின் குடும்பத்தலைவிக்கு பீதி தொற்றிக் கொள்கிறது. "பல வீடுகளுக்கு சென்றுவந்த கூர்க்கா, இங்கு... நம் வீட்டிற்கு வந்து "காலிங்பெல்'லை தொட்டுவிட்டாரே! தொற்று இங்கிருந்து பரவிடுமோ!' என்று குழப்பம் வந்த மறுநிமிடம், "எடு வாளியை. அள்ளு தண்ணியை. அடிச்சு ஊத்து. கூர்க்கா கை வைத்த  காலிங்பெல் மீது'  என்று முடிந்த ஆர்வக்கோளாறில் நிகழவிருந்த பெரும் விபத்து எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கான காரணத்தை இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லை. 

இப்பொழுது சொல்வோம், இந்த குடும்பத் தலைவியின் இந்த செயலுக்குப் பின்னால் இருந்தது அச்சமா, ஆர்வமா அல்லது ஆர்வக்கோளாறா என்றால்... இது அச்சம்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தாங்கள் படித்தவர்கள், அறிவானவர்கள், அதனால் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வோடு செயல்படுவதாக கருதி தங்களது அச்சத்தை மறைத்து வைத்துக் கொண்டு செயலாற்றிய ஆர்வக்கோளாறிது. 

""நம் துன்பங்களுக்கெல்லாம் பெரும் காரணம்
அச்சம் ஒன்றே'' என்கிறார் விவேகானந்தர். 

அச்சமும் மரணமும் ஒன்று. இவ்வேளையில் வள்ளுவரின் "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை'  என்கிற கருத்தையும் நினைவில் வைப்பது நல்லது. 

ஆப்பிரிக்க பழங்குடியினரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே "உபுந்து' என்கிற வார்த்தை மிகப் பிரபலம். இவ்வார்த்தை அம்மக்களின் வாழ்வியலுக்கான தாரக மந்திரம். இதன் அர்த்தம்:

"நான் வாழ்கிறேன்... ஏனென்றால், நாம் வாழ்கிறோம்', என்பதுதான். "மற்ற அனைவரும் துயருற்று இருக்க, நாம் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருந்துவிட முடியும்?'  என்கிற கேள்வியையும் உள்ளடக்கியது இவ்வார்த்தை. 

பிழைத்து மட்டும் கிடக்கும் ஒருவரை அச்சம் இயக்குகிறது. இது "செத்து  செத்து பிழைக்கின்றான்' என்பார்களே அந்த வகை. வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை ஆர்வம் இயக்குகிறது. தானும் வாழ்வாங்கு வாழ்வு  வாழ்ந்து, பிறரையும் வாழ்விக்கும் ஒருவரை ஆர்வமும் இயற்கையும் சேர்ந்தே இயக்குகிறது. 

எனவே, அச்சம் தவிர்ப்போம். ஆர்வம் பெருக்குவோம். இயற்கையை துணைகொள்வோம். ஆயிரம் பூக்கள் மலரட்டும். இந்த வையகம் வாழட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com