மழைக்காலத்தில் கரோனா!

உலகில் கரோனா தொற்று பரவத் தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், தற்போது மழைக்காலமும் தொடங்கியுள்ளது.
மழைக்காலத்தில் கரோனா!


உலகில் கரோனா தொற்று பரவத் தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

கரோனா தொற்று பரவல் குறையாத நிலையில், தற்போது மழைக்காலமும் தொடங்கியுள்ளது. சாதாரணமாகவே மழைக்காலத்தில் பலருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். கரோனா தொற்றிலும் இத்தகைய அறிகுறிகள் இருப்பதால்,  நமக்கு ஏற்பட்டிருக்கும் சளி, காய்ச்சல், இருமல் ஆகியவை கரோனாவாலா? அல்லது மழையாலா? என்ற அச்சம் ஏற்படும். 

அதிலும் மழைக்காலத்தில் பரவும் நோய்களால் குழந்தைகளும் இளம் வயதினருமே அதிகமாக பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இக்காலகட்டத்தில் இளைஞர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். 

முதலில் மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்குமா என்பதில் பலருக்கு சந்தேகம் நிலவுகிறது. மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால், கரோனா தீநுண்மி அவ்வளவு எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆனால், காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழல், கரோனா தொற்று பரவலை அதிகப்படுத்தும் என வேறு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மாறுபட்ட ஆய்வு முடிவுகள் நமக்கு மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. 

ஆனால், மழைக்காலத்தில் சளி,  இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்படும். மழைக்காலத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்குமா, குறையுமா என்று கவலைப்படாமல், கரோனா தொற்றுக்கும், மழைக்காலத்துக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். 

மழைக்காலத்தில் தண்ணீர் அதிகமாகத் தேங்கும் இடங்களில் கொசுக்கள் அதிகமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். கொசுக்கள் அதிகரிப்பானது டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களை அதிக அளவில் பரப்பும். எனவே, முடிந்த அளவு இரவில் தூங்கும்போது கொசு வலைகளைப் பயன்படுத்துவது நல்லது. 

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, மழைக்காலத்திலும் மக்கள் முகக் கவசத்தைத் தவறாமல் அணிய வேண்டும். வீட்டை விட்டோ, கல்லூரிக்கோ, பள்ளிக்கோ, அலுவலகத்துக்கோ செல்லும்போது கூடுதல் முகக் கவசங்களை வைத்திருத்தல் அவசியம். நீங்கள் அணிந்திருக்கும் முகக் கவசம், மழையில் நனைந்துவிட்டால், அதை அகற்றிவிட வேண்டும். நனைந்த முகக் கவசம் எந்தவிதத்திலும் நமக்கு உதவாது. எனவே, உலர்ந்த முகக் கவசத்தையே அணிய வேண்டும். 

அத்தியாவசியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

மழைக்காலத்தில் மற்ற நோய்களின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதன் வாயிலாக கரோனா தொற்றும் பரவக் கூடும். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தயக்கத்தை விடுத்து கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

மூக்கு, வாய், கண் உள்ளிட்ட பாகங்களைக் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அவசரகாலத்தில் கைக்குட்டையைப் பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் கூட்டமான இடங்களுக்குச் செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். காலநிலை மாறுபாட்டால் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com